ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை - குஷ்பு குமாரி

 ஊழல் காலநிலை நெருக்கடியை மோசமாக்குகிறது என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கை (Transparency International report) கூறுகிறது. 


செய்திகளில் என்ன இருக்கிறது ?


பிப்ரவரி 11, 2025 அன்று வெளியிடப்பட்ட டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கையின்படி, 2024 ஊழல் புலனாய்வு குறியீட்டில் (Corruption Perceptions Index (CPI)) 180 நாடுகளில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. இந்த குறியீடு பொதுத்துறை ஊழலை அளவிடுகிறது. டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. குறியீடு 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது.இதில் 0 என்பது மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் 100 என்பது ஊழல் இல்லாததாகவும் குறிப்பிடுகிறது. தரவரிசை குறியீட்டில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அந்த நாட்டின் நிலையைக் கூறுகிறது. ஒவ்வொரு, நாட்டிற்கும் மதிப்பெண் குறைந்தபட்சம் மூன்று தரவு மூலங்களிலிருந்து பெறப்படுகிறது. 13 வெவ்வேறு ஊழல் ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் உலக வங்கி மற்றும் உலகப் பொருளாதார மன்றம் போன்ற பல புகழ்பெற்ற நிறுவனங்களால் சேகரிக்கப்படுகின்றன.


2. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியாவிற்கு 2024-ஆம் ஆண்டிற்கான CPI மதிப்பெண்ணை 38 ஆக வழங்கியது. இந்தியாவின் மதிப்பெண் குறைந்து வருகிறது.  2023-ல் 39 ஆகவும், 2022-ல் 40 ஆகவும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ஊழல் எதிர்ப்பு வாக்குறுதிகளை நிறைவேற்ற நாடுகள் இன்னும் போராடி வருவதால், சராசரி மதிப்பெண் ஒரு புள்ளி குறைந்து 44 ஆக உள்ளது.


3. 2012 முதல் 32 நாடுகள் ஊழலைக் குறைத்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. இருப்பினும், 148 நாடுகளில், ஊழல் அளவுகள் அதே நிலையில் உள்ளதாகவும் அல்லது மோசமடைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட நாடுகள் 50 புள்ளிகளுக்குக் கீழே மதிப்பெண் பெற்றுள்ளன. மேலும் உலகளாவிய சராசரி மதிப்பெண் 43 பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது.


4. காலநிலை மாற்றம் தற்போது உலகை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். பருவநிலை மாற்றத்துடன் ஊழலும் வலுவாக ஒன்றிணைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உலக வெப்பமயமாதலின் விளைவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, அமைப்பில் உள்ள ஊழல் காரணமாக திருடப்படுகிறது அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை செயல்படுத்துவதிலும் ஊழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மேலும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு வழிவகுக்கிறது.


5. இந்தியாவின் அண்டை நாடுகளில், வங்கதேசம் 23 மதிப்பெண்களையும், பாகிஸ்தான் 27, மற்றும் இலங்கை 32 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. காலநிலை நிதியை அதிகம் பெறும் நாடுகளில் வங்காளதேசமும் ஒன்றாகும். இது மோசடி மற்றும் பிற வகையான ஊழல்களால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. பருவநிலை மாற்ற பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியானது, தேவைப்படும் பயனாளிகளுக்கு சென்றடையாமல் போகும் அபாயம் உள்ளது. அறிக்கையின்படி, பாகிஸ்தான் போன்ற காலநிலை பாதிப்புக்குள்ளான நாடுகளில் முறையான நிர்வாக இடைவெளிகள் மற்றும் கொள்கையை செயல்படுத்துவதில் தாமதங்கள் காணப்படுகின்றன. ஊழல் ஒரு நாட்டின் வளர்ச்சியை பலவீனப்படுத்துகிறது. ஊழல் ஜனநாயகம் வீழ்ச்சியடைவதற்கும், உறுதியற்ற தன்மைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கிறது என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.


சர்வதேச சமூகம் மற்றும் ஒவ்வொரு நாடும் ஊழலைக் கையாள்வதை முதன்மையான மற்றும் நீண்ட கால முன்னுரிமையாக மாற்ற வேண்டும். சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். இது போன்ற நடவடிக்கைகள் அமைதியான, சுதந்திரமான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்கவும் உதவுகிறது. இந்த ஆண்டு ஊழல் புலனாய்வு குறியீடு ஆபத்தான போக்குகளை வெளிப்படுத்துகிறது. உலகளாவிய ஊழலை எதிர்த்துப் போராட உறுதியான நடவடிக்கை தேவைப்படுகிறது. 


லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்


1. ஊழலுக்கு எதிரான ஒன்றிய ஊழல் எதிர்ப்பு அமைப்பான குறைதீர்ப்பாளரான (central anti-corruption ombudsman) லோக்பால் என்ற யோசனை முதன் முதலில் 1963-ல் முன்மொழியப்பட்டது. ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்தின் வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது  வந்தது. 1968 மற்றும் 2001-க்கு இடையில், ஒரு குறைதீர்ப்பாளரை உருவாக்க 8 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்த மசோதாக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 2020-ஆம் ஆண்டு இந்தியாவின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கை இந்தப் பிரச்சினையை குறிப்பிட்டது. 


2. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த லோக் ஆயுக்தாக்களை உருவாக்கின. அவை மாநில அளவிலான லோக்பாலுக்கு இணையானவை. லோக் ஆயுக்தாவை அமைத்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இது 1971-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா லோக்ஆயுக்தா மற்றும் உபயுக்தா சட்டத்தின் கீழ் இந்த அமைப்பை நிறுவியது. 


3. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013, ஜனவரி 16, 2014 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் ஒரு தலைவரின் தலைமையில் லோக்பாலை உருவாக்கியது. தலைவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியாகவோ, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த நபராகவோ இருக்கலாம். லோக்பாலில் 8 உறுப்பினர்களுக்கு மேல் இடம் பெற்றிருக்க கூடாது. இந்த உறுப்பினர்களில் பாதி பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உறுப்பினர்களில் குறைந்தது 50% பேர் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் அல்லது பெண்களாக இருக்க வேண்டும்.


4. பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் ஒன்றிய அரசின் ஏ, பி, சி மற்றும் டி பிரிவு அதிகாரிகள் வரை பல்வேறு வகையான பொது ஊழியர்களை லோக்பால் சட்டம் உள்ளடக்கியது. பிரதமருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு. இது தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் விசாரணை நடத்தலாம் அல்லது விசாரணைக்கு உத்தரவிடலாம். இந்த அதிகாரம் லோக்பால் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


5. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச உறவுகள், வெளி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி தொடர்பானதாக இருந்தால், லோக்பால் அமைப்பு விசாரணை நடத்த சட்டம் அனுமதிக்காது. மேலும், முழு லோக்பால் அமர்வு விசாரணையைத் தொடங்குவதை பரிசீலித்து, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்காவிட்டால், பிரதமருக்கு எதிரான புகார்களை விசாரிக்க முடியாது.


6. லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள் அல்லது 70 வயது வரை பணியாற்றுவார்கள். முதல் லோக்பால் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ் (Pinaki Chandra Ghose) ஆவார். அவர் மார்ச் 2019-ல் பதவியேற்றார். மே 2022-ல் அவர் ஓய்வு பெற்றதிலிருந்து, முன்னாள் ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் குமார் மொஹந்தி (Pradip Kumar Mohanty) லோக்பால் தலைவராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் இந்தியாவின் லோக்பால் (Lokpal of India) அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.



Original article:

Share: