மின்சார வாகனத் துறையில் போட்டியிட இந்தியா நம்பகமான வர்த்தக நாடாக இருக்க வேண்டும்.
மின்சார வாகன (EV) மின்கலன்கள் (பேட்டரிகள்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 35 மூலதன பொருட்கள் மற்றும் மொபைல் போன் மின்கலன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 28 பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கும் இந்தியாவின் முடிவு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுத்தமான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான வரவேற்கத்தக்க படியாகும்.
இது மத்திய பட்ஜெட் 2025-26-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் முன்மொழியப்பட்டு, செவ்வாயன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா (Finance Bill) 2025 மூலம் முறைப்படுத்தப்பட்டது. இது ஒரு இராஜதந்திர கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது.
முன்னதாக மார்ச் மாதத்தில், சீன மின்சார வாகன நிறுவனமான BYD தனது Super E-platform” வெளியிட்டது. இது ஒரு வாகனத்திற்கு 500-கிலோமீட்டர் தூரத்தை வெறும் ஐந்து நிமிட சார்ஜிங் மூலம் வழங்கும் திறன் கொண்டது. இந்த கண்டுபிடிப்பு வழக்கமான வாகனங்களின் வசதிக்கு நேரடியாக சவால் விடுவதுடன், பாரம்பரிய எரிபொருள் நிலையங்களைப் போலவே எங்கும் பரவி பயன்படுத்தப்பட்டால், உலகளாவிய மின்சார வாகன மாற்றத்தை துரிதப்படுத்தலாம். ஒரு மின்சார வாகனத்தில் பேட்டரிகள் மிகவும் விலையுயர்ந்த கூறுகளாக இருக்கின்றன. இது வாகனத்தின் விலையில் சுமார் 40% ஆகும்.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மின்சார வாகனங்களின் அதிக விலை அவற்றின் பயன்பாட்டைக் குறைத்துள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தேவையைக் குறைப்பதன் நீண்டகால நன்மை இருந்தபோதிலும் இது நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவிற்கு முக்கியமானது. மின்சார வாகன பேட்டரிகளை தயாரிப்பதற்கான உள்ளூர் தொழில்நுட்பம் இல்லாதது மற்றொரு பெரிய சவாலாகும். தற்போது, சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின்படி, உலகளவில் உள்ள அனைத்து மின்சார வாகன பேட்டரிகளிலும் 70%-க்கும் அதிகமானவற்றை உற்பத்தி செய்யும் சீனா இந்தத் தொழிலுக்கு தலைமை தாங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், லித்தியம்-ஃபெரோ-பாஸ்பேட் (lithium-Ferro-phosphate (LFP)) பேட்டரி தொழில்துறை தரநிலையாக மாறியுள்ளது. ஏனெனில், இது குறைந்த விலை, அதிக ஆற்றலைச் சேமிக்கிறது மற்றும் வெப்பத்தை சிறப்பாகக் கையாளுகிறது.
2024ஆம் ஆண்டில், சீனாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கார்களிலும் 45% மின்சார வாகனங்கள் (EVகள்), அதே நேரத்தில் இந்தியாவில், பயணிகள் கார் சந்தையில் மின்சார வாகனங்கள் 2% மட்டுமே இருந்தன. இருப்பினும், மின்சார இரு சக்கர வாகனங்கள் (e2w) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. 2024ஆம் ஆண்டில் 1.14 மில்லியன் யூனிட்டுகள் விற்கப்பட்டன. இது மொத்த மின்சார வாகன விற்பனையில் 60% ஆகும்.
இந்தியாவின் வரி விலக்குகள் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும், கட்டணங்களைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், போக்குவரத்துத் துறையில் மாசுபாட்டைக் குறைப்பதே பெரிய குறிக்கோளாக உள்ளது. இதைச் செய்ய, உலகளாவிய மின்சார வாகன பேட்டரி விநியோகச் சங்கிலியின் ஆரம்ப கட்டங்கள் (சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு) மற்றும் பிந்தைய கட்டங்கள் (உற்பத்தி மற்றும் அசெம்பிளி) இரண்டிலும் இந்தியா ஈடுபட வேண்டும். இது தொழில்நுட்பப் பகிர்வு மூலம் பேட்டரி செலவுகளைக் குறைக்க உதவும். மேலும், தங்கள் விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்த விரும்பும் நாடுகளுக்கு சீனாவிற்கு வலுவான மாற்றாக இந்தியாவை மாற்றும்.
மின்சார வாகனங்களில் நீண்டகால வெற்றிக்கு, இந்தியா சாதகமான வர்த்தகக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் உலகளாவிய பேட்டரி சந்தையில் வலுவான நிலையை உருவாக்க வேண்டும்.