நதி மாசுபாடு, வருடாந்திர வெள்ளம், நிலத்தடி நீர் குறைவு மற்றும் மாசுபாடு உள்ளிட்ட கடுமையான பிரச்சனைகளை கங்கைப் படுகை எதிர்கொள்கிறது. ஆனால் பல பத்தாண்டுகால கொள்கை தலையீடுகள் மற்றும் நிதி முதலீடுகள் இருந்தபோதிலும், இதற்கான தீர்வுகள் குறைவாகவே உள்ளன. எனவே, சாத்தியமான முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்க முடியும்?
கடந்த வாரம் வெளியிடப்பட்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய (Central Pollution Control Board (CPCB)) மதிப்பீட்டு அறிக்கையின்படி, நீரின் தரம் மோசமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்ட பல முக்கிய நதிகளில் கங்கை நதியும் ஒன்றாகும்.
இந்தியாவின் மிகவும் புனிதமான நதியாகக் கருதப்படும் கங்கை மகத்தான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நதியாகும். அதன் படுகை சுமார் 27 சதவீதம் நிலப்பரப்பில் பரவுகிறது மற்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 47 சதவீதம் பேர் இந்தப் படுகையிலேயே வாழ்கின்றனர். இது உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாக அமைகிறது.
உலக நதிகள் தினம் (World Rivers Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது ஆறுகளைக் கொண்டாடுகிறது மற்றும் அவற்றைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த நாளில், கங்கைப் படுகையின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதற்கும் அதன் மண் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும் உள்ள அவசியத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்.
படுகையில் இடம்சார்ந்த அளவு
கங்கை நதிப் படுகையானது இந்தியா, நேபாளம், திபெத் (சீனா) மற்றும் வங்காளதேசம் முழுவதும் சுமார் 10,86,000 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 80% (8,61,452 சதுர கி.மீ) இந்தியாவில் உள்ளது. இது இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் சுமார் 27% ஆக்கிரமித்துள்ளது. உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 11 இந்திய மாநிலங்களில் இந்தப் படுகை நீண்டுள்ளது.
கௌமுக் அருகே உள்ள கங்கோத்ரி பனிப்பாறையிலிருந்து தொடங்கும் பாகீரதி, தேவ்பிரயாகையில் அலக்நந்தாவுடன் இணையும்போது கங்கை உருவாகிறது. இந்த நதி ஹரித்வாருக்கு அருகிலுள்ள சமவெளிகளில் நுழைகிறது. இது வங்காள விரிகுடாவை அடைவதற்கு முன்பு சுமார் 2,525 கி.மீ தூரம் பயணிக்கிறது. வலது கரையில் உள்ள முக்கிய துணை நதிகளில் யமுனா (Yamuna) மற்றும் சன் (Son) ஆகியவை அடங்கும். இடது கரையில், முக்கிய துணை நதிகள் ராம்கங்கா, காளி, கோமதி, காக்ரா, கண்டக் மற்றும் கோசி போன்ற நதிகளும் அடங்கும். ஃபராக்கா தடுப்பணையைக் (Farakka Barrage) கடந்த பிறகு, நதி வங்காள விரிகுடாவில் பாயும் ஹூக்ளி நதியிலும், வங்காள விரிகுடாவில் பாயும் பத்மா நதியிலும் இரண்டாகப் பிரிகிறது.
கங்கை படுகையின் வளமான மண், பொருத்தமான காலநிலை மற்றும் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு போதுமான நீர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தட்டையான சமவெளியைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக அமைகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கி.மீட்டருக்கு 382 பேர் ஆவர். சில படுகை மாநிலங்களில் மிக அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதி இருந்தது. அவை டெல்லி (11,297), பீகார் (1,102), மேற்கு வங்கம் (1,029), உத்தரப் பிரதேசம் (828), ஜார்க்கண்ட் (414), மற்றும் உத்தரகண்ட் (189) போன்ற மாநிலங்கள் ஆகும்.
கங்கைப் படுகையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை,
மேல் கங்கைப் படுகை (Upper Ganga Basin) : தோற்றம் முதல் நரோரா தடுப்பணை வரை.
மத்திய கங்கைப் படுகை (Middle Ganga Basin) : நரோரா தடுப்பணையிலிருந்து பல்லியா மாவட்டம், உத்தரப் பிரதேசம் வரை.
கீழ் கங்கை சமவெளி (Lower Ganga Plain) : பல்லியாவிலிருந்து வங்காள விரிகுடா வரை.
நடுத்தர மற்றும் கீழ் கங்கை படுகைகள் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளன. முக்கிய நகர்ப்புற மையங்களில் லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரணாசி மற்றும் பாட்னா ஆகியவை அடங்கும்.
நிலம், மண் மற்றும் நீர் கிடைக்கும் தன்மை (Availability of land, soil and water) :
கங்கை படுகையின் 65 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 3.47 சதவீதம் நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. இது மழைப்பொழிவிலிருந்து 35.5 சதவீத தண்ணீரைப் பெறுகிறது. இருப்பினும், இது சபர்மதிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது அதிக நீர் பற்றாக்குறையான படுகை (India’s second most water-stressed basin) ஆகும்.
52 சதவீதத்திற்கும் அதிகமான படுகை வண்டல் மண்ணைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் மேல் மற்றும் நடுத்தர கங்கை சமவெளிகளில் காணப்படுகிறது. இந்த மண்ணில் பொட்டாஷ் மற்றும் பிற தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், இதில் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. இது தீவிர சாகுபடியை ஆதரிக்கிறது. இரண்டு வகையான வண்டல் மண் உள்ளன.
அவை ”காதர்” (Khadar), இது சமீபத்திய வெள்ளத்தால் படிந்த புதிய மண்வகையாகும், மற்றும் ”பங்கர்” (Bhangar), இது வெள்ளப்பெருக்கு சமவெளிகளிலிருந்து விலகி காணப்படும் பழைய மண்வகையாகும். கீழ் கங்கை சமவெளியில் பல வகையான மண் உள்ளது. இவற்றில் லேட்டரைட், சிவப்பு, வண்டல் மற்றும் கடலோர மண் ஆகியவை அடங்கும். இந்த நதி உலகின் மிகப்பெரிய டெல்டாக்களில் ஒன்றான சுந்தரவனத்தையும் உருவாக்குகிறது. டெல்டா பெரும்பாலும் சுந்தரி மரங்களால் மூடப்பட்டுள்ளது.
525.02 பில்லியன் கன மீட்டர்கள் (billion cubic meters (BCM)) என மதிப்பிடப்பட்ட சாத்தியக்கூறுடன் மேற்பரப்பு மற்றும் துணை மேற்பரப்பு நீர் வளங்கள் நிறைந்தது. முதன்மை ஆதாரங்களில் மழைப்பொழிவு, பருவகால பனி மற்றும் பனிப்பாறை உருகுதல் மற்றும் நிலத்தடி ஓட்டங்கள் ஆகியவை அடங்கும். தீபகற்ப கிளை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதி பெரியதாக இருந்தாலும், அவை 40 சதவிகிதம் மட்டுமே படுமை நீரில் பங்களிக்கின்றன. மீதமுள்ள 60 சதவிகிதம் இமயமலை ஓடைகளிலிருந்து வருகிறது. நீர்ப்பாசன வசதிகளுடன் இணைந்த வளமான சமவெளிகள், இரட்டை மற்றும் மூன்று பயிர் முறைகளை ஆதரிக்கின்றன. இது அதிக மக்கள்தொகையின் செறிவை ஈர்க்கிறது.
படுகையின் குறுக்கே 784 அணைகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் (364), அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (145) மற்றும் உத்தரப் பிரதேசம் (98) உள்ளன. தெஹ்ரி அணை 260.5 மீட்டர் உயரமும், நானக் சாகர் அணை 19.2 கிமீ நீளமும் கொண்டது. இந்தியா-WRIS அறிக்கையின்படி, கங்கைப் படுகையில் 478 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் 39 நீர்-மின்சார திட்டங்கள் உள்ளன. கூடுதலாக, படுகையின் எளிதில் அணுகக்கூடிய நிலத்தடி நீர் ஆதாரங்கள் இந்தியாவின் மொத்த நிலத்தடி நீர்-பாசனப் பரப்பில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை அழுத்தம் மற்றும் வள ஏற்றத்தாழ்வுகள்
ஆனால், கங்கைப் படுகை கடுமையான மாசுபாடு மற்றும் அதன் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 47 சதவீதம் பேர் குடிநீர், பாசனத் தேவைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளுக்கு கங்கைப் படுகையை நம்பியுள்ளனர். இங்குள்ள படுகையின் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கி.மீ.க்கு 520 பேர் ஆவர். இருப்பினும், இந்த அடர்த்தி புவியியல் ரீதியாக மாறுபடும். பொதுவாக கிழக்கிலிருந்து மேற்கு வரை குறைகிறது. கீழ் கங்கை சமவெளிகளில், மக்கள் தொகை அழுத்தம், நிலம் மற்றும் நீர் வளங்களை சுமந்து செல்லும் திறனை விட அதிகமாக உள்ளது.
இந்த அதிகப்படியான சார்பு வளங்களை அதிகமாக சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 2,700 மில்லியன் லிட்டர் கழிவுநீர் இந்தப் படுகைக்குள் வெளியேற்றப்படுகிறது. மத்திய கங்கைப் படுகை மிகவும் மாசுபட்ட பகுதியாகும். தினமும் சுமார் 500 மில்லியன் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் அதில் கலக்கின்றன. இது பரவலான சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பொது சுகாதார நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது. இவற்றில் நீரினால் பரவும் நோய்களால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு, நிலச் சீரழிவு மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவை அடங்கும்.
சவால்கள் மற்றும் கொள்கை தாக்கங்கள்
கங்கைப் படுகை பல கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. இவற்றில் நதி மாசுபாடு, வருடாந்திர வெள்ளம், நிலத்தடி நீர் குறைவு மற்றும் மாசுபாடு ஆகியவை அடங்கும். பல மாநிலங்கள் ஆர்சனிக், ஃப்ளோரைடு, இரும்பு, நைட்ரேட், குளோரைடு மற்றும் பிற பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக தெரிவிக்கின்றன. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையின்போது பெரும்பாலான அளவுல் மழை பெய்யும். இது நதி ஓட்டத்தில் பெரிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது மற்றும் வருடாந்திர வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் இது நிகழும். 'பீகாரின் துயரம்' (Sorrow of Bihar) என்று அழைக்கப்படும் கோசி நதி, அடிக்கடி அதன் பாதையை மாற்றி கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.
மாசுபாட்டைக் குறைப்பதற்காக, கங்கை செயல் திட்டம்-I (GAP-I) 1985-ல் தொடங்கியது. இது உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 25 நகரங்களில் கவனம் செலுத்தியது. கங்கை செயல் திட்டம்-I (GAP-II) 1993-ல் தொடர்ந்தது. 2009-ல், தேசிய கங்கை நதி படுகை ஆணையம் (National Ganga River Basin Authority (NGRBA)) அமைக்கப்பட்டது. பாதுகாப்புத் திட்டங்களைத் திட்டமிடுதல், நிதியளித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதே இதன் பங்காகும்.
முதன்மையான ‘நமாமி கங்கே’ திட்டம் (Namami Gange programme) ஜூன் 2014-ல் தொடங்கப்பட்டது. மாசுபாட்டைக் குறைப்பது, நதியைப் பாதுகாப்பது மற்றும் அதைப் புத்துயிர் பெறுவது இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும். புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதன் மூலம் 'அவிரல் தாரா' (தொடர்ச்சியான ஓட்டம்), மற்றும் 'நிர்மல் தாரா' (மாசுபடாத ஓட்டம்) ஆகியவற்றை உறுதி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், நாற்பதாண்டுகளாக கொள்கை தலையீடுகள் மற்றும் நிதி முதலீடுகள் இருந்தபோதிலும், இதற்கான தீர்வு குறைவாகவே உள்ளது. தெளிவான சமூக-பொருளாதார ஆதாயங்களைக் கொண்ட ஊக்குவிப்பு அடிப்படையிலான கொள்கைகளின் தேவை, வழக்கமான மதிப்பீடு மற்றும் பாடத் திருத்தம் வழிமுறைகளால் ஆதரிக்கப்படுகிறது.
கங்கைப் படுகை பெரும்பாலும் இந்தியாவின் உயிர்நாடி (lifeline of India) என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகைக் கொண்ட பகுதிகளில் ஒன்றை ஆதரிக்கிறது. இருப்பினும், பெரிய மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது. மனித தேவைகள் இப்போது படுகையில் உள்ள நிலம், மண் மற்றும் நீர் வளங்களின் திறனைவிட அதிகமாக உள்ளன. இந்த வளங்களின் தடையற்ற பயன்பாடு பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் நதி மாசுபாடு, நிலத்தடி நீர் குறைவு, மாசுபாடு, வெள்ளம் மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவை அடங்கும்.
கங்கை படுகையின் எதிர்கால நிலைத்தன்மையை உறுதிசெய்ய, வளர்ச்சியையும் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த வேண்டும். மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதிலிருந்து சுற்றுச்சூழல் அமைப்பை தீவிரமாக நிர்வகிப்பதற்கான அணுகுமுறை மாற வேண்டும். இதற்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும், கங்கை படுகை முழுவதும் சமூக பங்களிப்பை ஊக்குவிப்பதும் அவசியம்.