பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் E20 கட்டாயத்திற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? இந்தியா எத்தனால் பயன்பாட்டிற்கு கரும்பை நம்பியிருப்பது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்தது? இந்தியாவின் வளர்ந்து வரும் எத்தனால் பொருளாதாரத்திற்கு அமெரிக்கா எவ்வாறு எதிர் வினையாற்றியது? மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது ஏன் மிகவும் மெதுவாக உள்ளது?
20% எத்தனால் கொண்ட E20 பெட்ரோல், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் விற்கப்படுகிறது. இது சமீப காலமாக செய்திகளில் அதிகம் இடம்பிடித்துள்ளது. உயிர்எரிபொருள்கள் தொடர்பான தேசிய கொள்கை (National Policy on Biofuels) இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது.
இந்தியாவில் எத்தனால் கலப்பு 2014-ஆம் ஆண்டில், வெறும் 1.5%-ஆக இருந்ததிலிருந்து 2025ஆம் ஆண்டில் 20%-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அரசாங்கம் கரும்புத் தொழிலுக்கு அளித்த வலுவான நிதி ஊக்கத்தொகைகள் முக்கியக் காரணியாக இருந்தன.
எத்தனால் கலப்பு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்தல் போன்ற பல்வேறு இலக்குகளை அடைகிறது என்று அரசாங்கம் கூறினாலும், சுற்றுச்சூழலுக்கு அதன் நன்மைகள் குறித்து நெருக்கமான ஆய்வு தேவைப்படுகிறது.
வாகன உரிமையாளர்கள் இந்த மாற்றத்திற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்?
2023ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்கப்படும் வாகனங்கள் E20 ஒட்டுப்படங்களுடன் (stickers) வருகின்றன. இது 20% எத்தனால் கலந்த பெட்ரோலுடன் பொருந்தக்கூடிய தன்மையைக் குறிக்கிறது. கூடுதலாக, உற்பத்தியாளர்கள் பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்துள்ளனர்.
எரிபொருளுக்கு நேரடியாக வெளிப்படும் ரப்பர், மீள்திற ரப்பர் துணி (elastomers) மற்றும் நெகிழிக் கூறுகள் போன்ற பொருள் கலவையும் E20 பொருந்தக்கூடிய பொருட்களாக மாற்றப்பட வேண்டும் என்று Hero Motocorp தனது இணையதளத்தில் கூறுகிறது.
இருப்பினும், லோக்கல் சர்க்கிள்ஸின் கூற்றுப்படி, மூன்றில் இரண்டு பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் E20 ஆணைக்கு எதிராக உள்ளனர். 315 மாவட்டங்களில் கணக்கெடுக்கப்பட்ட 36,000 பேரில் வெறும் 12% பேர் மட்டுமே இந்த மாற்றத்திற்கு ஆதரவாக உள்ளனர். எரிபொருள் சேமிப்பு திறன் குறைவு மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததை விமர்சகர்கள் குறிப்பிட்டனர். நுகர்வோர் தாங்கள் விரும்பும் எரிபொருள் வகையைத் தேர்வு செய்ய அனுமதிக்குமாறு ஒன்றிய அரசை இந்த ஆய்வு வலியுறுத்தியது.
இயந்திர செயல்திறனில் "சிறிதளவு சரிவு" ஏற்பட்டதாக ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டாலும், "மேம்பட்ட இயந்திர சரிசெய்தல் மற்றும் E20-இணக்கமான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை மேலும் குறைக்க முடியும்" என்று கூறியது. நுகர்வோர் கோபத்தை "சொந்த, பொருளாதார நலன்களால்" எளிதாக்கப்பட்ட "அவதூறு பிரச்சாரம்" என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அழைத்தார்.
ஒன்றியஅரசு அதன் E20 கொள்கையைப் பாதுகாக்க முயற்சிக்கும் அதே வேளையில், அதன் சொந்த சிந்தனைக் குழுவான NITI ஆயோக், ‘E10 மற்றும் E20 எரிபொருளுக்கான வரி சலுகைகள்’ மூலம் ‘எத்தனால் கலந்த எரிபொருட்களால் ஏற்படும் செயல்திறன் வீழ்ச்சிக்கு நுகர்வோருக்கு ஈடுசெய்ய’ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அமைச்சரின் கூற்றுப்படி, ‘2014-15ஆம் ஆண்டு முதல் இந்தியா பெட்ரோல் மாற்றீட்டின் மூலம் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் வெளிநாட்டு செலாவணியை ஏற்கனவே சேமித்துள்ளது’. ஆனால், வாடிக்கையாளருக்கு பலன் இறுதியாக கிடைத்ததா?
தி இந்துவின் பகுப்பாய்வில், கோல் இந்தியா லிமிடெட், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (Oil & Natural Gas Corporation (ONGC)), இந்திய எண்ணெய்கழகம் (Indian Oil Corporation (IOC)), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharat Petroleum Corporation (BPCL)) மற்றும் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவை கூட்டாக ரூ.1.27 லட்சம் கோடி பங்களித்தன.
இது 2020-21 மற்றும் 2024-25 க்கு இடையில் வங்கி அல்லாத பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து (Public Sector Undertaking (PSUs)) ஒன்றிய அரசு பெற்ற மொத்த ரூ.3 லட்சம் கோடி ஈவுத்தொகையில் 42.3% ஆகும். IOC மற்றும் BPCL இணைந்து 2022-23 முதல் தங்கள் ஈவுத்தொகை செலுத்துதல்களில் 255% உயர்வையும் எண்ணெய் விலையில் 65% குறைப்பையும் கண்டன. இருப்பினும், இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல் விலையில் 2% குறைப்பை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கின.
விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
கரும்பு சார்ந்த எத்தனால் விநியோகம், 2014ஆம் நிதியாண்டில் 40 கோடி லிட்டரிலிருந்து ஏறக்குறைய 670 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. இது மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 9% ஆகும்.
இது 2024-ஆம் நிதியாண்டில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு, நிதியாண்டு 2015 முதல் ‘விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் கோடிக்கு மேல்’ செலுத்தியுள்ளதாகக் கூறுகிறது. ஆனால், எத்தனாலுக்கு இந்தியா கரும்பை நம்பியிருப்பது எவ்வளவு சுற்றுச்சூழலுக்கு உகந்தது?
ஒரு டன் கரும்பு பயிரிட 60-70 டன் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் கரும்பு பயிரிடும் பல பகுதிகளுக்கு பயிரின் சிறந்த வளர்ச்சிக்கு தேவையான 1,500 முதல் 3,000 மில்லிமீட்டர் மழை கிடைக்கவில்லை. இது நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் நீடிக்காத நீர்ப்பாசன முறைகளுக்கு வழிவகுக்கிறது.
2023-ஆம் ஆண்டு ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Groundwater Board) அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் கரும்பு பயிரிடும் மாவட்டங்கள் அருகில் உள்ள பகுதிகளைவிட அதிக நிலத்தடி நீரை எடுக்கின்றன. அந்த மாநிலத்தில் கரும்பு விவசாயிகளிடையே துயரம் பரவலாக அறிக்கையிடப்பட்டுள்ளது. நீடிக்காத விவசாய நடைமுறைகள் நில சீரழிவை துரிதப்படுத்துகின்றன.
இந்தியாவின் பாலைவனமாக்கல் மற்றும் நில சீரழிவு வரைபடம் 2021 (Desertification and Land Degradation Atlas of India) இந்தியாவின் நிலத்தில் ஏறக்குறைய 30% அழிந்துள்ளதாக கண்டறிந்தது. கரும்பின் நீர் தீவிர தன்மை மற்றும் கடுமையான வானிலையின்போது நிலத்தடி நீர் இருப்பு மீதான தாக்கம் எத்தனால்-கலந்த பெட்ரோல் பற்றிய விவாதத்தில் இருந்து விடுபட்டுள்ளது.
இருப்பினும், எத்தனால் விநியோகத்தை பன்முகப்படுத்த முயற்சிப்பதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் எத்தனாலுக்கான அரிசி ஒதுக்கீடு சாதனை அளவில் 5.2 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. இது உற்பத்தியில் 3.6% ஆகும்.
இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 3,000 டன்களுக்கும் குறைவாக இருந்தது. இதேபோல், 2024-25-ஆம் ஆண்டில், சோள உற்பத்தியில் 34%-க்கும் அதிகமானவை எத்தனால் உற்பத்திக்காக திருப்பி விடப்பட்டன. இந்த மாற்றத்தால், இந்தியா 2024-25-ஆம் ஆண்டில் 9.7 லட்சம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது — இது கடந்த ஆண்டு இறக்குமதி செய்த 1.37 லட்சம் டனைவிட 6 மடங்கு அதிகமாகும்.
பன்முகப்படுத்துதல் முயற்சிகள் இருந்தபோதிலும், கடந்த பருவத்தில் கரும்பு சாகுபடி 57.11 லட்சம் ஹெக்டேரில் இருந்து இந்த ஆண்டு 57.24 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கரும்புக்கான உறுதியான கட்டண வழிமுறையான நியாயமான மற்றும் ஊதிய விலை நிர்ணயம் (Fair and Remunerative Pricing), விவசாயிகள் நிலையான வருமானத்திற்கான ஆதாரமாக பயிரை நம்புவதற்கு முக்கிய காரணமாகும். இப்போது உயர்வு சிறியதாக இருந்தாலும், OECD-FAO ஆய்வின்படி, 2034ஆம் ஆண்டில் இந்தியாவின் கரும்பின் 22% எத்தனாலை தயாரிக்க பயன்படும் என்று கூறுகிறது.
இந்தியாவின் வளர்ந்துவரும் எத்தனால் பொருளாதாரம் அமெரிக்காவின் கவனத்திற்கு சென்றுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவை தனது எத்தனால் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில், தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கை (National Trade Estimate report) இந்தியாவின் கொள்கையை குறிப்பிடத்தக்க ‘வர்த்தகத் தடை’ (trade barrier) என்று குறிப்பிட்டது.
இறக்குமதி தளர்வு எத்தனால் உற்பத்தியில் பல ஆண்டுகால முதலீடு மற்றும் திறன் மேம்பாட்டைக் கணிசமாக குறைக்கக்கூடும். இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (Indian Sugar Mills Association) அரசாங்கத்தை கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இது மின்சார வாகனங்களுக்கு மாறுவதைப் பாதிக்குமா?
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மாற்றப்பட்டதன் மூலம், ‘இந்தியாவுக்கு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை 700 லட்சம் டன்கள் குறைக்க உதவியுள்ளது’ என்று கூறியுள்ளது. இருப்பினும், மின்சார வாகனங்களுக்கு (electric vehicles (EV)) மாறுவது உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் போக்குவரத்து கார்பன் வெளியீட்டை (transport decarbonisation) குறைக்க உதவும்.
இது ஆற்றல் மற்றும் தொழில்துறைக்குப் பிறகு 3-வது பெரிய கார்பன்-உமிழும் துறையாகும். பெய்ஜிங் போன்ற நகரங்கள் விரைவாக மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் காற்று மாசுபாட்டை வெற்றிகரமாகக் குறைத்துள்ளன. இது செயல்பாட்டிற்கு வர, மின்சார வாகனங்கள் நிலக்கரியைவிட புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்பட வேண்டும். இதனால் கார்பன் வெளியேற்றத்தை உண்மையிலேயே குறைக்க முடியும்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் மெதுவாக உள்ளது.
2024-ஆம் ஆண்டில், வாகன விற்பனையில் 7.6% மின்சாரம் சார்ந்ததாக இருந்தது. 2030-ஆம் ஆண்டுக்குள் அரசாங்கத்தின் சொந்த இலக்கான 30 சதவீதத்தை அடைய, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை 22%-க்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) பரவலான பயன்பாட்டிற்கு மற்றொரு சவாலாக இருப்பது, அரிய மண் தனிமங்களை (REE) சார்ந்திருப்பது ஆகும். சுரங்க அமைச்சகத்தின் கூற்றுப்படி, சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, 2023-24-ஆம் ஆண்டில் 2,270 டன் அரிய மண் தனிமங்கள் மற்றும் அவற்றின் கலவைகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால், இந்த ஒப்பீட்டளவில் குறைவான அளவு, தற்போதைய மின்சார வாகன உற்பத்தியை தக்கவைக்க தொழிற்துறைக்கு முக்கியமானது. பல அரிய மண் தனிமங்களின் உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் புவியியல் ரீதியாக சீனாவில் குவிந்துள்ளதால், உலகளாவிய விநியோகம் பல்வேறு அபாயங்களுக்கு ஆளாகிறது.
மோட்டார் வாகன தொழில்துறையும் (automotive industry) அரிய மண் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு குறித்து எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, அதன் புதிய மின்சார வாகனமான இ-விட்டாராவின் உற்பத்தி இலக்குகளை குறைத்துள்ளது. அரிய மண் தனிமங்கள் காந்தங்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற உற்பத்தியாளர்களும் இடையூறுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
Crisil Ratings சீனியர் இயக்குனர் அனுஜ் சேதி (Crisil Ratings Senior Director Anuj Sethi) கூறுகையில், மூலப்பொருட்களின் குறைபாடு, மின்னணு வாகனங்களை அதிகம் வெளியிடத் திட்டமிடும் நேரத்தில் ஏற்பட்டுள்ளது. இப்போது, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் கொஞ்சம் மேம்பட்டுள்ளதால், இந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மிக முக்கியமான ஒரு அரிய உலோகமான ஜெர்மேனியம் பற்றிய குறைபாட்டை தீர்க்க, இந்திய அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முன்னோக்கிச் செல்லும்போது, 20%-க்கும் அதிகமான எத்தனால் கலப்பை ஒன்றிய அரசு முன்னெடுக்க விரும்புகிறதா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை தற்போது நிலவுகிறது. அமைச்சர் பூரி, 20%-க்கும் அதிகமான எத்தனால் கலப்புக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் என்று கூறியிருந்தாலும், மார்ச் மாதத்தில் ஒன்றிய அரசு இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியது.