வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, சுதந்திரத்திற்கான கோரிக்கை பல்வேறு வழிகளில் வலுப்படுத்தப்பட்டது - தெரு ஆர்ப்பாட்டங்கள் முதல் சிறையில் எழுதப்பட்ட இலக்கிய பிரதிபலிப்புகள் வரை. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கை மறுவடிவமைக்கும் மாற்றங்கள், இந்த இயக்கத்தைப் புரிந்துகொள்ள தேவையான பின்னணியை எவ்வாறு வழங்குகின்றன?
வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 8, 1942-ல் தொடங்கியது. இயக்கம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஜூலை 14, 1942-ல், காங்கிரஸ் காரியக் கமிட்டி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இந்தியாவை முற்றிலுமாக விட்டு வெளியேறுமாறு கோரிக்கை வைத்து, வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்ற முழக்கத்தை அப்போதைய, சமூகவுடைமை தலைவரும், பம்பாய் மேயருமான யூசுப் மெஹரல்லி உருவாக்கினார்.
இந்திய தேசிய காங்கிரஸின் இளைய தலைவராக பணியாற்றிய மௌலானா அபுல் கலாம் ஆசாத், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பதவியேற்றார். அவர் தனது சுயசரிதையான 1959-ஆம் ஆண்டு ‘India Wins Freedom’-ல் இந்த தீர்மானம் "நாட்டில் மின்னதிர்வு சூழலை" (electric atmosphere in the Country) எப்படி உருவாக்கியது என்று நினைவுகூர்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, மார்ச் 1942-ல், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் போர் அமைச்சரவை, இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவிற்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க Sir Stafford Cripps தலைமையிலான ஒரு தூதுக்குழுவை குழுவை அனுப்பியது. Cripps தூதுக்குழு பணியானது இந்தியாவை போர் முயற்சியில் நெருக்கமாக ஈடுபடுத்துவதையும், வெற்றியின் அடிப்படையில் பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு நிலைமை நிச்சயமற்றதாக இருந்த காலத்தில் அரசியல் அமைதியின்மையைத் தவிர்ப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
மகாத்மா காந்தி தலைமையிலான வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியாவின் நீண்டகால சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முன்னேறிய கட்டமாக நிரூபிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒத்துழையாமை இயக்கம் (Civil Disobedience Movement) 1930–1934-க்கு இடையில் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் முக்கிய கட்டத்தில், முன்னர் குறிப்பிட்டது போல, பிரிட்டன் மற்றும் நேச நாடுகளுக்கு ஆதரவாக இன்னும் அலை திரும்பாத நிலையில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதால் அது மிகவும் முக்கியமானதாக இருந்தது.
நிச்சயமற்ற உலக பின்னணி
மேலும், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், 1942-ன் ஆரம்பத்திலிருந்து, ஜப்பானியர்கள் கிழக்கிலிருந்து படிப்படியாக முன்னேறி, சிங்கப்பூர், மலாயா மற்றும் பர்மா போன்ற பிரிட்டிஷ் பிரதேசங்களை கைப்பற்றினர். மார்ச் 1942-ல், அந்தமான் தீவுகளும் ஜப்பானிடம் தோல்வியடைந்தன. மேலும், அவை இந்தியப் பெருநிலத்தை நோக்கி முன்னேறுவதற்கான அச்சுறுத்தலை அதிகரித்தன.
மக்களின் மனதில் அழுத்தமான கவலையாக இருந்தது, ஜப்பானிய படையெடுப்பு ஏற்பட்டால் இந்தியா எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதே. பிரிட்டிஷ் இராணுவத்தின் பதிலளிப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, ஜப்பானிய முன்னேற்றத்தை எதிர்கொண்டு பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கினால், இந்தியா தனது சுதந்திரத்திற்காக ஜப்பானுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? என்ற கவலை குறிப்பாக சிக்கலானதாக மாறியது.
இரண்டாம் உலகப் போருடன் எழுந்த நிச்சயமற்ற உலகளாவிய சூழ்நிலையே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பின்னணியை பெரிதும் வடிவமைத்தது. இந்திய தேசிய இயக்கத்தின் சில தலைவர்கள் நட்பு சக்திகளுடன் அதிக அனுதாபம் காட்ட முனைந்தனர். அவர்கள் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் என்ற பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் போது ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் பக்கத்தில் இருப்பதாக கூறிக்கொண்டனர். எவ்வாறாயினும், நட்பு சக்திகளுக்கான ஆதரவு போருக்குப் பிறகு இந்தியாவுக்கு சுய ஆட்சியை வழங்குவதற்கு பிரிட்டிஷாரின் தரப்பில் அதிக உறுதிப்பாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு இருந்தது.
அமெரிக்க அதிபர் Franklin Delano Roosevelt இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்று வாதிட்டார். பிரிட்டன் மீது அவர் அழுத்தம் கொடுத்தார் மற்றும் 1941-ல் தனது மாநில ஒன்றியம் உரையில் தனது "நான்கு சுதந்திரங்களை" (Four Freedoms) அவர் மேலும் வலியுறுத்தினார். இந்தியாவில், அப்போதைய Viceroy Lord Linlithgow, 1939-ல் போரின் தொடக்கத்திலேயே, தேசிய தலைமையுடன் ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக போர் முயற்சியில் இந்தியாவின் ஈடுபாட்டை அறிவித்த விதத்தின் மீது ஏற்கனவே கோபம் உருவாகிக்கொண்டிருந்தது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஜவஹர்லால் நேரு The Discovery of India என்ற நூலில், அரசியல் சூழ்நிலை பற்றிய தனது மதிப்பீட்டை பின்வருமாறு வழங்கினார்: அதன் படி, "இந்தியா இந்த வலிமைமிக்க மோதலில் ஆர்வமுடனும் ஆர்வமாகவும் பங்கெடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனெனில், உயர் கொள்கைகள் ஆபத்தில் இருப்பதாக நான் உணர்ந்தேன் மற்றும் இந்த மோதலிலிருந்து இந்தியாவிலும் உலகிலும் பெரிய மற்றும் புரட்சிகர மாற்றங்கள் வரும் என்று தனது கருத்தை வெளிப்படுதினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் பல கைதுகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அகமதுநகர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மகாத்மா காந்தி அருகிலுள்ள பூனாவில் ஆகா கானின் கோடைக்கால அரண்மனையில் தடுத்து வைக்கப்பட்டார். அகமதுநகர் கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் கழித்த காலத்தில், தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மட்டுமல்ல, மிகவும் விரிவான கற்றறிந்த மனிதர்களாகவும் இருந்த நேருவும் ஆசாத்தும் தங்கள் இரண்டு சிறந்த படைப்புகளை எழுதத் தொடங்கினர்.
நேரு தனது மிக முக்கிய படைப்பான The Discovery of India-வை எழுதினார். ஆஸாத் தனது மிகவும் விரும்பப்படும் உருது இலக்கிய கிளாசிக்கான Ghubaar-e-khaatir என்ற படைப்பை எழுதினார். இது அதிகாலை நேரங்களில் மௌலானா தனது விருப்பமான சீன ஜாஸ்மின் தேயிலை (Chinese Jasmine tea) கப்புடன் வாழ்க்கை, இலக்கியம், தத்துவம் மற்றும் வரலாறு போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி சிந்திக்கும் போது எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பாகும். சுவாரஸ்யமாக, J.B. கிருபாளனி மற்றும் பட்டாபி சீதாரமையா போன்ற மற்ற புகழ்பெற்ற சக கைதிகள் மற்றும் புத்திஜீவிகளும் தங்கள் நேரத்தை புத்தகங்கள் எழுதுவதில் கழித்தனர்.
இந்த முக்கியமான தலைவர்கள் சிறையில் தங்கள் நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்பது பற்றிய ஒரு கதையை Ghubaar-e-khaatir சொல்கிறது. சிறிது காலம், அவர்கள் செய்தித்தாள்களைப் படிக்க அனுமதிக்கப்படவில்லை. இரண்டாம் உலகப் போரில் என்ன நடக்கிறது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. நேருவின் The Discovery of India என்ற புத்தகம், ஆகஸ்ட் 9, 1942 முதல் மார்ச் 28, 1945 வரை அகமதுநகர் கோட்டை சிறையில் அவருடன் தங்கியிருந்த சக கைதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எப்படி வடிவமைத்தது
மேலும், வெள்ளையனே வெளையேறு இயக்கத்திற்கு பதிலடியாக இந்தியா பாதுகாப்பு விதிகள் (Defence of India Rules of 1915) அமல்படுத்தப்பட்டன. இதன் பொருள் இராணுவ சட்டதை அமல்படுத்துவதாகும் (martial law). இது பல மரணங்கள் மற்றும் வெகுஜன கைதுகளுக்கு வழிவகுத்தது. மகாத்மா காந்தியின் தலைமையில் ஜூலை 1942-ல் காங்கிரஸ் செயற்குழுவால் நிறைவேற்றப்பட்ட வெள்ளையனே வெளியேறு தீர்மானம், ஒரு வன்முறையற்ற புரட்சியை (non-violent revolution) கற்பனை செய்தது.
இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில் இயக்கம் வன்முறையாக மாறியது. மற்றும் பிரிட்டிஷ் அரசு அதை கட்டுப்பாய்ற்குள் கொண்டு வருவதற்க்கு கணிசமான பலத்தை பயன்படுத்தியது. 1942-ஆம் ஆண்டின் இறுதியிலும், 1943-ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களிலும் போராட்டத்தின் உள்ளூர் வெளிப்பாடுகள் படிப்படியாகக் குறைந்து வந்ததால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முடிவை துல்லியமாகக் கூற முடியாது.
குறிப்பாக, வெள்ளையனே வெளையேறு இயக்கம் உடனடியாக பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் இலக்கை அடையவில்லை. இருப்பினும், இயக்கம் தொடங்கிய ஆகஸ்ட் 1942ஆம் ஆண்டு முதல் இயக்கம் தணிந்த 1944 வரை இரண்டாம் உலகப் போர் எடுத்த போக்கின் சூழலில் இயக்கத்தை புரிந்து கொள்வது முக்கியம். ஜூன் 1944-க்குள், நேச நாடுகளின் படைகள் பிரான்சில் நார்மண்டி கடற்கரையில் (Normandy Beach) இறங்கி ஜெர்மனியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தன. இது நேச நாடுகளின் வெற்றியை குறிக்கின்றது. இதுவே பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை மூத்த காங்கிரஸ் தலைவர்களை விடுவிக்கத் தூண்டியிருக்கலாம்.
நாங்கள் இங்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இரண்டு வருட கனவு வாழ்க்கை ஒரே இடத்தில் வேரூன்றியுள்ளது. அதே சில தனிநபர்கள், அதே வரையறுக்கப்பட்ட சூழல், நாளுக்கு நாள் அதே வழக்கம் ஆகஸ்ட் 13, 1944 தேதியிட்ட 'மீண்டும் அகமதுநகர் கோட்டை' என்ற தலைப்பில், The Discovery of India புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில், நேரு இவ்வாறு குறிப்பிடுகிறார்.
உலக நாடுகளின் கூட்டணியில் இந்தியா இணைகிறது.
காங்கிரஸ் தலைமை சிறையில் இருந்தபோது, முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் லீக் வெளியே தொடர்ந்து செயல்பட்டது. ஜூன் 1945-ல், அப்போதைய Viceroy, Lord Archibald Wavell ஷிம்லாவில் ஒரு மாநாட்டை நடத்துவதாக அறிவித்தார். வருங்கால சுயாட்சியைக் கருத்தில் கொண்டு, இடைக்கால சுயாட்சியை உருவாக்க Viceroy-யின் நிர்வாகக் குழுவில் இந்தியத் தலைவர்களைச் சேர்க்க வேண்டும் என்று முகமது அலி ஜின்னா முன்மொழிந்தார்.
இந்த நேரமானது மாறிய போர்க்கால சூழலை பிரதிபலித்தது. ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும், ஜப்பான் இன்னும் சரணடையவில்லை. இருந்தபோதிலும், முஸ்லிம் லீக் மட்டுமே முஸ்லிம் பிரதிநிதிகளை நிர்வாகக் குழுவிற்கு நியமிக்கும் என்று வலியுறுத்தியதால் சிம்லா மாநாடு தோல்வியடைந்தது.
1942-ஆம் ஆண்டு தூதுக் குழுவின் வருகைக்கு பிறகும், 1945-ஆம் ஆண்டு சிம்லா மாநாட்டிற்கு முன்பும் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆகஸ்ட் 1947-ல் இந்தியாவின் சுதந்திரத்திற்கு மிகவும் முக்கியமானது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் முழுவதும் நிகழ்ந்த பெரிய மாற்றங்களை நாம் கவனிக்க வேண்டும். இது மற்ற நாடுகளிடையே இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாற உதவியது.