இடஒதுக்கீடு 50% உச்சவரம்பை மீற வேண்டுமா? -ரங்கராஜன் ஆர்.

 அரசியலமைப்பின் பிரிவுகள் 15 மற்றும் 16 என்ன உத்தரவாதம் அளிக்கின்றன? முறையான மற்றும் நிலையான சமத்துவம் எவ்வாறு வேறுபடுகின்றன? இடஒதுக்கீடுகள் வாய்ப்புகளின் சமத்துவம் என்ற கருத்துக்கு விதிவிலக்கா அல்லது அதன் தொடர்ச்சியா? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆகியோரில் குறிப்பிட்ட துணை ஜாதிகளுக்குள் இடஒதுக்கீட்டு நன்மைகள் குவிந்துள்ளனவா?

தற்போதைய செய்தி:

பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், அவர்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீட்டை 85% ஆக அதிகரிப்பதாக அறிவித்துள்ளார். மற்றொரு முன்னேற்றத்தில், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடுகளில் 'க்ரீமி லேயர்' (creamy layer) போன்ற ஒரு 'முறையை' அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரும் மனுவின்மீது உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு விதிகள் என்னவாக உள்ளன?

அரசியலமைப்பின் பிரிவுகள் 15 மற்றும் 16 ஆகியவை அரசின் எந்தவொரு நடவடிக்கையிலும் (கல்வி நிறுவனங்களில் சேர்க்கை உட்பட) மற்றும் பொது வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உத்தரவாதம் செய்கின்றன. 

சமூக நீதியை அடைவதற்காக, இந்த பிரிவுகள் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது மற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்வதையும் சாத்தியமாக்குகின்றன. 

ஒன்றிய அளவில் இடஒதுக்கீடுகள் தொடர்பான முக்கியமான முன்னேற்றங்களின் சுருக்கமான விவரங்கள் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசில் தற்போதுள்ள இடஒதுக்கீடு பின்வருமாறு உள்ளது — இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (27%), பட்டியல் வகுப்பினர் (15%), பட்டியல் பழங்குடியினர்களுக்கு (7.5%) மற்றும் சமூகத்தில் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (Economically Weaker Section (EWS)) 10% ஆக உள்ளன. இதனால் மொத்த இடஒதுக்கீடு 59.5%-ஆக உள்ளது. இடஒதுக்கீடு சதவீதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் அவர்களின் மக்கள்தொகை விவரக்குறிப்பு மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன.

நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளித்துள்ளன?

சமத்துவத்தின் இரண்டு வெளிப்படையான போட்டி அம்சங்களால் இந்தப் பிரச்சினை எழுகிறது - முறையான மற்றும் உண்மையான. 1962-ஆம் ஆண்டு  பாலாஜி vs மைசூர் மாநிலம் வழக்கில் உச்சநீதிமன்றம், பின்தங்கிய வகுப்பினருக்கான பிரிவுகள் 15 மற்றும் 16-ன் கீழ் இடஒதுக்கீடு 'நியாயமான வரம்புகளுக்குள்' இருக்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களுடன் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது. 

இடஒதுக்கீட்டிற்கான இத்தகைய சிறப்பு விதிகள் 50% தாண்டக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இடஒதுக்கீடு சமத்துவ வாய்ப்புக்கு விதிவிலக்காகக் கருதப்படும் முறையான சமத்துவத்தை இது அங்கீகரிப்பதாகக் கருதப்படுகிறது. 

மறுபுறம், தன்னிலையான சமத்துவம் (Substantive equality) என்பது கடந்த காலத்தில் சலுகைகளை அனுபவித்த குழுக்களுக்கும், வரலாற்று ரீதியாக பின்தங்கிய மற்றும் குறைவான பிரதிநித்துவத்தை பெற்ற குழுக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நிவர்த்தி செய்ய முறையான சமத்துவம் போதுமானதாக இல்லை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. 

1975-ஆம் ஆண்டு கேரள மாநிலம் vs என். எம். தாமஸ் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு தன்னிலையான சமத்துவத்தின் அம்சத்தை எடுத்துரைத்தது. இந்த வழக்கில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரானது அல்ல. மாறாக சம வாய்ப்பு என்ற கருத்தை ஆதரிக்கிறது மற்றும் தொடர்கிறது என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், 50% இடஒதுக்கீடு வரம்பு குறித்து நீதிமன்றத்தில் நேரடியாகக் கேட்கப்படாததால், இந்த வழக்கில் அந்தப் பிரச்சினையில் இறுதி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவில்லை.

1992ஆம் ஆண்டு இந்திரா சவ்னே வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான 27% இடஒதுக்கீட்டை நிலைநிறுத்தியது. இது இந்திய சூழலில் சாதி என்பது வர்க்கத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணி என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும், வாய்ப்புகளின் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக, அசாதாரணமான சூழ்நிலைகள் இல்லாதவரை, பாலாஜி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டபடி இடஒதுக்கீட்டுக்கான 50% வரம்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்குள் க்ரீமி லேயரை விலக்குவதற்கான ஏற்பாட்டையும் வழங்கியது. 

2022-ஆம் ஆண்டு ஜன்ஹித் அபியான் வழக்கில், நீதிமன்றம் 3:2 பெரும்பான்மையால் EWS இடஒதுக்கீட்டின் அரசியலமைப்பு செல்லுபடியை நிலைநாட்டியது. பொருளாதார அளவுகோல் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக இருக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது மற்றும் இந்திரா சவ்னே வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட 50% வரம்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இருந்தது. 

அதே வேளையில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (Economically Weaker Section (EWS)) 10% இடஒதுக்கீடு இல்லாத சமூகங்களில் வேறு ஒரு பிரிவிற்குரியது என்றும் கருத்து தெரிவித்தது.

போட்டியிடும் வாதங்கள் என்னவாக உள்ளன?

1948-ஆம் ஆண்டு நவம்பரில் அரசியலமைப்புச் சபையில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தனது உரையில் கடந்தகாலத்தில் விடுபட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற தேவையை நியாயப்படுத்தினார். 

'அனைவருக்குமான வாய்ப்பு' (equality of opportunity) என்ற உத்தரவாதமான உரிமையை நிலைநிறுத்த, இடஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விகிதத்தை பிரதிபலிக்கும் வகையில், நீதித்துறை உச்சவரம்பான 50%-க்கு மேல் இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. வெறும் மதிப்பீடுகளைவிட, இந்த விகிதாச்சாரம் குறித்த உண்மையான தரவுகளைப் பெறுவதற்காக சாதிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.

 நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசு பதில்களின்படி, ஒன்றிய அரசில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 40-50% நிரப்பப்படாமல் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மற்றொரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால், இடஒதுக்கீட்டுப் பலன்கள் பெரும்பாலும் ஒரு சில குழுக்களுக்கு மட்டுமே செல்கின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின குழுவிற்குள் இடஒதுக்கீட்டைப் பிரிப்பதற்கான ஒரு நியாயமான வழியை பரிந்துரைக்க உருவாக்கப்பட்ட ரோகிணி ஆணையம், சுமார் 25% தர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட அரசு வேலைகள் மற்றும் இடங்களில் கிட்டத்தட்ட 97%-ஐப் பிடித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளது. மறுபுறம், 2,600 தர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமூகங்களில் ஏறக்குறைய 1,000 பேர் எந்தப் பலனையும் பெறவில்லை - அவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் வேலைகள் அல்லது கல்வியில் பிரதிநிதித்துவம் இல்லை.

பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினற்கு 'க்ரீமி லேயர்' (creamy layer) விரிவாக்கத்திற்கு எதிரானவர்களின் விமர்சனங்கள், இந்த சமுதாயங்களுக்கான காலியிடங்கள் எப்படியும் முழுமையாக நிரப்பப்படவில்லை என்று வாதிடுகின்றன. எனவே, இத்தகைய சமுதாயங்களுக்குள் 'க்ரீமி லேயர்' இன்னும் ஓரங்கட்டப்பட்ட சாதிகளின் வாய்ப்புகளை அபகரிக்கிறது என்ற கேள்வி எழுவதில்லை. 

எந்தவொரு அளவுகோலின் அடிப்படையிலும் 'க்ரீமி லேயர்' விலக்கு காலியிடங்களின் பின்னடைவை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கும். இத்தகைய பின்னடைவு காலியிடங்கள் நீண்டகாலத்தில் இடஒதுக்கீடு இல்லாத இடங்களாக மாற்றப்பட்டு பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை அவர்களின் நியாயமான வாய்ப்புகளிலிருந்து இழக்க நேரிடும் என்ற அச்சமும் உள்ளது.

எதிர்காலத்தில் செல்லும் வழி எதுவாக இருக்கலாம்?

சம வாய்ப்புக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாகும். மேலும், இடஒதுக்கீட்டை 85% வரை அதிகரிப்பது அத்தகைய உரிமையை மீறுவதாகக் கருதப்படலாம். இருப்பினும், பின்தங்கியவர்களை மேம்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை மூலம் கணிசமான சமத்துவம் தேவை.

 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அனுபவ தரவுகளின் அடிப்படையில், பின்தங்கிய சாதிகளையும் கணக்கிடும், பொருத்தமான அளவிலான இடஒதுக்கீட்டை அடைய அனைத்து பங்குதாரர்களுடனும் பரந்த அளவிலான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் ரோகிணி ஆணைய அறிக்கையின்படி இதர பிற்படுத்துத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு இடையே துணை வகைப்பாட்டை செயல்படுத்துவது சமமாக முக்கியமானது. 

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளபடி, பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியின பிரிவினரைப் பொறுத்தவரை, 'இரண்டு அடுக்கு' இடஒதுக்கீடு முறையைப் பரிசீலிக்கலாம். அத்தகைய திட்டத்தின் கீழ், அந்த சமூகங்களில் ஒப்பீட்டளவில் நலிவடைந்தவர்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்பு, அதிக ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள், அடுத்தடுத்த தலைமுறைகளில் பின்தங்கிய மக்களிடையே அதிக ஒதுக்கப்பட்டவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும்.

பொதுத்துறையில் உள்ள வாய்ப்புகளையும், நமது நாட்டின் இளம் மக்கள்தொகையையும் கருத்தில் கொண்டு, எந்தவொரு இடஒதுக்கீட்டுத் திட்டமும் சமூகத்தின் பெரும் பிரிவினரின் விருப்பங்களை பூர்த்தி செய்யாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 

நமது இளைஞர்கள் லாபகரமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏற்ற பொருத்தமான திறன்மேம்பாட்டு வழிமுறைகளை வழங்குவதற்கு உண்மையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

ரங்கராஜன்.R ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் ‘’எளிமைப்படுத்தப்பட்ட அரசியல் குறித்த பாடநெறி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அவர் தற்போது ஆபீசர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெறுகிறார்.



Original article:

Share: