ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீடு மற்றும் சூழலியல் அழுத்தங்கள் சரிசெய்யப்பட்ட மனித வளர்ச்சி குறியீடு (Planetary Pressures-Adjusted Human Development Index (PHDI)) போன்ற அளவீடுகள் பூமியின் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. கலிபோர்னியா மீண்டும் தீப்பற்றி எரிந்தது. சமீபத்திய காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தியது. சில மதிப்பீடுகள் மொத்தப் பொருளாதார சேதத்தை சுமார் $250 பில்லியன் என மதிப்பிடுகின்றன. இது 2023-ல் கிரேக்கத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு இணையாக இருக்கும். கலிபோர்னியா தீ விபத்து உலகின் பணக்கார நாடுகள் பயன்படுத்தும் மேம்பாட்டு மாதிரிகளின் உண்மையான செலவைக் காட்டுகின்றன.
ஒவ்வொரு நாடும் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல வளங்களை பயன்படுத்தினால், நமது வாழ்க்கை முறையைத் தக்கவைக்க நமக்கு பல பூமிகள் தேவைப்படும். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீடு (United Nations’ Human Development Index) போன்ற சர்வதேச அளவுகோல்கள், இந்த நாடுகளை இன்னும் வளர்ச்சியின் சிறந்த மாதிரிகளாக முன்வைக்கின்றன. இருப்பினும், பரவலாகப் பயன்படுத்தப்படும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கும் சுற்றுச்சூழல் உண்மைகளுக்கும் இடையிலான இடைவெளி தவறானது மட்டுமல்ல. அது ஒரு கடுமையான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.
தவறான முன்னேற்றம்
பல ஆண்டுகளாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்னேற்றத்தை எவ்வாறு உணர்கின்றன என்பதை மனித வளர்ச்சி குறியீடு வடிவமைத்துள்ளது. இது ஆயுட்காலம், கல்வி மற்றும் வருமானம் ஆகிய மூன்று முக்கிய காரணிகளைக் கருத்தில் கொள்கிறது. இருப்பினும், மனித வளர்ச்சி குறியீடு ஒரு முக்கியமான நான்காவது காரணியை புறக்கணிக்கிறது. அதிக மதிப்பெண்களுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அழுத்தங்களை கவனத்தில் கொள்ளவில்லை. அயர்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் மனித வளர்ச்சி குறியீட்டில் முக்கிய இடத்தில் உள்ளன. இருப்பினும், அவை அதிக வளங்களைப் பயன்படுத்துகின்றன மற்றும் ஒரு நபருக்கு அதிக கார்பன் மாசுபாட்டை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த வளர்ச்சி மாதிரியைப் பின்பற்றினால், பூமியால் அதிக வள பயன்பாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் கையாள முடியாது.
பசுமை இல்ல வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மாசுபாடு ஆகியவற்றிற்கான பாதுகாப்பான வரம்புகளை பணக்கார நாடுகள் ஏற்கனவே தாண்டிவிட்டன. சுற்றுச்சூழல் சேதத்தை மனித வளர்ச்சி குறியீடு கருத்தில் கொள்வதில்லை. இது வளர்ச்சி பற்றிய தவறான கருத்தை உருவாக்குகிறது. இது ஒரு சிலருக்கு செல்வத்தின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் அனைவருக்கும் ஏற்படும் தீமையை புறக்கணிக்கிறது. நிலைத்தன்மை நிபுணர்களின் பல வருட விமர்சனங்களுக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டில், சூழலியல் அழுத்தங்கள் சரிசெய்யப்பட்ட மனித வளர்ச்சிக் குறியீட்டை (Planetary Pressures-Adjusted Human Development Index (PHDI)) அறிமுகப்படுத்தியது. இந்த புதிய குறியீடு அதிக சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகளுக்கான மனித வளர்ச்சி குறியீட்டு மதிப்பெண்களைக் குறைக்கிறது. இருப்பினும், PHDI இன்னும் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இது உண்மையான சுற்றுச்சூழல் வரம்புகளுக்கு எதிராக நாடுகளை அளவிடுவதற்குப் பதிலாக, நாடுகளை ஒன்றோடொன்று ஒப்பிடுகிறது. உதாரணமாக, நார்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நோர்டிக் நாடுகள், ஒரு நபருக்கு ஐந்து பூமிகளுக்கு சமமான வளங்களை பயன்படுத்துகின்றன. அதிக நுகர்வு இருந்தபோதிலும், அவை இன்னும் PHDI-ல் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றன. இது அவர்களின் வாழ்க்கை முறை உண்மையிலேயே நிலையானது என்பதால் அல்ல. மாறாக, கத்தார் போன்ற பிற நாடுகளில் இன்னும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் இந்த நாடுகள் முக்கிய இடத்தில் உள்ளன.
இந்த சார்பியல் அணுகுமுறை உலகின் பிற பகுதிகள், பூமியின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை மீறாமல், அதிக வருமானம் கொண்ட நாடுகளின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப வளர முடியாது என்ற அடிப்படை உண்மையை மறைக்கிறது. உண்மையில், PHDI பொறியில் முன்னேற்றம் பற்றி தவறான உணர்வை உருவாக்குகிறது.
நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைக் கொண்டாடுங்கள்
எங்கள் ஆராய்ச்சி வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நாடுகளை நாங்கள் அடையாளம் காண்கிறோம். காலநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உலகளவில் விரிவுபடுத்த முடியுமா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம்.
கோஸ்டாரிகா மற்றும் இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகள் பயனுள்ள உதாரணங்களை வழங்குகின்றன. கோஸ்டாரிகா அதிக ஆயுட்காலம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கல்வியறிவு ஆகியவற்றை அடைந்துள்ளது. அதே நேரத்தில், பணக்கார நாடுகளைவிட மிகக் குறைவான வளங்களையே பயன்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வனப் பாதுகாப்பில் முதலீடு செய்துள்ளது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மனித வளர்ச்சியையும் சமநிலைப்படுத்த உதவியுள்ளது.
இதற்கிடையில், இலங்கை ஒரு கலவையான முடிவை வெளிக்காட்டுகிறது. அதன் மனித வளர்ச்சிக் குறியீடு 0.78 ஆகும். இது பல தெற்காசிய நாடுகளைவிட அதிகமாகும். உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வியில் ஆரம்பகால முதலீடுகள், பணக்கார நாடுகளைப் போலவே, அதிக ஆயுட்காலம் மற்றும் எழுத்தறிவு விகிதங்களுக்கு வழிவகுத்தன. இருப்பினும், இலங்கை பல சவால்களை எதிர்கொள்கிறது. 2022 பொருளாதார நெருக்கடி கடுமையான பணவீக்கம், பொது மக்கள் போராட்டங்கள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை சந்தித்தது. இது பலவீனங்களை வெளிக்காட்டியது. கூடுதலாக, பெரும்பான்மை கொள்கைகள் மற்றும் இனப் பதட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்தைக் குறைத்துள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் சமூக முன்னேற்றத்தை சமநிலைப்படுத்துவதைவிட நிலைத்தன்மை முக்கியமானது என்பதை இலங்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு நாட்டிற்குள்ளும் நாடுகளுக்கு மத்தியிலும் நியாமான உறவு தேவைப்படுகிறது.
இந்தியா மாற்று வழிகளைத் தேட வேண்டும்
நோர்டிக் மாதிரி உள்ளூரில் வேலை செய்யக்கூடும் எனும் படிப்பினைத் தெளிவாக உள்ளது. ஆனால், அது முழு உலகிற்கும் நிலையானது அல்ல. 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட இந்தியா, பணக்கார நாடுகளின் அதிக நுகர்வு முறைகளைப் பின்பற்ற முடியாது. அதற்கு பதிலாக, அதற்கு வெவ்வேறு தீர்வுகள் தேவைப்படுகின்றன. கோஸ்டாரிகாவும் இலங்கையும் சரியான எடுத்துக்காட்டுகள் அல்ல. ஆனால், அவை பயனுள்ள யோசனைகளை வழங்குகின்றன. இருநாடுகளின் எடுத்துக்காட்டுகள் பூமியைப் பாதுகாக்கும் மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியை உறுதி செய்யும் ஒரு வளர்ச்சிப் பாதையை உருவாக்க உதவும்.
இறுதியில், 21ஆம் நூற்றாண்டில் கிரக ஆரோக்கியத்தின் உண்மையின் அடிப்படையில் "முன்னேற்றம்" மற்றும் "வளர்ச்சி" ஆகியவற்றை மறுவரையறை செய்வது முக்கிய சவாலாகும். மனித வளர்ச்சி குறியீடு (HDI) மற்றும் சூழலியல் அழுத்தங்கள் சரிசெய்யப்பட்ட மனித வளர்ச்சி குறியீடு (PHDI) ஆகியவை பொருளாதார வளர்ச்சியை எப்போதும் நன்மை பயக்கும் என்று கருதுகின்றன. இருப்பினும், பூமிக்கு குறைந்த வளங்கள் உள்ளன என்பதை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிடுகிறார்கள்.
இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு, உண்மையான முன்னேற்றம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அல்லது உயர்ந்த மனித வளர்ச்சி குறியீட்டு தரவரிசையைவிட அதிகமானதாகும். இதன் நோக்கம் 1.4 பில்லியன் குடிமக்கள் அனைவரும் கண்ணியத்துடன் வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும். அவர்கள் சுற்றுச்சூழல் வரம்புகளுக்குள் இருப்பதை உறுதி செய்வதையும் இது குறிக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது ஒரு தார்மீக கடமை அல்லது ஒரு இலட்சிய இலக்கு மட்டுமல்ல. 21-ஆம் நூற்றாண்டில் உயிர்வாழ்வதற்கான ஒரு முக்கியமான யுக்தியாகும்.
சிராக் தாரா, இந்தியாவின் க்ரியா பல்கலைக்கழகத்தில் காலநிலை மற்றும் நிலைத்தன்மை விஞ்ஞானி ஆவார். சௌம்யஜித் பார், இந்தியாவின் பிஎம்எல் முஞ்சால் பல்கலைக்கழகத்தில் நுகர்வு மற்றும் நிலைத்தன்மை பற்றிய அறிஞர்.