தேசிய சிறுபான்மையினர் ஆணையம், அதற்காக உருவாக்கப்பட்டவர்களுக்கு அரிதாகவே பயன்பட்டுள்ளது. -தாஹிர் மஹ்மூத்

 47 ஆண்டுகால வரலாறு, சிறுபான்மையினர் சமமான குடிமக்களாக தங்கள் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தை ((NCM)) நம்பியிருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.


தற்போது, ​​தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு (NCM) தலைவர் அல்லது உறுப்பினர்கள் இல்லை. அதன் எதிர்காலம் குறித்தும் தெளிவற்ற வதந்திகள் உள்ளன. ஆணையத்தை மறுசீரமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிய பொது நல வழக்கை (Public Interest Litigation (PIL)) விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சமீபத்தில் ஒன்றிய அரசிடம் பதில் கோரியுள்ளது. ஆனால், கேள்வி என்னவென்றால் இந்த அமைப்பு நீண்டகாலமாக செயல்படாமல் இருப்பது சிறுபான்மையினரின் வாழ்க்கையையும் உரிமைகளையும் உண்மையில் பாதிக்கிறதா?


இந்தியாவில் பல தேசிய ஆணையங்கள் உள்ளன. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஆணையங்கள் கண்காணிப்புக் குழுக்களாகச் செயல்படுகின்றன. சிறுபான்மையினர் ஆணையம் முதன்முதலில் 1978-ல் உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையம் என்ற மற்றொரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. இவை இரண்டும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன. மேலும்,  இந்த ஆணையங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க திட்டமிடப்பட்டன.


இருப்பினும், சில கூட்டணிக் கட்சிகள் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினர் ஆணையத்தை உருவாக்குவதில் அதிருப்தி அடைந்தன. 1981-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​அது ஆணையத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், அதை அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மிர்சா ஹமீதுல்லா பேக் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார்.


1990ஆம் ஆண்டில், வி.பி. சிங் தலைமையிலான மற்றொரு கூட்டணி அரசாங்கம், இரண்டு ஆணையங்களையும் அரசியலமைப்பில் சேர்க்க மீண்டும் முயற்சித்தது. ஒரு அரசியலமைப்பு (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், போதுமான அரசியல் ஆதரவு இல்லாததால் அது நிறைவேறவில்லை.


காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​மசோதாவை மாற்றியது. சிறுபான்மையினர் ஆணையத்தை அதிலிருந்து நீக்கிவிட்டு, பட்டியல் பழங்குடியினர்/பட்டியல் சாதிகள் ஆணையத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. இந்த திருத்தப்பட்ட மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, சிறுபான்மையினர் ஆணையம் முதலில் அமைக்கப்பட்ட பிறகும் 14 ஆண்டுகள் சட்டப்பூர்வமற்ற அமைப்பாகவே தொடர்ந்தது. இறுதியாக, 1992ஆம் ஆண்டில், பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியது. இது தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NCM) என மறுபெயரிடப்பட்டது மற்றும் சட்டத்தின் கீழ் ஒரு சிவில் நீதிமன்றத்தின் சில அதிகாரங்களை வழங்கியது.


1992ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ​​புதிய காங்கிரஸ் அரசாங்கம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (National Human Rights Commission (NHRC)) உருவாக்க மற்றொரு சட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து "வெளிநாட்டு மற்றும் இந்திய சிவில் உரிமைகள் குழுக்களின் தவறான மற்றும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பிரச்சாரத்தை எதிர்ப்பதே" இதன் நோக்கமாகும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் முதலில் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது, பின்னர் அது மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினர் (SC/ST) மற்றும் பெண்கள் ஆகிய மூன்று தேசிய ஆணையங்களின் தலைவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக ஆனார்கள்.


முதல் சட்டப்பூர்வ சிறுபான்மையினர் ஆணையம் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி முகமது சர்தார் அலி கான் தலைமையில் செயல்பட்டது. இரண்டாவது தலைவர் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ஆவார். இந்தியா முழுவதும் பரவலாக மீறப்பட்டு வந்த அரசியலமைப்பின் 29 மற்றும் 30 வது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதில் இருவரும் கவனம் செலுத்தினர். சிவில் நீதிமன்றத்திற்கு இணையான வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், நிவாரணம் வழங்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தனர். பின்னர், முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான நீதிபதி முகமது ஷமிம், NCM தலைவராக ஆனார். 2003-ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்ததிலிருந்து, சட்டத் துறையைச் சாராத நபர்களால் ஆணையம் வழிநடத்தப்படுகிறது.


2004-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அரசாங்கம் தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம் (National Commission for Minority Educational Institutions (NCMEI)) என்ற தனி அமைப்பை உருவாக்கியது. தேசிய சிறுபான்மை ஆணையத்தின் (NCM) தலைவர் பதவி காலியாக இருந்தது, பிரதமர் மன்மோகன் சிங் அதை மீண்டும் நான் (கட்டுரையாளர்) ஏற்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சிறுபான்மையினருக்காக ஆணையம் செய்ய வேண்டியவை இப்போது அதிகம் இல்லாததால், நான் எந்த ஆர்வமும் காட்டவில்லை.


அதே நேரத்தில், "மத மற்றும் மொழி சிறுபான்மையினரிடையே சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குழுக்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்களை பரிந்துரைக்கவும், அதன் பரிந்துரைகளை செயல்படுத்த அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும்" ஒரு தற்காலிக ஆணையத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டது. இந்த அமைப்பின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா இருந்தார். பிரதமரின் கோரிக்கையின்படி, நான் அதன் சட்ட உறுப்பினராக இணைந்து, அதன் பணியை முடிப்பதில் முக்கிய பங்கு வகித்தேன். இந்த ஆணையம் 2005-ல் செயல்படத் தொடங்கியது மற்றும் விரைவில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது, ஆனால் அரசு 2014இல் ஆட்சியை இழக்கும் வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தேசிய ஆணையங்கள் என்று அழைக்கப்படுபவை எதுவும் அதன் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற உண்மையான சுதந்திரத்தைப் பெற்றதில்லை. பல வருடங்களுக்குப் பிறகும், அவர்களில் யாரும் தாங்கள் உதவ வேண்டிய மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அது வரி செலுத்துவோருக்கு ஒரு சுமையாக மாறியுள்ளது. அரசியலமைப்பின்கீழ் சிறுபான்மையினர் எதிர்பார்க்கும் சிறிய விஷயங்களைக் கூட, பெரும்பாலும் "பல் இல்லாத புலி" என்று அழைக்கப்படும் இந்த பலவீனமான அமைப்பின் மூலம் அடைய முடியாது என்பதை அதன் 47 ஆண்டுகால வரலாறு காட்டுகிறது. எனவே, தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கலைக்கப்பட்டால், அதன் குறித்து வருத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.


எழுத்தாளர் முன்னாள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் ஆவார்.



Original article:

Share: