நல்லாட்சி தினம் (Good Governance Day) - ரோஷினி யாதவ்

 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாட்சி தினத்தை நாடு கொண்டாடும் நிலையில், இந்த நாளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே குறிப்பிட்டுள்ளது. மேலும், நல்லாட்சி குறியீடு (Good Governance Index) மற்றும் பிரகதி (PRAGATI) பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி நல்லாட்சி தினமாகக் (Good Governance Day) கொண்டாடப்படுகிறது. அரசு ஊழியர்களிடையே "நல்லாட்சி" நடைமுறையை ஊக்குவிக்கும் அதே வேளையில், அரசாங்கத்தின் பொறுப்புத் தன்மை மற்றும் திறமையான நிர்வாகம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


முக்கிய அம்சங்கள் : 

1. 2014-ம் ஆண்டில், ஒன்றிய அரசு டிசம்பர் 25 ஐ "நல்லாட்சி தினமாக" கொண்டாடுவதாக அறிவித்தது. இந்த நாள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளாகும். 

2. பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நல்லாட்சி குறியீட்டு அறிக்கையின்படி, "நல்லாட்சி என்பது முடிவெடுப்பதற்கான ஒரு பயனுள்ள மற்றும் திறமையான செயல்முறை மற்றும் குடிமக்களின் மேம்பாட்டை முதன்மையான முன்னுரிமையாக வைத்து முடிவுகள் செயல்படுத்தப்படும் (அல்லது செயல்படுத்தப்படாத) செயல்முறை என்று குறிப்பிடப்படலாம். வள ஒதுக்கீடு, முறையான நிறுவனங்களை உருவாக்குதல், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைத்தல் போன்றவை இந்த இலக்கை அடைவதற்கான ஒரு பகுதியாகும். 

நல்லாட்சி வாரம் (Good Governance Week)


          நல்லாட்சி வாரம் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 24, 2024 வரை அனுசரிக்கப்பட்டது. இந்த வாரத்தில், "பிரஷாசன் கோன் கி ஓரே" (Prashasan Gaon Ki Ore) என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்த பிரச்சாரம் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்தியாவின் அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சேவை வழங்கலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.


அடல் பிகாரி வாஜ்பாய் 

1. அடல் பிஹாரி வாஜ்பாய் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி, தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார். அவர் ஒரு கவிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். வாஜ்பாய் அவர்கள் 1939-ம் ஆண்டில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) சேர்ந்தார். பின்னர் 1947-ம் ஆண்டில், அவர் ஒரு பிரச்சாரப் (முழுநேர ஊழியர்) பணியில் சேர்ந்தார். எழுத்துத் திறமையால், சங் பரிவாரத்தின் தலைவரான (head of the Sangh Parivar) தீன் தயாள் உபாத்யாயாவுடன் இணைந்து பல்வேறு வெளியீடுகளில் பணியாற்றினார்.

2. 1968-ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) புதிய அரசியல் கட்சியான ஜனசங்கத்தின் தேசியத் தலைவரானார். 1975-ம் ஆண்டில் மொரார்ஜியின் அவசரநிலை அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக தனது முதல் பெரிய தேசிய பதவியை வகித்தார். அந்த அரசாங்கம் விரைவில் (1977 இல்) வீழ்ச்சியடைந்தாலும், வாஜ்பாய் தனது பதவிக்காலத்திற்காக பெரும் பாராட்டுக்களைப் பெற்றார். ஐ.நா பொதுச் சபையில் அவர் இந்தியில் ஆற்றிய உரை அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. 

3. அவர் முதன்முதலில் 1996-ம் ஆண்டில் (16 நாட்கள்) பிரதமரானாலும், அவரது 1998-1999 மற்றும் 1999-2004 பதவிக்காலங்கள் நாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின. 

4. அவரது பதவிக்காலத்தில், மேற்கத்திய நாடுகளின் குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்தியா முறையாக அணுசக்தி துறையில்  மிகமுக்கிய சக்தியாக மாறியது. இது, பாகிஸ்தானுடன் போரையும் அமைதியையும் திறம்பட எதிர்கொண்டது, சர்வ சிக்ஷய அபியான் (Sarva Shikshya Abhiyaan) மற்றும் பிரதமர் கிராமின் சதக் யோஜனா (PM Gramin Sadak Yojana) உள்ளிட்ட பெரியளவிலான பொது நலத் திட்டங்களை மேற்கொண்டது. மேலும், வெளிநாட்டு முதலீடு மற்றும் சர்வதேச உறவுகளின் புதிய காலகட்டத்தை உருவாக்கியது, குறிப்பாக அமெரிக்காவுடன். 

5. 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி புதிய "நல்லாட்சி தினத்தை" அறிவித்தபோது, இரண்டு முக்கிய காரணங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. முதலாவதாக அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கையை நினைவுகூருவது ஆகும். 

6. இரண்டாவதாக, அரசாங்க சேவைகள் மற்றும் மக்களிடையே பொறுப்புணர்வு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக இந்த நாளைப் பயன்படுத்துவதும், அரசு ஊழியர்களுக்கு "நல்லாட்சியை" ஒரு வழக்கமான  நிர்வாகமாகவும் வளர்ப்பதுமாகும். நாட்டின் குடியிருப்பாளர்கள் அரசாங்கத்தால் நியாயமாக நடத்தப்படுவதையும், அவர்கள் பல்வேறு அரசாங்க சேவைகளின் நன்மைகளைப் பெறுவதையும் உறுதி செய்வதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 


நல்லாட்சி குறியீடு (Good Governance Index) மற்றும் பிரகதி (PRAGATI)

நல்லாட்சி குறியீடு (Good Governance Index)

1. 2019-ம் ஆண்டில், அரசாங்கம் நல்லாட்சி குறியீட்டை (Good Governance Index(GGI)) அறிமுகப்படுத்தியது. GGI என்பது நல்லாட்சியின் பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக தயாரிக்கப்பட்ட கருவியாகும். இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தவொரு மாநிலத்தின் நிலையையும் மதிப்பிடுகிறது மற்றும் எதிர்கால வளர்ச்சியை கட்டமைக்க உதவுகிறது. 

2. நல்லாட்சி குறியீடு (GGI) என்பது ஆளுகையின் நிலை மற்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல்வேறு தலையீடுகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஒரு சீரான கருவியாகும். 

உலகளாவிய ஆளுகை குறிகாட்டிகள் (Worldwide Governance Indicators)

      உலக வங்கியின் உலகளாவிய ஆளுகை குறிகாட்டிகள் 215 நாடுகள் மற்றும் பிரதேசங்களை வரிசைப்படுத்துகின்றன. இந்தத் தரவரிசையானது ஆளுகையின் ஆறு பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த பரிமாணங்கள்: 'குரல் மற்றும் பொறுப்புத் தன்மை,' 'அரசியல் நிலைத்தன்மை மற்றும் வன்முறை இல்லாமை,' 'அரசாங்கத்தின் செயல்திறன்,' 'ஒழுங்குமுறை தரம்,' 'சட்ட விதி,' மற்றும் 'ஊழல் கட்டுப்பாடு' போன்ற பரிமாணங்களைக் கொண்டது.

3. இந்தக் குறியீட்டின் முறையின்படி, வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், வர்த்தகம் மற்றும் தொழில்கள், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலன் மற்றும் மேம்பாடு, நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுமை ஆகிய 10 துறைகளில் மாநிலங்களின் செயல்திறன் தொடர்பாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 

பிரகதி (PRAGATI)


1. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Saïd வணிகப் பள்ளி (Saïd Business School), கேட்ஸ் அறக்கட்டளையுடன் (Gates Foundation) இணைந்து நடத்திய ஆய்வில், பாரம்பரிய உள்கட்டமைப்பு சவால்களை சமாளிக்க டிஜிட்டல் நிர்வாகம் எவ்வாறு நாடுகளுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது. டிஜிட்டல் ஆளுகையானது மிக உயர்ந்த அரசியல் தலைமையால் வழிநடத்தப்படும் போது இது சாத்தியமாகும்.

 

2. பிரகதி (Pro-Active Governance and timely implimentation(PRAGATI)) 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது தலைமைத்துவம், வீடியோ கான்பரன்சிங், ஆளில்லா விமானங்களின் ஊட்டங்கள் மற்றும் தரவு மேலாண்மை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இந்த கலவையானது முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்பார்வையிட உதவுகிறது.

 

3. பிரகதி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக தாமதமாகி வந்த திட்டங்களை முடிக்க உதவியது. இதில் மகாராஷ்டிராவில் உள்ள 8 தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் பாலம் (இப்போது உலகின் மிக உயரமான ரயில் பாலம்) மற்றும் அசாமில் உள்ள போகிபீல் பாலம் (Bogibeel Bridge) ஆகியவை அடங்கும். 10  ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிக் கிடந்த போகிபீல் பாலம், பிரகதியின் மதிப்பாய்வுக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டது.




Original article:

Share: