மனநலத்தை, உரிமையாக நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது -ஷபின் ஓ.எஸ்., நபீலா சித்திக்

 உச்சநீதிமன்றத்தின் 'சுக்தேப் சாஹா vs ஆந்திர பிரதேச அரசு' (Sukdeb Saha vs The State Of Andhra Pradesh) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, மனநலம் வாழும் உரிமையின் ஒருங்கிணைந்த பகுதி என்று அங்கீகரிக்கிறது.


2025ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில், உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது. சுக்தேப் சாஹா vs ஆந்திரப் பிரதேச மாநிலம் வழக்கு, தனது 17 வயது மகளை இழந்த ஒரு தந்தையின் வலியைப் பற்றியது. அவர் நீட் தேர்வு எழுதிய மாணவி, விசாகப்பட்டினத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது உயிரிழந்தார். காரணத்தை முழுமையாக விசாரிக்கத் தவறிவிட்டதாக உள்ளூர் காவல்துறை மீது நம்பிக்கையின்மை கொண்ட அவர், ஒன்றிய புலனாய்வு முகமை(Central Bureau of Investigation (CBI)) விசாரணையைக் கோரினார். 


அவரது மனுக்கள் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. பின்னர், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இதன் விளைவாக விசாரணையை ஒன்றிய புலனாய்வு முகமைக்கு மாற்றும் உத்தரவு மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வாழும் உரிமையின் (right to life) ஒருங்கிணைந்த பகுதியாக மனநலம் அங்கீகரிக்கப்பட்டது.


உச்சநீதிமன்றம் இந்த ஒரு வழக்கைத் தாண்டி, ஒரு பெரிய பிரச்சனையில் கவனம் செலுத்தியது: இந்தியா மாணவர் தற்கொலைகள் என்ற பிரச்சனையை எதிர்கொள்கிறது. குற்றம் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தில், இந்த வழக்கு கட்டமைப்பு ரீதியான பாதிப்பு (structural victimisation) எனப்படும் ஆழமான பிரச்சினையைக் காட்டுகிறது. பொதுவாக, மாணவர் தற்கொலைகள் இந்த வகையில் அரிதாகவே வடிவமைக்கப்படுகின்றன. 


இருப்பினும், மனநல ஆதரவு இல்லாமை, பயிற்சி மையங்களின் அழுத்தம் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அலட்சியம் ஆகியவை மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சூழலை உருவாக்குகின்றன. இது இளைஞர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரசாங்கமும் நிறுவனங்களும் அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதபோது, ​​அவர்களும் இது போன்ற குற்றத்தின் மீதான பழியை சுமக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் மாணவர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்குவதால் அவர்கள் தவறான முடிவு எடுக்கும் போது, ​​பிரச்சனை அந்த நபரின் தவறா அல்லது நிறுவனத்தின் தவறா என்று கூறுவது கடினமாகிவிடும்.


நீண்ட காலமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை தீங்கு செய்பவர்களுக்கும் இடையிலான உறவை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர்கள் தனிப்பட்ட மனப் போராட்டங்களால் மட்டும் பாதிக்கப்படுவதில்லை - அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள கல்வி முறையால் பாதிக்கப்படுகிறார்கள். சுயமரியாதையை படிநிலையுடன் இணைக்கும் சமூக மதிப்புகள் மற்றும் மனநலத்தை இரண்டாம் நிலை கவலையாகக் குறைக்கும் நிர்வாக குறைபாடுகளை பற்றியது. மனநலத்தை உள்ளார்ந்த உரிமையாக அங்கீகரிப்பதன் மூலம், நீதிமன்றம் பாதிப்பின் கட்டமைப்பு அம்சத்தை அங்கீகரித்தது. அது பிரச்சினையை தனிப்பட்ட துக்கமாக (personal bereavement) அல்லாமல் பொது அநீதியாக (public injustice) மறுவடிவமைத்தது.


சட்டப்பூர்வமாக, இந்த தீர்ப்பு ஒரு முக்கிய இடைவெளியை நிரப்புகிறது. 2017ஆம் ஆண்டு மனநல சுகாதாரச் சட்டம் (Mental Healthcare Act) ஏற்கனவே மனநலக் கவனிப்பைப் பெறும் உரிமையை வழங்குகிறது. ஆனால், அது தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை. மேலும், செயல்படுத்தும் செயல்முறைகள் இன்னும் மோசமாக உள்ளன. மனநலத்தை அரசியலமைப்பில் வேரூன்றச் செய்வதன் மூலம், நீதிமன்றம் ஒரு உயர்ந்த நெறிமுறை அளவுகோலை நிறுவியுள்ளது. குடிமக்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை சட்டப்பூர்வ உரிமையாக (statutory right) இல்லாமல், அடிப்படை உரிமையாக (fundamental right) வலியுறுத்தலாம். உண்மையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நீதிமன்றம் ‘சாகா வழிகாட்டுதல்கள்’ (Saha Guidelines) என்று அழைக்கப்படும் விதிகளின் தொகுப்பை வெளியிட்டது. 


இந்த விதிகள் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் சரியான மனநல ஆதரவு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கோருகின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இரண்டு மாதங்களுக்குள் இந்த நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. நாடாளுமன்றத்தால் ஒரு முழுமையான சட்டம் நிறைவேற்றப்படும் வரை, இந்த வழிகாட்டுதல்கள் ஒரு சட்டம் போல பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


இந்தத் தீர்ப்பு அரசின் பொறுப்பு தொடர்பான குறிப்பிடத்தக்க குற்றவியல் கேள்விகளையும் எழுப்புகிறது. மாணவர்களிடையே தற்கொலைகள் ஓரளவு நிறுவன புறக்கணிப்பின் விளைவாக இருந்தால், இந்த வகையான புறக்கணிப்பை கட்டமைப்பு வன்முறையாக கருத முடியுமா? ஜோஹான் கால்டுங்கின் கட்டமைப்பு வன்முறை கோட்பாடு (Johan Galtung’s theory), தனிநபர்களின் அடிப்படைத் தேவைகளை மறுப்பதன் மூலம் முறையான தீங்கு விளைவிக்கும் சமூக கட்டமைப்புகள் நேரடி வன்முறையைப் போலவே குற்றம் சாட்டத்தக்கவை என்று கூறுகிறது. பாதுகாப்பான சூழலை உருவாக்காததால், அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் அவை மறைமுகமாக தீங்கு விளைவிக்கின்றன. 


இந்தக் கண்ணோட்டம், தற்கொலைக்கு மாணவர்களைக் குறை கூறுவதிலிருந்து, அதை அமைப்பின் தோல்வியாக அங்கீகரிப்பதன் மூலம் கவனத்தை மாற்றுகிறது. களங்கம் அல்லது கடுமையான போட்டி காரணமாக பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் போராட்டங்களை பாதிக்கப்பட்டவர்களாக மாணவர்களை இது காட்டுகிறது. மாணவர்களின் மனநல உரிமைகள் அரிதாகவே அங்கீகரிக்கப்படுகின்றன.  உளவியல் ஒருமைப்பாட்டை (psychological integrity) 21-வது பிரிவில் சேர்ப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவையும் பாதுகாப்பையும் பெறுவதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது ஆலோசனை, பள்ளிகளில் மாற்றங்கள் மற்றும் மக்களைப் பொறுப்பேற்க வைக்கும் வழிகள் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளையும் அனுமதிக்கிறது - தண்டிப்பது மட்டுமல்லாமல், தீங்கு ஏற்படுவதற்கு முன்பே அதைத் தடுக்கும் வழியாகும்.


மனநல ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களால் இந்த தீர்ப்பு எவ்வாறு பெறப்பட்டது என்பது அதன் திறனை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், நம்பிக்கையுடன் எச்சரிக்கை இருக்க வேண்டும். சக்திவாய்ந்த நீதித்துறை தீர்ப்புகளால், நிறுவப்பட்ட கலாச்சார மற்றும் நிறுவன நெறிமுறைகளை வேரோடு பிடுங்கி எறிய முடியாது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தும், வளங்களில் முதலீடு செய்யும், மற்றும் உண்மையான மனநலக் கவனிப்பை வழங்க பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பும் என்பதே சவாலாக இருக்கிறது.


இறுதியில், சுக்தேப் சாகா சட்டம் (Sukdeb Saha), குற்றவியல் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆய்வு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தனிநபர்களால் மட்டுமல்லாமல் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளாலும் தீங்கு உருவாக்கப்படலாம் என்பதை இந்த சட்டம் அங்கீகரிக்கிறது. மாணவர்கள் செயலற்ற கற்பவர்கள் மட்டுமல்ல - அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. மேலும், அவர்களின் மன ஆரோக்கியம் அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு அங்கீகரிக்கிறது. 


மேலும், புறக்கணிப்பு, அலட்சியம் மற்றும் கட்டமைப்பு அழுத்தங்கள் நேரடி வன்முறை செயல்களைப் போலவே கொடியதாக இருக்கலாம் என்ற உண்மையை எதிர்கொள்ள சமூகத்திற்கு இது சவால் விடுகிறது. வாழும் உரிமையில் ஆரோக்கியமான மனம் இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்துவதில், நீதிமன்றம் அடிக்கடி விரக்தியால் அமைதியாக்கப்பட்ட மாணவர் தலைமுறைக்கு குரல் கொடுத்துள்ளது. இந்தக் குரல் பயனுள்ள மாற்றமாக மாறுமா என்பது தீர்ப்பு நம்பிக்கையின் அடையாளமாக இருக்குமா அல்லது தவறவிட்ட வாய்ப்பாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.


ஷபின் ஓ.எஸ். துணைப் பேராசிரியர், ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம், புதுச்சேரி வளாகம். நபீலா சித்திக் உதவிப் பேராசிரியை, விநாயகா மிஷனின் சட்டப் பள்ளி, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை - பல்கலைக்கழகமாகக் கருதப்படுகிறது, இது சென்னையில் உள்ளது.



Original article:

Share: