நில சேகரிப்புடன் நிலைத்தன்மை மற்றும் அளவை உறுதி செய்தல்.
இந்தியாவின் விவசாய நிலப்பரப்பு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஒருபுறம், பெரிய நில உரிமையாளர்கள் வளங்கள் மற்றும் மூலதனத்தை அணுகுவதில் செழித்து வளர்கிறார்கள். மறுபுறம், சிறு மற்றும் குறு விவசாயிகள் சிதறிய நிலங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடுகிறார்கள். இந்த விவசாயிகள் குறைந்து வரும் நில உடைமைகள், வளங்கள் இல்லாமை மற்றும் கொள்ளையடிக்கிற கந்துவட்டிக்காரர்களின் தீய சுழற்சியில் சிக்கியுள்ளனர்.
இருப்பினும், 'முழுமையான கூட்டுப் பண்ணையம்' (‘holistic collective farming’) என்பது சிதறிய நில உடைமைகளை ஒன்றிணைப்பதையும், கூட்டு முயற்சிகள் மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல விவசாய சமூகங்களில், நில பரம்பரை மரபுகள் பல தலைமுறைகளாக பண்ணை அளவுகளில் நிலையான குறைப்புக்கு வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் ஒரு ஏக்கருக்கும் குறைவான சிறிய நிலப்பகுதிகள், ஒரு குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இல்லை. நம்பகமான நீர் ஆதாரங்கள், தரமான விதைகள் அல்லது சந்தை விழிப்புணர்வு இல்லாமல், இந்த விவசாயிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய போராடுகிறார்கள். பலர் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் கந்துவட்டிக்காரர்களுக்கு இரையாகின்றனர். இது அவர்களை மேலும் கடனில் தள்ளுகிறது. இதன் விளைவாக வறுமை மற்றும் விரக்தியின் சுழற்சியில் சிக்க வைக்கிறது. இது இந்தியாவில் விவசாயிகளின் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
கூட்டுப் பண்ணையம்
இந்த மாதிரி சிறு விவசாயிகளின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்கிறது. அவை கீழ்க்கண்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளது.
நிலம் திரட்டுதல்: விவசாயிகள் தங்கள் நிலத்தின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நிலங்களை ஒரு பெரிய பரப்பளவில் இணைக்க ஒப்புக்கொள்கிறார்கள். இது விவசாயத்தை மிகவும் திறமையாகவும் அளவிடக்கூடியதாகவும் ஆக்குகிறது.
சமூக தொழில்முனைவோருடன் ஒத்துழைத்தல்: ஒரு சுரண்டல் அல்லாத சமூக தொழில்முனைவோர் ஆரம்ப மூலதனம், நீர் வளங்கள், விதைகள் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றிக்கான அணுகலை வழங்குகிறது. விவசாயிகளுக்கு நிலையான நடைமுறைகளில் பயிற்சி அளிக்க அவர்கள் விவசாய நிபுணர்களையும் அழைத்து வருகிறார்கள்.
இயற்கை விவசாய நுட்பங்கள்: மண் வளத்தை அதிகரிக்கவும், விலையுயர்ந்த இரசாயன இடுபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீர், வெல்லம், பயறு மாவு மற்றும் புதிய மண் ஆகியவற்றைப் பயன்படுத்தி கரிம உரங்களைத் தயாரிக்க விவசாயிகளுக்கு கற்பிக்கப்படுகிறது.
வருவாய் விநியோகம்: விவசாயிகள் தங்கள் உழைப்புக்கு தினக்கூலி பெறுகிறார்கள். இது நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. அறுவடைக்குப் பிறகு, விளைபொருட்களின் விற்பனையிலிருந்து வருவாய் விநியோகிக்கப்படுகிறது. செயல்பாட்டு செலவுகள் கழிக்கப்பட்டு, மீதமுள்ள லாபங்கள் விவசாயிகளிடையே அவர்களின் நில பங்களிப்பின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
கல்வி மற்றும் எதிர்காலம்: நிலம் மேலும் சிதறுவதைத் தடுக்க, விவசாயிகள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை நிலப் பதிவுகளில் ஆவணப்படுத்த இந்த மாதிரி ஊக்குவிக்கிறது. கூட்டுப் பண்ணை முயற்சியிலிருந்து கிடைக்கும் வருவாய் அவர்களின் கல்விக்கு நிதியளிக்கவும் மற்றும் விவசாயத்திற்கு வெளியே தொழில்களைத் தொடர அவர்களுக்கு உதவவும் பயன்படுகிறது.
நன்மைகள்
பொருளாதார ஸ்திரத்தன்மை: விவசாயிகள் கூலி மற்றும் இலாபப் பங்குகளைப் பெறுவதன் மூலம் உடனடி மற்றும் நீண்டகால நிதிப் பலன்களைப் பெறுகிறார்கள்.
நிலைத்தன்மை: இயற்கை விவசாய நடைமுறைகள் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கின்றன மற்றும் நிலையான விவசாய முறையை உருவாக்குகின்றன.
சமூக அதிகாரமளித்தல்: கூட்டுப் பண்ணையம் சமூக ஒத்துழைப்பை வளர்க்கிறது. கந்துவட்டிக்காரர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. மேலும், சந்தைகளில் விவசாயிகளுக்கு அதிக பேரம் பேசும் சக்தியை அளிக்கிறது.
நிலச் சிதறலைத் தடுத்தல்: ஒரு கூட்டு மாதிரியின் மூலம் கூட்டு உரிமை நிலத்தின் பௌதீக பிரிவினையை நிறுத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்கு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
கல்வியில் கவனம்: பண்ணை வருமானத்தை குழந்தைகளின் கல்வியை நோக்கித் திருப்புவது மேல்நோக்கிய நகர்வு மற்றும் வாழ்வாதாரங்களை பன்முகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
முழுமையான கூட்டுப் பண்ணை மாதிரி என்பது வெறும் பொருளாதார முயற்சி மட்டுமல்ல. இது சமூக மாற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வை. நவீன நிலைத்தன்மை நடைமுறைகளுடன் பாரம்பரிய அறிவை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவின் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்க இது ஒரு வழியை வழங்குகிறது.
இந்த முயற்சியை அதிகரிக்க, அரசு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்குதாரர்கள் ஒன்றிணைய வேண்டும். இயற்கை விவசாய உள்ளீடுகளுக்கான மானியங்கள் அல்லது சமூக தொழில்முனைவோருக்கு வரி சலுகைகள் போன்ற நிதி சலுகைகள், இத்தகைய ஏற்றுக்கொள்ளுதலை துரிதப்படுத்தக்கூடும்.
எஸ்.ராகவன், கட்டுரையாளர் மற்றும் மும்பை பெட்ரோலியம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IBP Unit) முன்னாள் இயக்குநர் ஆவார்.