சமீபத்தில், மாநிலங்களவைக்கு நான்கு புதிய உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் என்ன? பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
தற்போதைய செய்தி :
அரசாங்கம் மாநிலங்களவைக்கு நான்கு புகழ்பெற்ற நபர்களை பரிந்துரைத்துள்ளது. அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகம், கேரள பாஜக தலைவர் சி சதானந்தன் மாஸ்டர் மற்றும் வரலாற்றாசிரியர் மீனாட்சி ஜெயின் உள்ளிட்ட நபர்களை அரசாங்கம் மாநிலங்களவைக்கு பரிந்துரைத்தது.
இப்போது, மாநிலங்களவைக்கு யார், எப்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம். மேலும், மாநிலங்களவையில் ஏன் 'பரிந்துரைக்கப்பட்ட' (‘nominated’) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்?
முக்கிய அம்சங்கள் :
1. மத்திய உள்துறை அமைச்சகமானது சனிக்கிழமை தாமதமாக ஒரு அறிவிப்பில், இந்திய அரசியலமைப்பின் 80வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாநிலங்களவைக்கு சில நபர்களை குடியரசுத் தலைவர் பரிந்துரைத்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் சில உறுப்பினர்களின் ஓய்வு காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புகின்றன. இதில், பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் ஸ்ரீ உஜ்வால் தியோராவ் நிகம், ஸ்ரீ சி. சதானந்தன் மாஸ்டர், ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் டாக்டர் மீனாட்சி ஜெயின் போன்றோர் அடங்குவர்.
2. அரசியலமைப்பின் 80வது பிரிவு, மாநிலங்களவை (Composition of the Council of States) எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. மாநிலங்களவையில் குடியரசுத்தலைரால் பரிந்துரைக்கப்படும் பன்னிரண்டு உறுப்பினர்களும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 238 உறுப்பினர்களும் இருப்பார்கள் என்று அது கூறுகிறது. பிரிவு 80 (3) இலக்கியம், அறிவியல், கலை அல்லது சமூகப் பணிகளில் சிறப்பு அறிவு அல்லது அனுபவம் உள்ளவர்களை ஜனாதிபதி பரிந்துரைக்க முடியும்.
"குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள், சிறந்த அறிவு அல்லது நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. அதாவது இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவைகளில் ஈடுபாடு உடையவராக இருக்க வேண்டும்.
3. ஒரு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அவையில் அமர்ந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு அரசியல் கட்சியில் சேரலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் சலுகைகளும் அவர்களுக்கு உண்டு. மற்ற உறுப்பினர்களைப் போலவே அவர்களும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.
4. பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், அவர்களுக்கு துணைகுடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது.
மாநிலங்கவையில் பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கான விதி ஏன் உள்ளது?
5. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினரான என். கோபாலசாமி அய்யங்கார், அரசியலமைப்பில் ஒரு விதியைச் சேர்ப்பதை ஆதரித்தார். இந்த ஏற்பாடு மாநிலங்கள் கவுன்சிலுக்கு (மாநிலங்களவை) சிறந்த நபர்களை பரிந்துரைக்க அனுமதிக்கும். அரசியலில் ஆழமாக ஈடுபடாத அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அவர் கூறினார். இந்த மக்கள் விவாதங்களில் கலந்து கொண்டு அறிவையும் முக்கியத்துவத்தையும் கொண்டு வர விரும்பலாம். பொதுவாக, இத்தகைய குணங்கள் மக்கள் சபையில் (மக்களவையில்) பொதுவாகக் காணப்படுவதில்லை.
6. இருப்பினும், காலப்போக்கில், நியமனத்தின் உயர்ந்த இலட்சியம் பலவீனமடைந்தது. ஆளும் கட்சிகள் அவையில் தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்ட வகையை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன. அவர்கள் உதவிகளை வழங்கவும், தங்களுக்கு விருப்பமான மக்களை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வரவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
மசோதாக்களில் வாக்களிப்பதைத் தாண்டி மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பது ஏன் முக்கியம்?
7. பண மசோதாக்கள் (Money Bills) விவகாரத்தில் மாநிலங்கவையின் பங்கு வரையறுக்கப்பட்டுள்ளது. பண மசோதாவை மாநிலங்கவையால் திருத்த முடியாது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் திருத்தங்களை பரிந்துரைக்கலாம். மேலும், மக்களவை இவை அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
8. எனினும், மாநிலங்கவை சில சிறப்பு அதிகாரங்களை அனுபவிக்கிறது. மாநில பட்டியலில் (State List) பட்டியலிடப்பட்ட ஒரு விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று "தேசிய நலனுக்கு அவசியம் அல்லது பொருத்தமானது" என்று கூறி, உள்ளிருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், நாடாளுமன்றம் அந்த விவகாரத்தில் சட்டம் இயற்ற அதிகாரம் பெறுகிறது. அத்தகைய தீர்மானம் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை நடைமுறையில் இருக்கும். ஆனால், இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்த காலம் ஒரு நேரத்தில் ஒரு வருடம் நீட்டிக்கப்படலாம்.
9. யூனியன் மற்றும் மாநிலங்கள் இரண்டிற்கும் வேலை செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அகில இந்திய சேவைகளை உருவாக்க பரிந்துரைக்க இதேபோன்ற முறையைப் பயன்படுத்தலாம். இந்த சேவைகளை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
10. தேசிய அவசரநிலை, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அல்லது நிதி அவசரநிலை போன்ற அவசரநிலையை குடியரசுத்தலைவர் அறிவிக்கும்போது மாநிலங்களவைக்கும் முக்கிய பங்கு உண்டு. அத்தகைய அறிவிப்பை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கீகரிக்க வேண்டும்.
11. இருப்பினும், சில சூழ்நிலைகளில், மாநிலங்களவை சிறப்பு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டவுடன் மக்களவை கலைக்கப்பட்டால் அல்லது அதன் ஒப்புதலுக்காக கொடுக்கப்பட்ட நேரத்தில் கலைக்கப்பட்டால், அரசியலமைப்பின் 352, 356 மற்றும் 360 வது பிரிவுகளின் கீழ் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் மாநிலங்களவை அதை அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினால் அந்த பிரகடனம் அமலில் இருக்கும்.
மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
1. ராஜ்யசபா ஒரு நிரந்தர சபை. அது ஒருபோதும் கலைக்கப்படுவதில்லை. அதை தொடர்ந்து நடத்த, அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் வெளியேறுகிறார்கள் (அரசியலமைப்பின் பிரிவு 83(1) இன் படி). புதிய உறுப்பினர்கள் தங்கள் இடத்தைப் பிடிக்கத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.
2. ராஜ்யசபாவில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் 233 உறுப்பினர்கள் டெல்லி மற்றும் புதுச்சேரியின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஒரு உறுப்பினர் ராஜினாமா செய்தால், இறந்தால் அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டால், காலியான இடத்தை நிரப்ப இடைத்தேர்தல் (சிறப்புத் தேர்தல்) நடத்தப்படுகிறது. புதிய உறுப்பினர் பழைய உறுப்பினரின் மீதமுள்ள காலத்தை மட்டுமே நிறைவு செய்கிறார்.
3. அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் எத்தனை ராஜ்யசபா இடங்களைப் பெறுகின்றன என்பதை தீர்மானிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டது.
4. ராஜ்யசபா உறுப்பினர்கள் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பிரிவு 80(4) விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறையைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
5. ஒரு வேட்பாளர் வெற்றிபெறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை, எத்தனை இடங்கள் திறந்திருக்கும் மற்றும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு இடம் இருந்தால், வெற்றி பெற்ற வேட்பாளர் பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றையும் சேர்த்து ஒன்றையும் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதிகள் கூறுகின்றன. உதாரணமாக, 100 வாக்குகள் பதிவானால், வேட்பாளர் வெற்றிபெற (100 ÷ 2) + 1 = 51 வாக்குகளைப் பெற வேண்டும்.
6. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட வேண்டியிருந்தால், ஒவ்வொரு முதல் விருப்ப வாக்குக்கும் 100 மதிப்பு வழங்கப்படும். இந்த வாக்கு மதிப்புகள் அனைத்தும் சேர்க்கப்படும். இந்தத் தொகை இடங்களின் எண்ணிக்கையை விட ஒன்றால் வகுக்கப்பட்டு, பின்னர் முடிவுடன் 1 சேர்க்கப்படும்.
உதாரணமாக:
3 மாநிலங்களவை இடங்களை நிரப்ப 100 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால்:
ஒதுக்கீடு = (100 × 100) ÷ (3 + 1) + 1 = 2501
எந்த வேட்பாளரும் ஒரு இடத்திற்கு போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், வாக்காளர்களின் இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்படும், ஆனால் ஒவ்வொன்றும் குறைவான மதிப்பைக் கொண்டிருக்கும்.