தற்போதைய செய்தி
ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26 ஆம் தேதி சர்வதேச சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது 2015-ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) பொதுக் கூட்டத்தின் 38வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சதுப்புநில காடுகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கான முக்கியமான படியாகும்.
சதுப்புநிலத் தாவரங்கள் என்றால் என்ன மற்றும் அவை இந்தியாவில் எங்கே காணப்படுகின்றன?
சதுப்புநிலத் தாவரங்கள் உப்பு நீரில் வாழக்கூடிய சிறப்பு மரங்கள் மற்றும் புதர்கள் ஆகும். அவை நன்னீர் மற்றும் உப்பு நீர் சந்திக்கும் பகுதிகளில் வளரும். சதுப்புநிலங்கள் பொதுவாக காற்றில் பரவும், சுவாசிக்கும் வேர்கள் மற்றும் மெழுகு போன்ற, சதைப்பற்றுள்ள இலைகளைக் கொண்டுள்ளன. மேலும், அவை பூக்கும் தாவரங்களாகும். அவை அதிக மழை பெய்யும் பகுதிகளில் (1,000–3,000 மிமீ) 26°C முதல் 35°C வரை வெப்பநிலையுடன் உள்ள பகுதிகளில் செழித்து வளரும்.
சதுப்புநிலங்களின் தனித்துவமான சிறப்பம்சம் அவற்றின் விதைகள் முளைக்கும் விதம் ஆகும். சதுப்புநில விதைகள் மரத்தில் இருக்கும்போதே வளரத் தொடங்குகின்றன. சிறிது வளர்ந்த பிறகு, அவை தண்ணீரில் விழுகின்றன. அவை சேற்றில் அல்லது மண்ணில் சிக்கிக் கொள்ளும்போதுதான் புதிய தாவரமாக வளரத் தொடங்குகின்றன. இது சதுப்புநிலங்களின் சிறப்பு அம்சமாகும். இது கடுமையான உப்புத்தன்மை நிலைகளில் அவை நிலைத்திருக்க உதவுகிறது. விஞ்ஞானிகள் இந்த செயல்முறையை கனியிலேயே விதை முளைத்தல் (vivipary) என்று அழைக்கிறார்கள்.
சிவப்பு சதுப்புநிலக் காடுகள் (Red mangrove), அவிசென்னியா மரினா (avicennia marina), சாம்பல் சதுப்புநிலக் காடுகள் (grey mangrove), ரைசோபோரா (rhizophora) போன்றவை சில பொதுவான சதுப்புநில மரங்கள் ஆகும். சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்களில் ஏராளமாகக் காணப்படும் தாவரங்கள் கடலோர வன சுற்றுச்சூழல் அமைப்பை (littoral forest ecosystem) குறிக்கின்றன. இவை கடலோர பகுதிகளில் உப்பு நீர் (brackish waters) அல்லது உவர் நீரில் (brackish waters) வளரும்.
இந்தியாவில் சதுப்புநிலங்கள்
சதுப்புநிலங்கள் 123 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களில் பரவியுள்ளன. 2023-ஆம் ஆண்டு இந்திய வன அறிக்கையின் (Indian State of Forest Report (ISFR)) படி, இந்தியாவில் சதுப்புநிலங்களின் பரப்பளவு சுமார் 4,992 சதுர கிமீ ஆகும். இது நாட்டின் மொத்த புவியியல் பகுதியில் 0.15% ஆகும். மேற்கு வங்காளம் இந்தியாவில் மிகப்பெரிய சதுப்புநிலப் பரப்பைக் கொண்டுள்ளது. குஜராத் 1,177 சதுர கிமீ மதிப்பிடப்பட்ட பரப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு சதுப்புநிலங்கள் காடுகள் பெரும்பாலும் கட்ச் வளைகுடா (Gulf of Kutch) மற்றும் கம்பாத் வளைகுடாவில் (Gulf of Khambhat) அமைந்துள்ளன. 794 சதுர கிமீ பரவிய சதுப்புநில காடுகளுடன், கட்ச் மாவட்டம் குஜராத்தில் மிகப்பெரிய மாங்குரோவ் பகுதியைக் கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் (கோதாவரி-கிருஷ்ணா நாற்கோணம்), கேரளா மற்றும் அந்தமான் தீவுகளிலும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் காணப்படுகின்றன.
சுந்தரவனம் (இந்தியா மற்றும் வங்காளதேசம் முழுவதும் பரவியுள்ள) உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான சதுப்புநிலக் காடுகள் காடாகும். பிதர்கனிகா (Bhitarkanika) இந்தியாவில் இரண்டாவது பெரிய காடாகும். சுந்தரவன தேசிய பூங்கா யுனெஸ்கோ-வின் உலக பாரம்பரிய தளமாகும். இந்த காடு ராயல் வங்கப் புலிகள், கங்கை டால்பின்கள் மற்றும் பிற தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பிரபலமானது. பிதர்கனிகா அதன் அழிந்துவரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் (Olive Ridley turtles) மற்றும் உப்பு நீர் முதலைகளுக்கு புகழ்பெற்றது.
சதுப்புநிலக் காடுகளின் பன்முக முக்கியத்துவம் என்ன?
சதுப்புநிலக் காடுகள் நிலத்திற்கும் கடலுக்கும் இடையேயான எல்லையில் அமைந்துள்ள அரிய, அற்புதமான மற்றும் செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகும். இந்த அசாதாரண சுற்றுச்சூழல் அமைப்புகள் உலகம் முழுவதும் கடலோர சமுதாயங்களின் நல்வாழ்வு, உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன என்று யுனெஸ்கோ கூறுகிறது.
சதுப்புநிலக் காடுகள் ஆழமான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டவை. பல வழிகளில் அவை பயனளிக்கின்றன:
1. இயற்கை கடலோர பாதுகாப்பு (உயிர்-கவசங்கள்): சதுப்புநிலங்ககள் இயற்கை கடலோர காவலர்கள் மற்றும் பாதுகாவலர்களாக செயல்படுகின்றன. இவை 'உயிர்-கவசங்கள்' (bio-shields) என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில், இவை வலுவான அலைகள் மற்றும் காற்றின் தாக்கத்தைக் குறைக்கின்றன. மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இது முக்கியமாக அவற்றின் வேர்களால் சாத்தியமாகிறது.
2. கார்பன் குழிகள் (Carbon sinks): சதுப்புநிலங்ககள் அத்தியாவசிய கார்பன் குழிகளாக செயல்படுகின்றன (வெளியிடுவதைவிட அதிகக் கார்பனை உறிஞ்சுகின்றன). உலகமயமான வெப்பமடைதலைக் குறைக்க உதவுகின்றன. UNESCO அறிக்கையின்படி, ஒரு ஹெக்டேர் சதுப்புநிலத்தில் 3,754 டன் கார்பனைச் சேமிக்க முடியும். இது ஒரு வருடத்திற்கு 2,650+ கார்களை சாலையிலிருந்து நீக்குவதற்கு சமமானதாகும்.
சதுப்புநில மரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சி மண்ணில் சேமிக்கின்றன. அங்கு கார்பன் தொந்தரவு செய்யப்படாவிட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருக்கும். ஒளிச்சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக CO2-ஐ அகற்றும் பிற மரங்களிலிருந்து சதுப்புநிலங்கள் வேறுபடுகின்றன. கார்பனை அவற்றின் கிளைகள் மற்றும் வேர்களில் சேமித்து வைக்கிறன. ஆனால், மரம் தனது வலுவை இழக்கும் போது, கார்பன் மீண்டும் காற்றில் வெளியிடப்படுகிறது. மறுபுறம், சதுப்புநிலங்கள் மண்ணில் கார்பனை சேமித்து வைக்கின்றன, மரம் அழிக்கப்பட்டாலும் அது பாதுகாப்பாக இருக்கும்.
3. பொருளாதார முக்கியத்துவம்: சதுப்புநிலங்கள் கடலோரப் பகுதிகளில் காணப்படுவதால், இவை கடலோர சமுதாயங்களுக்கு வாழ்வாதார ஆதாரமாகவும் உள்ளன. மீனவ பெண்கள் மற்றும் விவசாயிகள் சதுப்புநிலங்கள் வழங்கும் பல்வேறு சுற்றுச்சூழல் செல்வத்தை சார்ந்துள்ளனர். மீன் வளர்ப்பு, மரம் அல்லாத வன உற்பத்திப் பொருட்கள், தேன் சேகரிப்பு மற்றும் படகு சவாரி ஆகியவை உள்ளூர் மக்கள் சார்ந்துள்ள சில உள்ளூர் தொழில்கள் சதுப்பு நிலத்தை பெரிதும் நம்பியுள்ளன. கூடுதலாக, பல்வேறு வகையான மீன்கள், இறால்கள் மற்றும் தாவரங்கள் சதுப்புநிலக் காடுகளில் செழித்து வளர்கின்றன. அவை நீலப் பொருளாதாரத்தை (blue economy) ஆதரிக்கின்றன.
4. பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கிறது: இந்த சதுப்புநிலக் காடுகள் உயிரினப் பன்மைத்தன்மையில் செழிப்பானவை. இவை ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து வாழும் சிக்கலான சமூகங்களை ஆதரிக்கின்றன. மீன்கள் மற்றும் நண்டுகளுக்கு மதிப்புமிக்க இனப்பெருக்க வாழிடத்தை வழங்குகின்றன; குரங்குகள், மான்கள், பறவைகள், மற்றும் கங்காருகளுக்கு உணவு ஆதாரமாக உள்ளன; மேலும் தேனீக்களுக்கு தேன் ஆதாரமாகவும் உள்ளன.
கேள்வி 3: இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்ன?
உலகில் உள்ள சதுப்புநிலக்காடுகளில் பாதிக்கும் மேற்பட்ட சதுப்புநிலக் காடுகள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. மேலும், ஐந்தில் ஒன்று மிகவும் கடுமையான ஆபத்தில் உள்ளது என்று ஒரு பெரிய உலகளாவிய ஆய்வு கூறுகிறது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் அறிக்கையின் படி, சதுப்புநிலக்காடுகளின் பன்முக முக்கியத்துவம் இருந்தபோதிலும், இவை ஒட்டுமொத்த உலகளாவிய வன இழப்புகளைவிட மூன்று முதல் ஐந்து மடங்கு வேகமாக மறைந்து வருகின்றன. இது கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, கடந்த 40 ஆண்டுகளில் சதுப்புநிலங்களின் பரப்பளவு இரண்டாகப் பிளவுப்பட்டுள்ளது.
வன அழிப்பு, மாசுபாடு மற்றும் அணை கட்டுமானம் சதுப்புநிலங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஆனால், காலநிலை மாற்றத்தால் கடல் மட்ட உயர்வு மற்றும் கடுமையான புயல்களின் அதிகரித்த எண்ணிக்கையின் காரணமாக இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான அபாயம் அதிகரித்து வருகிறது.
புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்ட உயர்வு சதுப்புநிலங்கள் நீரில் மூழ்குவதற்கு வழிவகுக்கும். ஆய்வுகள் காலப்போக்கில் கடல் மட்ட உயர்வு காரணமாக சதுப்புநிலங்கள் நிலத்தை நோக்கி தள்ளப்படுவதைக் காட்டுகின்றன. இருப்பினும், மனித குடியிருப்புகள் மற்றும் பிற தொழில்துறை நடவடிக்கைகளால் நிலம் நோக்கிய இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, சதுப்புநிலங்கள் அவற்றின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு சாத்தியமில்லாத அளவுக்கு நசுக்கப்படலாம்.
குறிப்பிடத்தக்க வகையில், காலநிலை மாற்றம் சதுப்புநிலங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கை (33 சதவீதம்) அச்சுறுத்துகிறது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) சுற்றுச்சூழல் அமைப்புகளின் சிவப்பு பட்டியலைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. இது சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்பதை சரிபார்க்க இந்த ஆய்வு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) உலகளாவிய முறையைப் பயன்படுத்தியது.
உலகெங்கிலும் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிப்பது காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான சதுப்புநிலங்கள் கடல் மட்ட உயர்வை குறைப்பதற்கும், புயல் மற்றும் சூறாவளிகளின் தாக்கங்களிலிருந்து உள்நாட்டிற்குப் பாதுகாப்பை வழங்குவதற்கும் முக்கியமாக இருக்கும் என்று மதிப்பீடு கண்டறிந்துள்ளது.
சதுப்புநில பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
பெருகிவரும் நகரமயமாக்கல், விவசாயம், இறால் வளர்ப்பு காரணமாக கடலோர பகுதிகளில் நில பரப்புகள் குறைந்து வருதல் மற்றும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையால் ஏற்படும் பிற ஆபத்துகள் ஆகியவற்றால் சதுப்புநிலங்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. கவனமாக செய்யப்படாத சுற்றுலாவும் இந்த பாதிக்கப்படக்கூடிய சதுப்புநிலப் பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
இருப்பினும், காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைக்கான உத்தியாக சதுப்புநிலங்களின் பாதுகாப்பு பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது. சில உலகளாவிய முயற்சிகளில், எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் (Mangroves for the Future (MFF)) மற்றும் காலநிலைக்கான சதுப்புநில கூட்டணி (Mangroves Alliance for Climate) ஆகியவை அடங்கும்.
இந்தியாவில், கடற்கரை வாழ்விடங்கள் & உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில காடு முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI)), அம்ரித் தரோஹர் (Amrit Dharohar), மேற்கு வங்காளத்தின் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பில் நிலையான மீன் வளர்ப்பு (Sustainable Aquaculture In Mangrove Ecosystem (SAIME)), ஆந்திர பிரதேசத்தின் வன சம்ரக்ஷண சமிதிகள் (Vana Samrakshana Samitis) மற்றும் பசுமை தமிழ்நாடு திட்டம் (Green Tamil Nadu Mission) போன்ற திட்டங்கள் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.
01. காலநிலைக்கான சதுப்புநில கூட்டணி (Mangrove Alliance for Climate)
கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற 27வது கால நிலை மாநாட்டின் அமர்வில் (Conference of Parties (COP)), இந்தியா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து, ‘உலகளவில் சமுதாயங்களின் நன்மைக்காக சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, மீட்டமைப்பு மற்றும் வளரும் தோட்ட முயற்சிகளை அதிகரிக்கவும், துரிதப்படுத்தவும், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் தகவமைப்புக்கு இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும்’ சதுப்புநில காலநிலை கூட்டணி (Mangrove Alliance for Climate (MAC)) தொடங்கப்பட்டது.
எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் (Mangroves for the Future (MFF))
எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் நிலையான வளர்ச்சிக்காக கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு பாதுகாப்பில் முதலீட்டை ஊக்குவிக்கும் தனித்துவமான பங்குதாரர் தலைமையிலான முயற்சியாகும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) ஆகியவற்றால் இணை தலைமை வகிக்கப்படும் எதிர்காலத்திற்கான சதுப்புநில கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பல்வேறு முகவர்கள், துறைகள் மற்றும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான தளத்தை வழங்குகிறது. ஆரம்பத்தில் இது சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, சீஷெல்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
சமீபத்தில், இந்த திட்டம் வங்கதேசம், கம்போடியா, மியான்மர், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் முதன்மையானது சதுப்புநிலங்கள் ஆகும். ஆனால் எதிர்காலத்திற்கான சதுப்புநிலங்கள் என்பது பவளப்பாறைகள், கழிமுகங்கள், தடாகங்கள், மணல் நிறைந்த கடற்கரைகள், கடல் புற்கள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற அனைத்து வகையான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உள்ளடக்கியது.
கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில திட்டத்தின் முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI))
சதுப்புநிலங்களை ஒரு உயிரியல் கேடயமாகச் செயல்படுத்துவதோடு, மிக அதிக உயிரியல் உற்பத்தித்திறன் மற்றும் கார்பன் பிரித்தெடுக்கும் திறனைக் கொண்ட தனித்துவமான, இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் 2023-24ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், கடலோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (MISHTI) திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் ஜூன் 5, 2023 அன்று தொடங்கப்பட்டது.
இருப்பினும், இந்த முன்முயற்சிகளை தாண்டி, விழிப்புணர்வை உருவாக்குவது, சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, ஒன்றையொன்று சிறந்த நடைமுறைகளை உள்ளடக்குவது மற்றும் மாறிவரும் காலநிலை சூழ்நிலைகளுக்கு ஏற்ப சதுப்புநில வழிமுறைகளை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தி அறிவியல் ஆய்வுகளை நடத்துவதும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, கடலின் மாறுபடும் உப்புத்தன்மை, கழிமுகங்களுக்கு நன்னீரின் குறைவு, மற்றும் உயரும் உலக வெப்பநிலைகள் ஆகியவற்றை புரிந்துகொள்வது அவசியம்.
ஒவ்வொரு பிராந்தியத்திலும் சதுப்புநிலப் பாதுகாப்பைத் தடுக்கும் முக்கியப் பிரச்சினைகளை நாம் கண்டறிய வேண்டும். பின்னர், அவற்றைக் காப்பாற்ற சிறந்த வழிகளைத் திட்டமிடலாம். சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக நமது சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்க, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய பொதுவான உலகளாவிய உத்தி வகுக்கப்பட வேண்டும்.