உள்துறை அமைச்சகம் ஏன் மூன்று வடகிழக்கு மாநிலங்களில் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது? -விஜேதா சிங்

 பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சி நெறிமுறை (protected area regime) என்றால் என்ன? வெளிநாட்டினர் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) ஆணை, 1958 என்ன கூறுகிறது? மணிப்பூர் இனக்கலவரம் இயக்கம் மற்றும் நடமாட்டம் மீதான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்ததா?

 

டிசம்பர் 17 அன்று, ஒன்றிய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சி முறையை மீண்டும் அமல்படுத்தியது. வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் இப்போது அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதிகளை (Protected Area Permits (PAP)) பெற வேண்டும். வெளிநாட்டினர் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) ஆணை (Foreigners (Protected Areas) Order), 1958ன் கீழான தளர்வு உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





1958 ஆணை எதைக் குறிக்கிறது?


1958ஆம் ஆண்டு உத்தரவுப்படி, எந்த ஒரு வெளிநாட்டவரும் எந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியிலும் அனுமதி இல்லாமல் நுழையவோ அல்லது தங்கவோ முடியாது என்று கூறப்பட்டது. இந்த அனுமதி ஒன்றிய அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசு அலுவலகத்தால் வழங்கப்படுகிறது. அனுமதிச்சீட்டில் நுழையும் இடம், வசிக்கும் இடம் மற்றும் தங்கியிருக்கும் காலம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள் எல்லைக்கும் சர்வதேச எல்லைக்கும் இடைப்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றின் முழுப் பகுதிகளும் இதில் அடங்கும். 1963ஆம் ஆண்டில், மற்றொரு ஆணை, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் சிக்கிமின் சில பகுதிகளை "தடைசெய்யப்பட்ட பகுதிகளாக" (‘restricted areas’) அறிவித்தது. 


உத்தரவு முதலில் எப்போது தளர்த்தப்பட்டது? 


டிசம்பர் 30, 2010 அன்று மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய முழு மாநிலங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சிமுறை தளர்த்தப்பட்டது. மேம்பட்ட பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலில் ஒரு வருடத்திற்கு தளர்வு அளிக்கப்பட்டது. பின்னர், அது 2022 வரை 1-2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2022ல், தளர்வு மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது டிசம்பர் 31, 2027 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், டிசம்பர் 17 அன்று, இந்த மாநிலங்களுக்கு தளர்வு திரும்பப் பெறப்பட்டது.

 

அது ஏன் திரும்பப் பெறப்பட்டது? 


தி இந்து நாளிதழுக்கு கிடைத்த சுற்றறிக்கையின் நகலில், “இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகள் காரணமாக அமைச்சகம் இந்த விசயத்தை ஆய்வு செய்ததாகக் கூறியது. பழங்குடியினரான குகி-சோ (Kuki-Zo) மற்றும் மெய்டேய் (Meitei) மக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக மியான்மரின் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர், மே 3, 2023 முதல் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைக்கு "வெளியாட்கள் மற்றும் வெளிநாட்டு கைகள்" காரணம் என்று முதல்வர் என். பிரேன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 


பிப்ரவரி 2021இல் மியான்மரில் நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு, பல ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் (influx) இந்தியாவுக்குள் நுழைந்தனர். 40,000க்கும் மேற்பட்ட அகதிகள் மிசோரமில் தஞ்சம் புகுந்தனர். சுமார், 4,000 அகதிகள் மணிப்பூருக்குள் நுழைந்தனர். குடியேறியவர்கள் குகி-சின்-சோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மிசோரம் மற்றும் மணிப்பூரில் உள்ள சமூகங்களுடன் இன உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தியா மியான்மருடன் 1,643 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லை அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்கள் வழியாக செல்கிறது. சுதந்திர இயக்க ஆட்சிமுறை (Free Movement Regime (FMR)) எல்லையில் இருந்து 16 கி.மீ.க்குள் வாழும் மக்கள் இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திரமாக நடமாட அனுமதித்தது. இருப்பினும், உள்துறை அமைச்சகம் (MHA) ஜனவரி மாதம் சுதந்திர இயக்க ஆட்சி முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

 

பாதுகாக்கப்பட்ட பகுதி ஆட்சி முறையை (protected area regime (PAP)) எவ்வாறு பெறுவது? 


இந்திய தூதரகங்கள், உள்துறை அமைச்சகம், மாவட்ட நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் குடியுரிமை ஆணையர்கள், உள்துறை ஆணையர்கள் அல்லது வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (Foreigners Regional Registration Office (FRRO)) ஆகியவற்றிலிருந்து அனுமதி பெறலாம். 


முன்பு போலவே, ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் மற்றும் மூன்று நாடுகளில் வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவைப்படும். மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து வெளிநாட்டவர்களும் அவர்கள் வருகை தந்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் வருகை தரும் மாநிலம் அல்லது மாவட்டத்தின் வெளிநாட்டினர் பதிவு அதிகாரியிடம் (Foreigners Registration Officer (FRO)) பதிவு செய்ய வேண்டும். இந்த மாநிலங்களுக்குச் செல்லும் மியான்மர் நாட்டவர்கள், மின்-சுற்றுலா நுழைவுச் சீட்டு  அல்லது வேறு ஏதேனும் விசாவை வைத்திருந்தால், பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி (Protected Area Permit) தேவைப்படுவதிலிருந்து முன்பு விலக்கு அளிக்கப்பட்டது. இப்போது, ​​அவர்கள் வந்த 24 மணி நேரத்திற்குள் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (Foreigners Regional Registration Office (FRRO)) பதிவு செய்ய வேண்டும்.




Original article:

Share: