நெசவுத் துறையில் இந்தியா ஏன் ஒரு முக்கிய அங்கமாக நீடிக்கிறது? -ஐஸ்வர்யா குமார்

 தொழில்துறைத் தலைவர்கள், அதிக வரிகள் மூலம் நெசவுத்துறை  பாதிக்கக்கூடும் என்று கூறுகின்றனர். ஆனால், இந்தியாவின் பருத்தி, விநியோகச் சங்கிலி மற்றும் திறமையான தொழிலாளர்கள் மூலம் உலகளாவிய நெசவுத்துறையில் இந்தியாவை இன்றியமையாததாக வைத்திருக்கிறார்கள்.


உலக நெசவுத் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அதன் வளர்ச்சி வெறும் வரி விதிகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா அதிக 50 சதவீத வரியை விதித்திருந்தாலும், உலகளாவிய நெசவு சங்கிலியில் இந்தியாவின் இடம் வரி கணக்கீடுகளைவிட மிகப் பெரியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவின் வலிமை அதன் மூலப்பொருள் தளத்திலிருந்து வருகிறது என்று நிட் கேலரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ. விஜய் ஆனந்த் விளக்கினார். சீனாவிற்குப் பிறகு இந்தியா இரண்டாவது பெரிய பருத்தி உற்பத்தியாளராக உள்ளது, இது வங்கதேசம், வியட்நாம் மற்றும் இலங்கை போன்ற போட்டியாளர்களைவிட அதற்கு ஒரு பெரிய நன்மையை அளிக்கிறது.


மூலப்பொருள் விளிம்பு


உலக நெசவு சந்தையில் இந்தியா ஒரு வலுவான பங்கை வகிக்கிறது. இது உலகின் நெசவு ஏற்றுமதி வருவாயில் சுமார் 12–13% பங்களிக்கிறது மற்றும் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக சந்தையில் இந்தியா கிட்டத்தட்ட 11% பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் $6.5 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. 


அதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. மற்றும் உயர்தர வகை போன்ற பிரதான பருத்தி ஏற்றுமதியில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.  பெரிய அளவிலான சாகுபடி, அதிக சந்தை விலைகள் மற்றும் வங்கதேசம், வியட்நாம் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு பல வகையான பருத்தியை  ஏற்றுமதி  செய்யும் திறன் போன்றவை இந்தியாவின் பருத்தி உற்பத்திக்கு காரணமாக உள்ளது என  PDS லிமிடெட் குழும தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஜெயின் கூறினார்.


வர்த்தகக் கொள்கையில், இந்தியாவின் போட்டியாளர்களுக்கான கட்டணச் சலுகைகள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுகின்றன என்று ZYOD-ன் இணை நிறுவனர் அங்கித் ஜெய்புரியா கூறினார்.


வர்த்தகக் கொள்கையில், இந்தியாவின் போட்டியாளர்களுக்கான கட்டணச் சலுகைகள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, அமெரிக்கா வங்கதேசம் அல்லது வியட்நாமுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கவில்லை. 


வியட்நாமில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம் மட்டுமே உள்ளது. இது ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அல்ல, பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு தளமாக மட்டுமே உள்ளது.


வங்கதேசம் மற்றும் வியட்நாமுடனான கட்டண வேறுபாடுகள் வாங்கும் முறைகளை பாதிக்கலாம். ஏனெனில், இந்த நாடுகள் மிகக் குறைந்த கட்டண விகிதங்களை (சுமார் 20%) அனுபவிக்கின்றன. இருப்பினும், இந்த மாற்றங்கள் மெதுவாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒருங்கிணைப்பு, ஒரு பாதுகாப்பு அரணாக


இந்தியாவின் அடித்தளம் பருத்தி என்றால், ஒருங்கிணைப்புதான் அதன் பலம். இந்தியாவைப் போல மூலப்பொருள், நூற்பு, நெசவு, பதப்படுத்துதல் மற்றும் ஆடை தயாரித்தல் ஆகியவற்றை ஒன்றாகக் கையாளும் நாடுகள் மிகச் சிலவே. ஜெயின் கூற்றுப்படி, இந்தியா வாங்குபவர்களுக்கு செலவுத் திறன், வரிசை அளவுகளில் நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒரே அமைப்பிற்குள் மூல இழைகளை முடிக்கப்பட்ட ஆடைகளாக மாற்றும் திறனை வழங்குகிறது.

பல வணிகங்கள் சிக்கித் தவிப்பதாக ஆனந்த் மேலும் கூறினார். மற்ற நாடுகளில் புதிய இறக்குமதியாளர்களிடம் விரைவாக மாறுவது மிகவும் கடினம். முதலில், சிலர் செலவுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமோ அல்லது LDP ஏற்றுமதி முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமோ 25 சதவீத கட்டணத்தைக் கையாள முயன்றனர். ஆனால் புதிய 50 சதவீத வரியால், வணிகத்தின் பெரும்பகுதி நின்றுவிட்டது.


அப்பல்லோ ஃபேஷன் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் தலைவர் ஷிராஸ் அஸ்காரி கூறுகையில், ஜவுளித் துறையில் மட்டுமல்ல, தோல் உற்பத்தியிலும் சவால்கள் உள்ளன. 50 சதவீத அமெரிக்க வரி ஒரு பெரிய குறுகிய காலப் பிரச்சினையாகும். 


மேலும் வாங்குபவர்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) உள்ள நாடுகளில் சப்ளையர்களைத் தேடுவதால் ஆர்டர்கள் குறையக்கூடும். இருப்பினும், இந்த மாற்றங்கள் நேரம் எடுக்கும். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான FTAக்கள் சில நிவாரணங்களைத் தருகின்றன. ஆனால், இங்கிலாந்து ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டிருந்தாலும்  பாராளுமன்ற ஒப்புதலைப் பெற ஒன்பது மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அவர் கூறினார்.


FTAக்கள் இந்தியாவிற்கு முக்கியமானவை என்றாலும், அவை இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட அமெரிக்க சந்தையின் அளவைப் பொருத்த முடியாது என்று PDS-ன் ஜெயின் கூறினார். 


ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் ஒப்பந்தங்கள், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் உடனான நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களுடன், வளர்ந்து வரும் சந்தைகளுக்கு வரி இல்லாத அணுகலைத் திறக்கும் என்று அவர் விளக்கினார். ஆனால் அமெரிக்கா தொடர்ந்து மிக முக்கியமான சந்தையாக இருக்கும்.


முன்னோக்கிச் செல்லும் வழி


உலகளாவிய அரசியலும் மாறிவரும் வர்த்தக விதிகளும் விநியோகச் சங்கிலிகளை மறுவடிவமைத்து வருகின்றன. ஏற்றுமதியாளர்கள் மத்திய கிழக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்குள் விரிவடைவதன் மூலம் அபாயங்களைக் குறைத்து வருகின்றனர். 


அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் மெதுவாக நகர்ந்து, பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக செலவு-பகிர்வு மற்றும் தயாரிப்பு கலவை மாற்றங்களை முயற்சிக்கின்றனர். பலர் இந்தியாவின் நிலைத்தன்மையை குறைந்த கட்டணங்களின் குறுகிய கால நன்மைகளுடன் ஒப்பிடுகிறார்கள் என்று அஸ்காரி கூறினார்.


மேலும் ஜெயின், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தக ஒப்பந்தம் மூலம் மத்திய கிழக்கு கட்டண சலுகைகளை வழங்குகிறது. கிழக்கு ஆப்பிரிக்கா ஒரு செலவு குறைந்த மையமாக மாறி வருகிறது, மேலும் லத்தீன் அமெரிக்கா, குறிப்பாக அமெரிக்காவிற்கு அருகிலுள்ள ஏற்றுமதி, கவனத்தை ஈர்த்து வருகிறது என்றார்.


இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (Clothing Manufacturers Association of India (CMAI)) தலைமை வழிகாட்டியும், கிரியேட்டிவ் குரூப் ஆஃப் கம்பெனிகளின் இயக்குநருமான ராகுல் மேத்தா, வரிவிதிப்பு பிரச்சினை ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது என்று கூறினார். 


ஏற்றுமதியாளர்கள் ஒரே சந்தையை நம்பியிருக்க முடியாது என்று அவர் விளக்கினார். அவர்கள் தங்கள் சந்தைகள் மற்றும் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்த வேண்டும், மேலும் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள உள்நாட்டு சந்தையையும் கருத்தில் கொள்ள வேண்டும். 


குறுகிய காலத்தில், ஏற்றுமதியாளர்கள் நிதி நெருக்கடி, வேலை இழப்புகள் மற்றும் தொழிற்சாலை மூடல்களை சந்திக்க நேரிடும். ஆனால் நீண்ட காலத்திற்கு, இந்திய ஏற்றுமதியாளர்கள் மீண்டு வளர உலகளவில் மற்றும் உள்நாட்டில் போதுமான வாய்ப்புகள் உள்ளன.


இந்த பல்வகைப்படுத்தலை மேத்தா ஒரு நீண்டகால பாதுகாப்புத் திட்டமாக விவரித்தார். இது முடிவுகளைக் காட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாகும்.  பருத்தியைத் தாண்டி, கை பூந்தையல் (embroidery), மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள், கைத்தறி, காதி மற்றும் சணல் போன்ற துறைகளில் இந்தியா வலுவாக உள்ளது என்றும் அவர் கூறினார். வரிவிதிப்புகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் கைவினைத்திறன் மற்றும் திறன்களுக்கு உலகில் சில மாற்று வழிகள் உள்ளன என்று அவர் கூறினார்.


தற்போது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர், பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக தெளிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இருப்பினும், தொழில்துறைத் தலைவர்கள், அதிக வரிகள் மூலம் நெசவுத்துறை  பாதிக்கக்கூடும் என்று கூறுகின்றனர். ஆனால், இந்தியாவின் பருத்தி, விநியோகச் சங்கிலி மற்றும் திறமையான தொழிலாளர்கள் மூலம் உலகளாவிய நெசவுத் துறையில் இந்தியாவை இன்றியமையாததாக வைத்திருக்கின்றனர்.



Original article:

Share: