வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கான பாதுகாப்புகள் மற்றும் நலன்களை கண்காணிக்க தேசிய அளவிலான தனி சட்டம் இல்லாதது பணியாளர்களை பல வழிகளில் பாதிக்கிறது.
ஜனவரி மாதத்தில், உச்ச நீதிமன்றம் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களின் உரிமைகளை நிர்ணயிப்பதற்காக விரிவான ஒரு சட்டத்தை இயற்றுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அதற்கான கட்டமைப்பை அமைப்பதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியது. ஆறு மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அந்த குழுவுக்கு உத்தரவிட்டது. இது குழு அமைக்கப்பட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாக இல்லை.
வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் நிலை
இந்தியாவில் 4 கோடி முதல் 90 கோடி வரை வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுமிகள், அவர்களில் பெரும்பாலோர் பட்டியல் சாதி (Scheduled Caste) மற்றும் பட்டியல் பழங்குடி (Scheduled Tribe) சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இது அவர்களை கட்டமைப்பு அதிகார வேறுபாடுகளுக்கு பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது.
சத்தீஸ்கரில் இருந்து டெல்லிக்கு கடத்தப்பட்ட ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளரின் சிறைவைப்பு மற்றும் மனித கடத்தல் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக, நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை வகுப்பதில் முக்கியமான பல பரிசீலனைகளுக்கு இந்த வழக்கு கவனம் செலுத்துகிறது. பணியாளர்கள் மற்றவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களில் உழைக்கின்றனர். இது அவர்களை தனிமைப்படுத்துகிறது. பணியிட சூழ்நிலைகளை ஆய்வு செய்வது சாத்தியமற்றதாகிறது. இந்த பணியாளர்கள் துன்புறுத்தல், வன்முறை (abuse) மற்றும் பிரிவினைவாத நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படலாம். குழந்தைத் தொழிலாளர் முறை இந்த துறையில் அதிகமாக உள்ளது. இடைத்தரகர்களும் வேலை நிறுவனங்களும் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்களை முதலாளிகளுடன் இணைக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சில தொழிலாளர்கள் ஒரு வீட்டில் முழுநேர வேலை செய்கிறார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்கள் பல வீடுகளில் வேலை செய்கிறார்கள். இது குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம் மற்றும் விடுப்பு உரிமைகள் ஆகியவற்றின் விதிமுறைகளையும் செய்யலாக்கத்தையும் சிக்கலாக்கும்.
பல பணியாளர்கள் மாநில எல்லைகளைத் தாண்டி பாதுகாப்பு தேவைப்படும் இடம்பெயர்ந்த தொழிலார்களாக உள்ளனர். தொழிலாளர்கள் அண்டை நாடுகளிலிருந்தும் வழக்கமாக வருகிறார்கள். பாதுகாப்புகள் மற்றும் சலுகைகளை ஆராய தேசிய அளவிலான ஒரு தனி சட்டம் இல்லாதது பணியாளர்களை பல வழிகளில் பாதிக்கிறது.
உலகப் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) 2011-ல் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை உறுதிசெய்ய ஒரு மாநாடு தீர்மானம் (எண். 189) நிறைவேற்றியது. இந்தியா அந்த மாநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்தாலும், இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை. நீதிமன்றம் குறிப்பிட்டது போல், 1950-களில் இருந்து தேசிய அளவில் சட்டம் இயற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டு வேலை செய்பவர்களைப் பாதுகாக்க வலுவான ஒன்றிய சட்டத்தை வலியுறுத்துவதற்காக 2012-ஆம் ஆண்டு வீட்டு வேலை செய்பவர்களுக்கான தேசிய வீட்டுப் பணியாளர் தளம் (National Platform for Domestic Workers (NPDW)) உருவாக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டில், வீட்டு வேலை பணியாளர்கள் (வேலை ஒழுங்குமுறை மற்றும் சமூகப் பாதுகாப்பு) மசோதா என்ற வரைவுச் சட்டத்தை அவர்கள் தயாரித்தனர். ஆனால், அது ஒருபோதும் அதிகாரப்பூர்வ சட்டமாக மாற்றப்படவில்லை. நீதிமன்றம் பல்வேறு அமைச்சகங்களுக்கு ‘துறை சார்ந்த நிபுணர்களை’ (subject experts) கொண்ட ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டது. இருப்பினும், அந்தக் குழுவில் வீட்டுப் பணியாளர்களின் பிரதிநிதிகள் யாரும் இல்லாதது கவலைக்குரியதாக உள்ளது.
மாநில அளவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்
தமிழ்நாட்டில், சுமார் 2 கோடி வீட்டுப் பணியாளர்கள் இருக்கும் இடத்தில், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு கைமுறைத் தொழிலாளர் சட்டம், (Tamil Nadu Manual Worker Act, 1982) கீழ் ஒரு நலவாரிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், பதிவு செய்யப்பட்ட பணியாளர்கள் ஓய்வூதியம், மகப்பேறு நலன்கள், குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் விபத்து நிவாரணம் உள்ளிட்ட நலன்களைப் பெறுகின்றனர். இருப்பினும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டுமே உண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு ரூ.37-39 என குறிப்பிடப்பட்டிருந்தாலும், பணியாளர்கள் மிகக் குறைவாகவே வருவாய் ஈட்டுகின்றனர். அவர்கள் ஒரே வீட்டில் முழுநேரமாக வேலை செய்ய முடியாததால், அவர்கள் ‘பகுதிநேர’ தொழிலாளர்களாகக் கருதப்படுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டுப் பணியாளர் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க சிறப்பு சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், கர்நாடக அரசு வீட்டுப் பணியாளர்களின் வேலை நிலைமைகளை ஒழுங்குபடுத்த வீட்டுப் பணியாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலன் மசோதாவை (Domestic Workers (Social Security and Welfare) Bill, 2025) அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இது வீட்டு வேலை செய்பவர்களை அரசாங்கத்தில் கட்டாயமாகப் பதிவுசெய்து, ஊதியம் மற்றும் வேலை நேரம் குறித்த ஒப்பந்தத்தை உள்ளடக்கிய எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் வேலையைத் தொடங்க முதலாளிகளை கட்டாயப்படுத்துகிறது. இது பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் நேர ஊதியம் மற்றும் வாராந்திர விடுமுறைகளுக்கான உரிமையை வழங்குகிறது. முக்கியமாக, வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரு நலத்திட்ட நிதிக்கு முதலாளிகள் ஊதியத்தில் 5% வழங்க வேண்டும் என்று இந்த சட்டம் கோருகிறது.
என்ன செய்ய வேண்டும்
இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மட்டுமே வீட்டுல் வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கின்றன. இந்த ஊதியங்கள் புதுப்பிக்கப்பட்டு அதிகரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களும் வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை குறிப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட வேண்டும். தேசிய வீட்டுப் பணியாளர் தள (National Platform for Domestic Workers (NPDW)) வரைவு மசோதா மற்றும் கர்நாடக சட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு கூடுதலாக, அனைத்து முதலாளிகள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மாநில அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் மாநிலத்தை உள்ளடக்கிய முத்தரப்பு வாரியம் (tripartite board) மூலம் ஒவ்வொரு முதலாளிக்கும் ஒரு பணிப்புத்தகம் வழங்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு முதலாளி மற்றும் அவரிடம் வேலை செய்யும் பணியாளரால் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அங்கீகரிக்கப்பட வேண்டும். பணியிடத்தில் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டத்தின் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act) கீழ் மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட உள்ளூர் புகார் குழுக்களை அணுக முடியவில்லை என்று பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குழுக்களை கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் தொடங்க வேண்டும்.
வீட்டுல் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வீட்டுவசதி மற்றொரு முக்கியமான பரிசீலனையாகும். 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் தொற்றுநோயால் விதிக்கப்பட்ட ஊரடங்குகளின் போது தமிழ்நாட்டில் பணியாளர்கள் சில உதவிகளைப் பெற்றாலும், அவர்களில் பலரால் வாடகை செலுத்த முடியவில்லை. அவசர காலங்களில் மட்டும் உதவி செய்வதற்குப் பதிலாக, இந்த முக்கியமான பணியில் பணிபுரியும் பெண்களைப் பாதுகாக்க நிரந்தர தீர்வுகள் மிகவும் அவசியமானது.
ஆர். கீதா, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர்; பிரிதி நாராயண், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியர்.