யானைகள் கணக்கெடுப்பு : டி.என்.ஏ அடிப்படையிலான கணக்கெடுப்பு வனவிலங்கு கண்காணிப்பில் ஒரு முன்னேற்றமாகும்.

 தெளிவு (Clarity) என்பது பாதுகாப்பு முயற்சியை சரிசெய்வதற்கு வழிவகுக்கும்.


கடந்தவாரம் வெளியிடப்பட்ட இந்தியாவின் சமீபத்திய யானை எண்ணிக்கையின் மதிப்பீடான, ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு (Synchronous All India Elephant Estimation (SAIEE)) 2021-25, ஒரு கவலையளிக்கும் நிலையை காட்டுகிறது. இந்தியாவில் காட்டு ஆசிய யானைகளின் எண்ணிக்கை 22,446 என அறிக்கை மதிப்பிடுகிறது. இது 2017-ல் பதிவு செய்யப்பட்ட 27,312 யானைகளிலிருந்து குறிப்பிடத்தக்க குறைவாகும். சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், புதிய எண்ணிக்கையானது ஒரு வழிமுறையின் மாற்றத்தைக் குறிக்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இது, முந்தைய எண்ணிக்கையுடன் நேரடியாக ஒப்பிடப்படாமல், "புதிய அடிப்படையாக" பார்க்கப்பட வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகள் இன்னும் யானைகளுக்கு முக்கிய கோட்டைகளாக உள்ளன. கர்நாடகா, அசாம் மற்றும் கேரளாவில் யானைகளின் எண்ணிக்கை மிகவும் அடர்த்தியாக உள்ளது. ஆனால், வழிமுறைகளின் மாற்றம் இருந்தபோதிலும், மதிப்பிடப்பட்ட யானைகளின் எண்ணிக்கையில் சரிவு 17.8 சதவீதமாக உள்ளது. வடகிழக்கு, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கடுமையான சரிவுகள் பதிவாகியுள்ளன. 2017-ம் ஆண்டு மதிப்பீட்டைவிட ஜார்க்கண்டில் யானைகளின் எண்ணிக்கை 68 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஒடிசாவில் 54 சதவீதம் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளுக்கு நீண்டகால அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளன.


இருப்பினும், கவலையளிக்கும் விதமாக எண்ணிக்கைகள் இருந்தபோதிலும், இந்த அறிக்கை ஒரு அறிவியல் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. வலுவான புலி கணக்கெடுப்பு கட்டமைப்பை மாதிரியாகக் கொண்ட மரபணு அடையாள மறு பிடிப்பு முறைகளுக்கு (genetic mark–recapture methods) மாறுவது, இந்தியாவின் வனவிலங்கு கண்காணிப்பில் வரவேற்கத்தக்க திருத்தமாகும். முன்னதாக, நேரடி பார்வைகள், நீர் துளையின் அடிப்படையில் கருத்துகணிப்புகள் அல்லது சாணம் சிதைவு விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இப்போது, ​​புதிய முறை இடம்சார்ந்த கட்டமைக்கப்பட்ட மாதிரி கட்டங்கள் மற்றும் சாண மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு தனிப்பட்ட யானைகளை மிக அதிக துல்லியத்துடன் அடையாளம் காண உதவுகிறது. மேலும், இது வனவிலங்கு கண்காணிப்பில் ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. புலிகளை அவற்றின் கோடுகள் மூலம் தனித்தனியாக அடையாளம் காண முடியும் என்றாலும், யானைகள் மிகவும் சிக்கலான சவாலை ஏற்படுத்துகின்றன. டிஎன்ஏ பகுப்பாய்வு இந்த சிக்கலை தீர்க்கிறது. இது, செயல்முறையை மிகவும் அறிவியல் பூர்வமாகவும் நம்பகமானதாகவும் ஆக்குகிறது. இது யானைகளின் எண்ணிக்கை போக்குகள் மற்றும் வாழ்விடப் பயன்பாட்டை துல்லியமாக நீண்டகாலமாக கண்காணிக்க அனுமதிக்கிறது. பெரிய மற்றும் மாறுபட்ட நிலப்பரப்புகளில் நகரும் ஒரு இனத்திற்கு இது மிகவும் முக்கியமானது.


விலங்குகள் கணக்கெடுப்பு ஒரு கவலைக்குரிய வடிவத்தை வெளிப்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்புக்கான மனித தேவை அதிகரித்து வருவதால் யானைகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றன. இத்தகைய வளர்ச்சியின் சுற்றுச்சூழல் செலவுகள் குறித்து நிறுவனங்கள் நில நேரங்களில் அலட்சியத்தையும் காட்டுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) சிவப்பு பட்டியலில் "ஆபத்தானவை" (endangered) என்று பட்டியலிடப்பட்டுள்ளது. வாழ்விட இழப்பு மற்றும் நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் இது கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. உலகின் ஆசிய யானைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ளன. இது உலகளாவிய வனவிலங்குப் பாதுகாப்பிற்கு இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கைகளை முக்கியமானதாக ஆக்குகிறது. இருப்பினும் சுரங்கம், மின் திட்டங்கள், இரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் விவசாயம் ஆகியவற்றிலிருந்து வன நிலத்தின் மீதான அழுத்தம் விலங்குகளின் பாரம்பரிய வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளில் தொடர்ந்து சிதைந்து வருகிறது. மந்தைகள் புதிய மற்றும் அறிமுகமில்லாத பகுதிகளுக்கு நகரும்போது, ​​மனிதர்களுடனான மோதல்கள் அதிகரிக்கின்றன. இந்த சந்திப்புகளில் பல உயிரிழப்புகளில் முடிவடைகின்றன. பாதுகாப்பு முயற்சிகள் யானை நடமாட்டத்தையும் பாதுகாப்பையும் மேம்பாட்டுத் திட்டங்களுடன் அவசரமாக இணைக்க வேண்டும். இதில் பாதைகளைப் பாதுகாப்பது, திட்ட அனுமதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது, மற்றும் மனித-விலங்கு மோதல் தணிப்பு நடவடிக்கைகளை அடிமட்டத்தில் வலுப்படுத்துவது ஆகியவை அடங்கும். விலங்குகள் கணக்கெடுப்பு வழங்கும் தெளிவு, பொருள் மிக்க பாதை திருத்தத்திற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.



Original article:

Share: