இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பு ஒரு திருப்புமுனையில் உள்ளது. மேலும், அது ஒரு சலுகையாக இருந்து ஒவ்வொரு இந்தியரின் உரிமையாக மாற வேண்டும்.
இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு முறை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதற்கான பணி இரண்டு மடங்கு உள்ளது. கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்கு அணுகலை விரிவுபடுத்துதல், அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில் மலிவு விலையை உறுதி செய்தல் வேண்டும். இதை அடைய, காப்பீட்டை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல், விதிகளை தெளிவுபடுத்துதல் மற்றும் நீண்டகால முதலீட்டை ஈர்த்தல் ஆகியவற்றின் மூலம் இந்த அமைப்பு மிகவும் இணைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட முறையில் செயல்பட வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட வழியில் பணியாற்றுவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய, மலிவு விலையில், உலகிற்கு ஒரு வலுவான முன்மாதிரியாக விளங்கும் ஒரு சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை இந்தியாவால் உருவாக்க முடியும்.
மலிவு விலையின் அடித்தளமாக காப்பீடு
விலையுயர்ந்த சுகாதாரப் பராமரிப்பை மலிவு விலையில் வழங்குவதற்கான சிறந்த வழி காப்பீடு மூலம் ஆபத்தைப் பகிர்ந்து கொள்வது தான். ஒரு நபருக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை அல்லது ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை போன்ற சிறிய கட்டணங்கள் கூட பல லட்சங்கள் மதிப்புள்ள காப்பீட்டை வழங்க முடியும். இது குடும்பங்களை பெரிய மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்கிறது. இருப்பினும், இதன் பரவலாக்கம் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் வெறும் 15%-18% மக்கள் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளனர், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் காப்பீட்டு சந்தா விகிதம் 3.7% ஆக உள்ளது, இது உலகளாவிய சராசரியான 7% உடன் ஒப்பிடும்போது குறைவாகும். இந்த இடைவெளி குறிப்பிடத்தக்கது, ஆனால் வாய்ப்பும் பெரியது, ஏனெனில் மொத்த எழுதப்பட்ட சந்தாக்கள் 2024-ல் ஏற்கனவே $15 பில்லியனாக உள்ளன மற்றும் 2030 வரை 20%-க்கு மேல் ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காப்பீட்டை மட்டும் நம்பி மலிவு (Affordability) விலை இருக்க முடியாது. காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இணைந்து அதிக மக்களைப் பாதுகாக்கவும், நோயைத் தடுப்பதில் கவனம் செலுத்தவும், அவசரநிலைகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு கருவியாக மாற்றும்போது உண்மையான தாக்கம் ஏற்படும்.
இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு முறை, மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு நல்ல பராமரிப்பை எவ்வாறு வழங்குவது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளது, உலகம் இதை இப்போது தான் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஒரு காந்த ஒத்திசைவு படமெடுப்பு எடுத்தால் (Magnetic resonance imaging (MRI)) ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு பரிசோதனை படங்களைக் கையாளக்கூடிய நிலையில், இந்தியாவில் அதே இயந்திரம் அந்த அளவைவிட பல மடங்கு அதிகமாக நிர்வகிக்கிறது. தரத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் வளங்களை நீட்டிக்கும் இந்த திறன் தற்செயல் நிகழ்வு அல்ல. இது மருத்துவர்-நோயாளி விகிதங்கள், பணிப்பாய்வு வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பயன்பாட்டில் பல ஆண்டுகால புத்திசாலித்தனத்தின் விளைவாகும்.
அடுத்த கட்டம் எளிமையானது: இந்தியாவின் பரந்த மையப்பகுதிக்கு இந்தத் திறனை விரிவுப்படுத்த வேண்டும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் போதுமான சேவையைப் பெறவில்லை. ஆனால், அவை உண்மையான எல்லையைக் குறிக்கின்றன. இந்தப் பகுதிகளில் இந்தியா தனது நகர்ப்புற செயல்திறனைப் பிரதிபலிக்க முடிந்தால், அது அணுகல் இடைவெளியை மட்டும் நிரப்பாது. அளவு, புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவை சுகாதாரப் பராமரிப்பை எவ்வாறு மறுவடிவமைக்க முடியும் என்பதற்கான உலகளாவிய அளவுகோலை இது அமைக்கக்கூடும்.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana, or PM-JAY))) போன்ற திட்டங்கள் அணுகலை மறுவரையறை செய்துள்ளன. ஏறக்குறைய 500 மில்லியன் மக்களை உள்ளடக்கி, ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மேம்பட்ட பராமரிப்புக்காக, PM-JAY ஆனது பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மில்லியன் கணக்கான பணமில்லா சிகிச்சைகளை செயல்படுத்தியுள்ளது. பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் புற்றுநோய் சிகிச்சைகள் ஏறக்குறைய 90% அதிகரித்துள்ளதாக அதன் தாக்கம் தெரியவந்துள்ளது.
அடுத்த 500 மில்லியனை எட்டுவதற்கு அரசு ஆதரவு திட்டங்களில் தனியார் மருத்துவமனை பங்களிப்பை விரிவுபடுத்துவது அவசியம். ஆனால், இது நியாயமான திருப்பிச் செலுத்துதல் மற்றும் வெளிப்படையான செயல்முறைகளில் தொகுக்கப்பட வேண்டும். வழங்குநர்களுக்கான நம்பகத்தன்மையையும் நோயாளிகளுக்கான உண்மையான மதிப்பையும் உறுதி செய்கிறது.
தடுப்பே மிகவும் சக்திவாய்ந்த செலவு-சேமிப்பு முறையாகும்
பஞ்சாபில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக காப்பீடு உள்ள குடும்பங்கள்கூட மிக அதிக செலவுகளை எதிர்கொண்டதாகக் காட்டியது. இந்தத் தீர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, வழக்கமான மருத்துவர் வருகைகள் மற்றும் பரிசோதனைகளை உள்ளடக்கும் வகையில் காப்பீட்டை மாற்றுவது, இரண்டாவதாக, நோய்களைத் தடுக்க நாடு முழுவதும் ஒரு பெரிய முயற்சியைத் தொடங்குவது. ஆனால், பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் இது முழுமையடையாது.
காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் சேர்ந்து, மக்கள் அபாயங்களைத் தவிர்ப்பது, கவனமாக இருப்பது மற்றும் விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம் நோயைத் தடுப்பது பற்றி சிந்திக்க வேண்டும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுக்கு பணம் செலவிடுவது பின்னர் மருத்துவ சிகிச்சைகளில் அதிக சேமிப்பை அளிக்கிறது. பள்ளிகள், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் அனைவரும் நோய்த்தடுப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்தியா வளர்ந்து வரும் நோய்களின் பிரச்சனையைக் குறைத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
இந்தியா ஆரம்பத்தில் தொலை மருத்துவத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது, இப்போது செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கடுமையான தொற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய, சோதனை முடிவுகளை வரிசைப்படுத்த அல்லது மருத்துவர்கள் தொலைதூரத்தில் இருந்து நோயாளிகளை அணுக அனுமதிக்கும் கருவிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் நோயாளிகளின் விளைவுகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணித்திறனையும் மேம்படுத்துகின்றன.
தொலை மருத்துவ ஆலோசனைகள் என்பது ஒரு பெருநகரத்தில் உள்ள ஒரு இருதயநோய் நிபுணர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு சிகிச்சையை வழிகாட்ட முடியும் என்பதாகும். அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்துடன் இணைந்து, இத்தகைய கண்டுபிடிப்புகள் நாடு முழுவதும் உலகளாவிய சுகாதார பதிவுகளையும் தொடர்ச்சியான பராமரிப்பையும் செயல்படுத்த உதவும்.
விடுபட்ட இணைப்பாக கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கை
புதிய சுகாதாரப் பராமரிப்பு தொழில்நுட்பங்கள் நம்பிக்கைக்குரியவை. ஆனால், சிக்கல்கள் இன்னும் உள்ளன. எடுத்துக்காட்டாக, மாசுபாடு அதிக சுவாச நோய்களை ஏற்படுத்துவதால், புது தில்லியில் உள்ள காப்பீட்டாளர்கள் சந்தா கட்டணங்களை 10% முதல் 15% வரை உயர்த்த விரும்புகிறார்கள். சுற்றுச்சூழல் சுகாதாரப் பராமரிப்பை எவ்வாறு அதிக விலைக்குக் கொண்டுவருகிறது என்பதை இது காட்டுகிறது. மக்களைப் பாதுகாக்க விதிகள் இல்லாமல், பலர் காப்பீடு மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதலாம். இதனால்தான் வலுவான கட்டுப்பாடு முக்கியமானது. காப்பீட்டு உரிமைகோரல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன மற்றும் புகார்கள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை மேம்படுத்த நிதி அமைச்சகம் காப்பீட்டு ஆணையத்திடம் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) கேட்டுள்ளது. ஏனெனில், அதிகமான மக்கள் காப்பீடு வாங்க நம்பிக்கை முக்கியமானது. கோரிக்கைகள் நியாயமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று மக்கள் நம்பவில்லை என்றால், அவர்கள் காப்பீட்டை விரும்ப மாட்டார்கள். அதிகமான மக்கள் காப்பீடு பெறவும் காப்பீட்டைப் பற்றி நம்பிக்கையுடன் உணரவும் உதவும் நல்ல விதிகள் மற்றும் நியாயமான விலைகள் தேவை.
2023-ஆம் ஆண்டில், இந்தியாவின் சுகாதாரத் துறை தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதனத்தில் $5.5 பில்லியனை ஈர்த்தது, இது டிஜிட்டல் சுகாதாரம், மருந்தக வலைப்பின்னல்கள் மற்றும் மருத்துவமனைகளை ஊக்குவித்தது. ஆனால், மூலதனம் பெருநகரங்களை நோக்கியே உள்ளது. உண்மையான சோதனை இதை அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களுக்கு வழிநடத்துகிறது. முதன்மை வலைப்பின்னல்களை உருவாக்குகிறது மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கமாக மாற்றும் வகையில் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. காப்பீடு வழக்கமான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மருத்துவர்களும் மருத்துவமனைகளும் புத்திசாலித்தனமான முறையில் வளர வேண்டும். நோயைத் தடுப்பது காலப்போக்கில் பணத்தை மிச்சப்படுத்தும், மேலும் தொழில்நுட்பம் அதிகமான மக்கள் சிகிச்சை பெற உதவும். சரியான முதலீடுகள் மற்றும் அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான வலுவான குழுப்பணி மூலம், நியாயமான, வலுவான மற்றும் நீடித்த ஒரு சுகாதார அமைப்பை நாம் உருவாக்க முடியும். சுகாதாரப் பராமரிப்பு ஒரு ஆடம்பரமாக இருக்கக்கூடாது. ஆனால், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உரிமையாக இருக்க வேண்டும்.
சங்கீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார்.