இந்தியாவின் பெண்கள் மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோராகவும், தலைவர்களாகவும் மாறி வருகின்றனர். பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதிலிருந்து பெண்கள் மேம்பாட்டிற்கு தலைமை தாங்கும் நிலைக்கு அவர்கள் முன்னேற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவிற்கான (Viksit Bharat) பாதைதையை நம்பிக்கையுடன் அணிவகுத்து வரும் நிலையில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" (Beti Bachao Beti Padhao (BBBP)) திட்டத்தின் மாற்றத்தக்க தாக்கம், பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதில் இருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதற்கு சான்றாகும். சுவாமி விவேகானந்தர் ஒருமுறை, “பெண்களின் நிலை மேம்படாதவரை உலக நலனுக்கு வாய்ப்பில்லை. ஒரு பறவை ஒரே இறக்கையில் பறக்க முடியாது“ என்றார். இதன் மூலம் ஈர்க்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22, 2015 அன்று ஹரியானாவின் பானிபட்டில் இத்திட்டத்தை தொடங்கினார். இந்த முன்முயற்சி இந்தியாவில் குறைந்து வரும் குழந்தை பாலின விகிதத்தை (child sex ratio (CSR)) நிவர்த்தி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு தகுதியான வாய்ப்புகள், கவனிப்பு மற்றும் கண்ணியம் இருப்பதை உறுதி செய்வதற்கும் முயன்றது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பிறப்பு பாலின விகிதம் (sex ratio at birth (SRB)) 918 ஆக கவலையளிக்கும் வகையில் இருப்பதை வெளிப்படுத்தியது. இது வலுவான சமூக சார்புகளையும், கருவில் பாலினம் கண்டறியும் கருவிகளின் தவறான பயன்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் போக்கை மாற்ற வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் குறிப்பிட்ட செயல்களில் இத்திட்டம் கவனம் செலுத்தியது. பெண்கள் வளர்ந்த தலைவர்களாக மாறக்கூடிய எதிர்காலத்திற்கான அடித்தளத்தையும் இது அமைத்தது.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பிறப்பு நேரத்தில் தேசிய பாலின விகிதம் (SRB) 2014-15 ஆண்டில் 918 ஆக இருந்தது. 2023-24 ஆண்டில் 930 ஆக மேம்பட்டது. குழந்தை பிறப்பு எண்ணிக்கை 2014-15-ல் 61% ஆக இருந்து 2023-24 ஆண்டில் 97.3% ஆக உயர்ந்தது. முதல் மூன்று மாத பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு பதிவுகள் 61% இலிருந்து 80.5% ஆக அதிகரித்தன. இரண்டாம் நிலைப் பெண்களுக்கான மொத்த சேர்க்கை விகிதம் 2014-15 ஆண்டில் 75.51% இலிருந்து 2021-22 ஆண்டில் 79.4% ஆக உயர்ந்தது. மேலும், புதிதாகப் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கிடையேயான குழந்தை இறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாடு கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இது உயிர்வாழ்வு மற்றும் பராமரிப்பில் நியாயத்தன்மைக்கான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
BBBP இயக்கம் எண்ணிக்கையை மேம்படுத்துவதைவிட அதிகமாகச் செய்துள்ளது. பெண்கள் அதிகாரமளிப்பது பற்றி நாம் எப்படி நினைக்கிறோம் என்பதை இது மாற்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, யஷஸ்வினி பைக் பயணம் (Yashaswini Bike Expedition) மூலம் அக்டோபர் 2023 ஆண்டில் 150 பெண் பைக்கர்கள் 10,000 கி.மீ பயணம் செய்தனர். இதன் மூலம் இந்தியாவின் பெண்களின் வலிமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினர்.
2022ஆம் ஆண்டில், கன்யா சிக்ஷா பிரவேஷ் உத்சவ் (Kanya Shiksha Pravesh Utsav) திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 100,786 பள்ளி செல்லாத பெண் குழந்தைகளை மீண்டும் பள்ளி செல்ல உதவியது. இதன் மூலம் இத்திட்டம் கல்வி எவ்வாறு வாழ்க்கையை மாற்றும் என்பதை நிரூபித்தது. திறன் மேம்பாடு குறித்த ஒரு தேசிய மாநாடு, அதிகமான பெண்கள் பணியிடத்தில் சேர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது. இது பெண்கள் தலைமையிலான எதிர்காலத்தை நோக்கி நம்மை நகர்த்தியது.
இந்த மாற்றியமைக்கும் திட்டத்தின் 10 ஆண்டுகளை நாம் கொண்டாடும் போது, இதற்கான பணி இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்பது தெளிவாகிறது. நாம் வளர்ந்த இந்தியாவாக மாற வேண்டுமென்றால், நம் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பெண்களும் பெண்களும் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். பெண்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தும் வரை இந்தியா வளர்ச்சியடையாது. நாம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.
1994ஆம் ஆண்டின் முன் கருத்தரிப்பு மற்றும் பிறப்புக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT)) சட்டத்தின் அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும், கல்வியில் இடைநிற்றல் விகிதங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இலக்கு தலையீடுகளை வழங்க வேண்டும்.
2024 நிதியாண்டில் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation (FLFP)) 41.7% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றாலும், ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. நகர்ப்புறங்களில் FLFP கிராமப்புறங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் ஊதியம் இல்லாத வீட்டு பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமான பெண்கள் தங்கள் வீட்டு சூழ்நிலைகளை விட்டு வெளியேறி, வீட்டை விட்டு வெளியில் வேலையில் ஈடுபடுவதற்கான சூழலை வளர்ப்பது மட்டுமல்லாமல், பராமரிப்புப் பணியை சரியான தொழிலாகவும், அதை மேம்படுத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதும் நமது முயற்சியாக இருக்க வேண்டும்.
பராமரிப்புப் பணியில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அதைத் தொடர விரும்புவோர், நிதிச் சுதந்திரத்தைப் பெற்று, அவர்களின் முயற்சிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதைக் காணும்போது அவ்வாறு செய்யலாம். உலகப் பொருளாதார மன்றம், தொழிலாளர் தொகுப்பில் பாலின இடைவெளியைக் குறைப்பதன் மூலம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 20% அதிகரிக்க முடியும் என்று கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, அவசியமும் கூட. 2047ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கும், வளர்ந்த நாடாக மாறுவதற்கும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி முக்கியமானது. BBBP திட்டம் ஒரு இயக்கமாக வளர்ந்து, மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவித்து, இந்தியாவின் முன்னேற்றத்தின் மையத்தில் பெண்களை நிறுத்துகிறது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. பெண்கள் மேம்பாட்டிலிருந்து பெண்கள் மேம்பாட்டிற்குத் தலைமை தாங்குவது நோக்கி கவனம் திரும்பியுள்ளது. இந்தியப் பெண்கள் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தலைவர்களாக மாறி வருகின்றனர். அவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தாங்களே பொறுப்பேற்கிறார்கள். அவர்களின் கனவுகளை ஆதரித்து அவர்கள் வெற்றிபெற உதவுவோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உள்ள முக்கியப் பங்கை உறுதி செய்வோம்.
அன்னபூர்ணா தேவி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.