நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி செலுத்தும் சுமையை நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் சுமக்க முடியாது.
2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் நுகர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்த நிதியாண்டிற்கான ஆரம்ப வளர்ச்சி மதிப்பீடுகள் தனியார் செலவினங்களில் சில நேர்மறையான அறிகுறிகளைக் காட்டினாலும், நிலைமை முற்றிலும் நிலையானதாக இல்லை. முக்கிய குறிகாட்டிகளில் உள்ள கலவையான போக்குகள் மற்றும் பணவீக்கத்தின் தொடர்ச்சியான தாக்கம் இந்த நம்பிக்கையை சற்று மிகைப்படுத்தியதாகத் தெரிகிறது.
தலைமைப் பொருளாதார ஆலோசகர் சமீபத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட துறையிலும்கூட வருமானம் தேக்கமடைந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். இந்தியாவின் 10.4 கோடி வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானம் தேவை என்பதை இது காட்டுகிறது. மூலதனச் செலவில் மட்டுமே கவனம் செலுத்துவது பொருளாதாரத்தை 6.5% வளர்ச்சியைத் தாண்டாது.
சமீபத்திய ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலான வருமான வரியைச் செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் வரி பங்களிப்புகள் குறைந்துள்ளன. 2023 நிதியாண்டு முதல், தனிநபர் வருமான வரி வசூல் கார்ப்பரேட் வரிகளைவிட அதிகமாக உள்ளது. 2024 நிதியாண்டில், தனிநபர் வருமான வரி மொத்த நேரடி வரி வசூலில் 54% ஆகும் (₹19.6 லட்சம் கோடியில் ₹10.45 லட்சம் கோடி). இது கிட்டத்தட்ட 25% வளர்ந்தது. அதே நேரத்தில், கார்ப்பரேட் வரி 10.4% மட்டுமே அதிகரித்து ₹9.1 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த நிதியாண்டின் முதல் பாதியில் இந்த ஏற்றத்தாழ்வு மோசமடைந்தது. தனிநபர் வருமான வரி வசூல் 25% வளர்ந்தது. ஆனால், கார்ப்பரேட் வரிகள் 2.3% மட்டுமே அதிகரித்தன. குறைந்த தேவையுடன் போராடும் சில வணிகங்கள்கூட தனிநபர் வரி நிவாரணம் கோருகின்றன.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes) சமீபத்திய தரவுகளின்படி, ஆண்டுக்கு ₹5.5-9.5 லட்சம் வருமானம் ஈட்டும் மக்கள், அதிக வருமானம் ஈட்டும் நபர்களைவிட அதிக வரிச்சுமையை எதிர்கொள்கின்றனர். நடுத்தர வர்க்கமாகக் கருதப்படும் இந்தக் குழு, வரிச் சலுகையிலிருந்து பயனடையக்கூடும். குறிப்பாக, அவர்கள் தங்கள் வருமானத்தில் அதிகமாகச் செலவிட முனைவதால்.
₹1 கோடி வருமானத்திற்குப் பிறகு வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது அறிவிக்கப்படாத வருமானம் குறித்த கவலைகளை எழுப்புகிறது. இது, 2015-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வரி செலுத்துவோரின் அதிகரிப்பு பெரும்பாலும் குறைந்த வருமானக் குழுக்களிடமிருந்து வந்திருப்பதைக் குறிக்கிறது.
நடுத்தர வர்க்கத்தின் மீதான சுமையைக் குறைக்க, அரசாங்கம் பூஜ்ஜிய வரி வருமான வரம்பை ₹3 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தலாம். வருமான அடுக்குகளையும் எளிமைப்படுத்தலாம், ₹5 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை இரண்டு அடுக்குகளுக்கு 5% மற்றும் 10% என்ற விகிதத்தில் வரி விதிக்கலாம். கூடுதலாக, ₹15 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கான 30% வரி விகிதத்தை ₹20 லட்சத்திற்கு மேல் வருமானங்களுக்குப் பயன்படுத்தலாம்.
புதிய வரித் திட்டம், பழைய விலக்கு அடிப்படையிலான முறையிலிருந்து மக்களை விலகிச் செல்ல ஊக்குவிக்க, நிலையான விலக்கை ₹75,000 ரூபாயிலிருந்து அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில், அதிக வருமான சமத்துவமின்மை உள்ள ஒரு நாட்டில் ₹50 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு கூடுதல் வரியைச் சேர்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். வரிச் சுமையின் பெரும்பகுதியை நடுத்தர வர்க்கத்தினர் சுமப்பது நியாயமற்றது. அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வரி முறையில் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில், தற்போது உழைக்கும் மக்களில் சுமார் 10% பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்.