முதல் நாளில் 80-க்கும் மேற்பட்ட ஆணைகளில் கையெழுத்திட்ட டிரம்ப்: செயலாக்க ஆணை (Executive Order) என்றால் என்ன? -அனகா ஜெயக்குமார்

 திங்களன்று தனது செயலாக்க ஆணைகளின் மூலம், டிரம்ப் மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தார் மற்றும் பிறப்புரிமை குடியுரிமையை (birthright citizenship) நிறுத்தினார். அத்தகைய ஆணைகள் எவ்வாறு சரியாக வேலை செய்கின்றன?


ஜனவரி 20 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார். அவர் தொடர்ச்சியான செயலாக்க உத்தரவுகளை (executive orders) வெளியிட்டார் மற்றும் முந்தைய நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை ரத்து செய்தார்.


உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்குள், அவர் 80 செயலாக்க ஆணைகளில் கையெழுத்திட்டார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தல், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்பிலிருந்து (World Health Organization (WHO)) விலகுதல் மற்றும் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை இதில் அடங்கும்.


அத்தகைய ஆணைகள் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்த உதவுகின்றன? அவற்றை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா? என்பதைக் கீழே  குறிப்பிட்டுள்ளன.


செயலாக்க ஆணைகள் (executive order) என்றால் என்ன?


அமெரிக்க வழக்கறிஞர் சங்கம் (American Bar Association) ஒரு செயலாக்க உத்தரவை "கூட்டாட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அமெரிக்க அதிபரின் கையொப்பமிடப்பட்ட, எழுதப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட ஆணைகள்" என்று வரையறுக்கிறது.


அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு II -ன் கீழ் அத்தகைய ஆணைகளை பிறப்பிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. மேலும், பிரிவு II குறிப்பிடுவதாவது, "செயலாக்க அதிகாரம் அமெரிக்காவின் அதிபரிடம் இருக்கும்." இந்தப் பிரிவு அதிபர்  பதவியையும் மற்றும் அவரது அதிகாரங்களை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அதிகாரங்களில் இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பது, மன்னிப்பு வழங்குதல் மற்றும் தண்டனைகளை குறைத்தல் ஆகியவை அடங்கும்.


செயலாக்க ஆணைகள் (Executive orders) எளிதான குறிப்புக்காக வரிசையில் எண்ணிடப்பட்டுள்ளன. அவை கூட்டாட்சி அரசாங்கத்தின் தினசரி இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்படுகின்றன. கூட்டாட்சி பதிவேட்டில் கூட்டாட்சி விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்த பதிவேட்டில் அதிபரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் மற்றும் செயலாக்க ஆணைககளும் உள்ளன. அறிவிப்புகள் விடுமுறை நாட்கள், நினைவுச் சின்னங்கள், கூட்டாட்சி அனுசரிப்புகள் மற்றும் வர்த்தகம் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. செயலாக்க உத்தரவுகள் கூட்டாட்சி அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலாக்க விஷயங்களைக் குறிப்பிடுகின்றன.


செயலாக்க ஆணைகள் மற்றும் பிரகடனங்கள் இரண்டும் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. அவை, கூட்டாட்சி நிறுவனங்களால் வழங்கப்பட்ட விதிமுறைகளைப் போன்றவை ஆகும்.


செயலாக்க ஆணையின் (executive order) தாக்கம் என்ன?


ஒரு செயலாக்க உத்தரவு உடனடியாக அல்லது சில மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரலாம். இது செயல்படுத்துவதற்கு ஒரு கூட்டாட்சி நிறுவனத்தின் உதவி தேவையா என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, 2022-ம் ஆண்டில், கருக்கலைப்பை அணுகுவதற்கான பாதுகாப்புகளை அமைக்குமாறு ஜோபைடன் சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாத்த ரோ vs வேட் (Roe vs Wade) என்ற வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்த பிறகு இது நடைமுறைக்கு வந்தது. அடுத்த சில மாதங்களில், இதை ஆதரிக்க முகமைகள் மூலம் விதிமுறைகளை உருவாக்கின. இந்த விதிமுறைகளில் ஒன்று கருக்கலைப்பு செய்யும் நபர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான விதியை உள்ளடக்கியது.


நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பிரிவினைக்கு ஏற்ப, நிறைவேற்று ஆணையின் மூலம் அதிபர் புதிய சட்டங்களை உருவாக்க முடியாது.


செயலாக்க ஆணைகளை சட்டரீதியாக சவால் செய்ய முடியுமா?


செயலாக்க ஆணைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை. ஏனெனில், இந்த ஆணைகள் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் அவற்றை நேரடியாக ரத்து செய்ய முடியாது. தற்போதைய அமெரிக்க அதிபர் மட்டுமே புதிய ஆணையை வெளியிடுவதன் மூலம் செயலாக்க ஆணையை ரத்து செய்ய முடியும்.


எவ்வாறாயினும், ஒரு ஆணையானது அரசியலமைப்புக் கோட்பாடுகளை மீறுவதாக தோன்றினால் அல்லது அமெரிக்க அதிபரின் அதிகாரத்தை மீறுவதாக தோன்றினால் அவை நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்யப்படலாம். டிரம்ப் தனது முதல் அதிபர் பதவிக்கு 2017-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, ​​அவர் தற்காலிகமாக பயணத் தடைக்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இந்தத் தடை ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுத்தது. இருப்பினும், கூட்டாட் சி நீதிமன்றம் இந்த உத்தரவின் சில பகுதிகளை நிறுத்தி வைத்தது. பின்னர், இது 2018-ம் ஆண்டில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.


அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) என்ற ஆலோசனை அமைப்பை உருவாக்க டிரம்ப் திங்களன்று ஒரு செயலாக்க உத்தரவை பிறப்பித்தார். இந்த அமைப்பு கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தலைமையில் இருக்கும். இந்த ஆணை ஏற்கனவே சட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. அரசு நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்து ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எலான் மஸ்க் முன்பு பரிந்துரைத்துள்ளார். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அரசு ஊழியர் சங்கங்கள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பொது நலன் அமைப்புகள் அறிவிப்புக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே இது தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்தன.


சில சந்தர்ப்பங்களில், செயலாக்க ஆணையை (executive order) மீறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், கொள்கை நடவடிக்கைகளை செயல்படுத்த தேவையான நிதியை வழங்க மறுப்பதற்கும் நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றலாம். இருப்பினும், அமெரிக்க அதிபர் அத்தகைய சட்டத்தை தடை (veto) செய்வதற்கு தற்போதும் நடைமுறையில் உள்ளது.


கடந்த காலத்தில் செயலாக்க ஆணைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?


செயலாக்க ஆணைகள் (executive order) அதிகாரப்பூர்வமாக ஆபிரகாம் லிங்கனின் அதிபர் பதவிக் காலத்தில் இருந்து வருகின்றன. அவர் 1861 முதல் 1865 வரை அதிபராக பணியாற்றினார். அக்டோபர் 1862-ம் ஆண்டில், அவர் "லூசியானாவில் ஒரு தற்காலிக நீதிமன்றத்தை நிறுவுவதற்கான செயலாக்க ஆணையை" வெளியிட்டார்.


அவருக்குமுன் இருந்த அதிபர்கள் இன்று செயலாக்க ஆணைகளாக அங்கீகரிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ உத்தரவுகளை வெளியிட்டனர். வில்லியம் ஹென்றி ஹாரிசனைத் தவிர, ஒவ்வொரு அதிபரும் ஏதோ ஒரு வகையில் செயலாக்க உத்தரவுகளை இயற்றியுள்ளனர். மிக நீண்ட காலம் அதிபராக இருந்த பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (1933-45) 3,721 ஆணைகளை வெளியிட்டார். உட்ரோ வில்சன் மற்றும் கால்வின் கூலிட்ஜ் முறையே 1,803 மற்றும் 1,203 போன்ற குறிப்பிட்ட ஆணைகளுக்கு  கையொப்பமிட்டனர்.


டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் 220 செயலாக்க ஆணைகளில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Original article:

Share: