வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு: டிஜிட்டல் மாற்றத்திற்கு ஆதரவான வாதம். - ராஜீவ் குமார்

 தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision) பணியை பீகாரிலிருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும், காலாவதியான சரிபார்ப்பு முறைகள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் இல்லாதது, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்கள் முக்கியமானது என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவின் மிக முக்கியமான ஜனநாயக செயல்முறைகளில் ஒன்றாக உள்ள சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்முறை குறித்து 20ஆண்டுகளாக எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருந்த பிறகு, தேர்தல் ஆணையம் (Election Commission (EC)), இறுதியாக பீகாரில் தொடங்கி, அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், பின்னர் நாட்டின் பிற பகுதிகளில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மீண்டும் செய்ய தொடங்கியுள்ளது.


வாக்காளர் பட்டியல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் - இறந்தவர்களை அல்லது குடியுரிமையை விட்டுக்கொடுத்தவர்களை நீக்குதல் மற்றும் வேறு தொகுதியில் வசிக்கும் நபர்களுக்கான உள்ளீடுகளை மாற்றுவது ஆகும். பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாகவும், இந்தியாவில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும், தகுதியற்ற நபர்களை, குறிப்பாக அண்டை நாடுகளிலிருந்து வந்தவர்களைச் சேர்ப்பது குறித்த கவலைகள் நீடிக்கின்றன. இது வெளிப்படையான சரிபார்ப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சிறப்பு தீவிர திருத்த பணி வாக்காளர் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், நடைமுறை தெளிவின்மைகள் மற்றும் நவீன டிஜிட்டல் கருவிகளுக்குப் பதிலாக காலாவதியான மற்றும் சிக்கலான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedures (SoPs)) நம்பியிருப்பதால் இது சர்ச்சைக்குரியதாக மாறியது.


காலாவதியான முறைகளை நம்பியிருத்தல்


பெரும்பாலான இந்திய மாநிலங்களில் கடைசியாக முழுமையான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) 2002 மற்றும் 2004-ஆம் ஆண்டிற்கு இடையில் நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர் தரவு முற்றிலும் காகித அடிப்படையில் இருந்தது. பகுதி-பகுதியாக பிரிக்கப்பட்டது மற்றும் தரவு நேரடியாக சரிபார்க்கப்பட்டது. 20-ஆண்டுகளுக்குப் பிறகும், ஆதார் ஒருங்கிணைப்பிலிருந்து டிஜிட்டல் இந்தியா திட்டம் வரை இந்தியாவின் பரந்த டிஜிட்டல் மாற்றம் இருந்தபோதிலும், 2025ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த கட்டமைப்பு காலாவதியான, காகிதங்களைப் பயன்படுத்தும் பழைய நடைமுறைகளில் (paper-era procedures)  வேரூன்றியுள்ளது.


2002-2004ஆம் ஆண்டு மாதிரியைப் பிரதிபலிக்கும் வகையில், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் குடும்பப் பதிவேடு உள்ளிட்ட 11 ஆவணங்கள் வாக்காளர் சரிபார்ப்புக்கு கட்டாயமாக்கப்பட்டன. இருப்பினும், இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய அடையாள ஆவணமான ஆதார் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டது. ஆதார் முழுமையாக நம்பகமானதல்ல மற்றும் திருடப்படலாம் என்று கூறுவது பகுதியளவில் மட்டுமே சரியான கூற்றாகும். ஏனெனில், பெரும்பாலான பிற ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களுக்கும் இதே மாதிரியான பிரச்சனைகள் உள்ளன. கடவுச்சீட்டுகள் மற்றும் அரசாங்க அடையாள அட்டைகள் போன்ற நம்பகமான ஆவணங்கள் சிறிய எண்ணிக்கையிலான மக்களிடம் மட்டுமே உள்ளன.


வரையறுக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் அணுக முடியாத சான்றுகளை நம்பியிருப்பது இந்தியா யோசனைக்கு எதிரானது - நவீன வெளிப்படைத்தன்மை சீர்திருத்தமாக இருக்க வேண்டியதை ஒரு அதிகாரத்துவ தடையாக (bureaucratic bottleneck) மாற்றுகிறது. ஆதார் விலக்கு சரிபார்ப்பை சிக்கலாக்கியது மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதித்தது. குறிப்பாக, இடம்பெயர்ந்தோர், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படக்கூடிய, தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்புகளை ஏற்றுக்கொள்ளத் தவறியதில் ஆழமான பிரச்சினை உள்ளது. பெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட தரவுத்தளங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அணுக முடியாதவையாகவே உள்ளன. இதனால் கொள்கை சரிபார்ப்பு மற்றும் தானியங்கி நிலைத்தன்மை சோதனைகள் தடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக, 2025-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை கைமுறை (manual) பிழைகள், தாமதங்கள் மற்றும் முரண்பாடுகளின் பழைய சுழற்சியை மீண்டும் செய்தது.


மதிப்பு வாய்ந்த மற்றும் நம்பத்தகுந்த SIR-க்கு, இந்தியாவின் பில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு துல்லியம், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த, 2025-ஆம் ஆண்டின் டிஜிட்டல் யுகத்தில் 2000-ஆம் ஆண்டுகளின் காலாவதியான முறைகளைப் பிரதிபலிக்காமல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பு தேவைப்படுகிறது.


ஆதார்: ஒரு தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை


விரிவான விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, தேர்தல் நிர்வாக செயல்முறைகளுக்கு ஆதார் ஒரு செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமான டிஜிட்டல் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனியுரிமை மற்றும் தவறான பயன்பாடு குறித்த முந்தைய கால கவலைகள் இருந்தபோதிலும், இந்த முடிவு ஆதாரின் செயல்பாட்டு சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தியது, இது இந்தியாவின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் அடித்தளமாக நிறுவப்பட்டது.


இந்தியாவில் ஒப்பிடத்தக்க அடையாள அமைப்பு (comparable identity system) எதுவும் இல்லை. ஆதார் தனிப்பயனாக்கப்பட்ட விவரங்களை பயோமெட்ரிக் தரவுகளுடன் தனித்துவமாக இணைத்து, நம்பகமான தனிப்பட்ட சரிபார்ப்பை செயல்படுத்துகிறது. ஆதார் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் அங்கீகாரத்திற்காக அணுகக்கூடிய ஒரே மையப்படுத்தப்பட்ட அடையாள தரவுத்தளமாகும். காலப்போக்கில், வருகைப் பதிவு, உதவித்தொகை வழங்குதல், நலத்திட்டங்களை பகிர்தல், பணப் பரிவர்த்தனைகள், ஒருவர் உயிருடன் இருப்பதை நிரூபிப்பது மற்றும் பள்ளிகளில் ஆதார் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, இது இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் அடையாள அமைப்பாக மாறியுள்ளது.

எனவே, அதை தள்ளிவைப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமை ஆதார் சுற்றுச்சூழல் அமைப்பை வலுவானதாகவும், பாதிப்பை ஏற்படுத்த முடியாததாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற வேண்டும். பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வு பதிவுகளை பொருத்தமான பாதுகாப்புகளுடன் பாதுகாப்பாக ஒருங்கிணைக்க முடியும். தனியுரிமையை (privacy) சமரசம் செய்யாமல் வாக்காளர் பட்டியல்கள் மாறும் வகையில் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும். கடுமையான தரவு பாதுகாப்பு விதிமுறைகளின்கீழ் சரிபார்க்கப்பட்ட ஆதார் தரவை வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பது நகல் எடுப்பதை நீக்கலாம். இறந்த வாக்காளர்களை தானாகவே அகற்றலாம், குடியிருப்பு மாற்றங்களைப் புதுப்பிக்கலாம் மற்றும் போலி அல்லது பல பதிவுகளைத் தடுக்கலாம். தகவல்களைச் சேர்ப்பது, நீக்குவது அல்லது சரி செய்வது போன்ற ஒவ்வொரு மாற்றத்திற்கும் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட அங்கீகாரத்தைக் (digitally signed authorisation) கொண்டிருக்கும். இது உடைக்க முடியாத ஒரு தெளிவான பதிவை உருவாக்குகிறது. இது வாக்காளர் பட்டியலைத் வெளிப்படையானதாகவும், சரிபார்க்க எளிதாகவும், நம்பகமானதாகவும் ஆக்குகிறது.


தரவு முரண்பாடுகள்


பீகாரின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெரிய சிக்கல்களைக் காட்டியது. தெளிவான காரணங்கள் இல்லாமல் அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சொல்லாமல் 3.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. மாநிலத்தின் மதிப்பிடப்பட்ட வயது வந்தோர் மக்கள்தொகையைவிட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 80 லட்சம் (கிட்டத்தட்ட 10%) குறைவாக இருந்தது. அத்தகைய பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன என்பதைக் காட்டும் தெளிவான பதிவுகளோ அல்லது அது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை.


மேலும், ஆய்வு செய்ததில் வாக்காளர் பட்டியலில் பல சிக்கல்கள் கண்டறியப்பட்டன. 100 வயதுக்கு மேற்பட்ட சிலர் புதிய வாக்காளர்களாக தவறாக சேர்க்கப்பட்டனர். வாக்காளர் எண்ணிக்கையை அதிகமாக வைத்திருக்க சில பெயர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் மீண்டும் சேர்க்கப்பட்டன. செப்டம்பர் 2025-ல் 934-ஆக இருந்த பாலின விகிதம் (gender ratio) இறுதிப் பட்டியலில் 892-ஆகக் குறைந்தது. மக்கள்தொகைப் போக்குகளுடன் பொருந்தாத புள்ளிவிவர ரீதியாக நம்பமுடியாத மாற்றம் போன்ற மக்கள்தொகை புள்ளிவிவரங்களிலும் மொத்த மாறுபாடுகள் இருந்தன. இந்த முரண்பாடுகள் தரவு உள்ளீட்டுப் பிழைகள் அல்லது சரிபார்க்கப்படாத வெகுஜன திருத்தங்களைக் குறிக்கின்றன. இது தரவுத்தளத்தின் ஒருமைப்பாடு (integrity) குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.


மேலும், தரவு வெளிப்படைத்தன்மை இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல்கள் டிஜிட்டல் வடிவத்தில் பகிரப்படவில்லை. எந்த ஒரு நபரும் அவற்றை எளிதாக சரிபார்க்கவோ அல்லது மதிப்பாய்வு செய்யவோ முடியாது.


ஒட்டுமொத்தமாக, இந்த சிக்கல்கள் — மக்கள் தொகை தொடர்பான தவறுகள், கைமுறையிலான பிழைகள் மற்றும் தெளிவில்லாத தரவு பராமரிப்பு — எல்லாம் சேர்ந்து, வாக்காளர் பட்டியல் மேலாண்மை அமைப்பின் (electoral roll management) பலவீனங்களை வெளிக்காட்டுகின்றன. இது பட்டியல்களில் திருத்தம் செய்யும் செயல்முறையில் தொழில்நுட்ப அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் திறந்தவையாக உள்ள தரவுக் கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வலையமைப்பு குறித்து


இந்திய தேர்தல் ஆணையத்தின் வலையமைப்பு (Election Commission of India Network (ECI-Net)) உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க டிஜிட்டல் தரவுத்தளங்களில் ஒன்றாகும். இது ஏறக்குறைய ஒரு பில்லியன் வாக்காளர்களைக் கொண்ட பதிவாகும். பெயர் சேர்த்தல்கள், முகவரி மாற்றங்கள் மற்றும் சுயவிவர மாற்றங்கள் மூலம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இது தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (Electoral Photo Identity Card (EPIC)) அடையாள ஆவணம் மற்றும் வாக்காளர் பெயர் மூலம் தேடக்கூடியது மற்றும் இந்தியாவின் முதன்மையான கணினி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (Centre for Development of Advanced Computing (C-DAC)) நிர்வகிக்கப்படுகிறது. உலகளவில், இந்த முக்கியமான தரவுத்தளத்தின் அளவு, செயல்பாடு மற்றும் ஜனநாயக முக்கியத்துவத்துடன் பொருந்தக்கூடிய சில அமைப்புகள் மட்டுமே உள்ளன.


வடிவமைப்பின் மூலம், இந்திய தேர்தல் ஆணைய வலையமைப்பானது நகல் பதிவுகளைக் கண்டறியவும், பிழைகளை அடையாளம் காணவும், அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு மூலம் திருத்தங்களை எளிதாக்கவும் முடியும். இதன் கட்டமைப்பு உடனடியாக நிகழ்நேர மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அறிக்கைகளை வெளிப்படையாகவும் துல்லியமாகவும் உருவாக்க முடியும். தரவு பகுப்பாய்வு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைப் (Application Programming Interface (API)) பயன்படுத்துவதன்மூலம், சமீபத்திய வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புகளின்போது கண்டறியப்பட்ட பெரும்பாலான தவறுகள் மற்றும் மக்கள்தொகை தொடர்பான சிக்கல்களை இந்த அமைப்பு தானாகவே கண்டறிந்து சரிசெய்ய முடியும்.


இருப்பினும், வெளிப்படைத்தன்மையின்மையும், அமைப்பு மட்டத்தில் பகுப்பாய்வு இல்லாமையும் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. இந்த அளவிலான தரவுத்தளத்தில் எதிர்பார்க்கப்படுவது போல, தானியங்கி தணிக்கை மற்றும் பகுப்பாய்வு கருவிகள் ஏற்கனவே இருந்தால், அவை பெரிய அளவிலான கைமுறை தலையீடு இல்லாமல் நகல், மக்கள்தொகைப் பிறழ்வுகள் மற்றும் தரவு ஒழுங்கின்மைகளை எளிதாகக் கண்டறிந்திருக்க முடியும். இந்த டிஜிட்டல் திறன்களைப் பயன்படுத்தத் தவறியது, நிறுவன மந்தநிலையையோ அல்லது தொழில்நுட்ப அடிப்படையிலான வெளிப்படைத்தன்மையை வேண்டுமென்றே தவிர்ப்பதையோ குறிக்கிறது. இத்தகைய நடைமுறைகள், தற்போதைய நிலையான செயல்பாட்டு முறைகளின் (SoPs) ஒருமைப்பாட்டில் நம்பிக்கையை பலவீனப்படுத்துகின்றன. அதன் தலைமையில் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் இருந்தபோதிலும், சரிபார்க்கக்கூடிய மென்பொருள் அடிப்படையிலான நெறிமுறைகளுக்கு பதிலாக கைமுறை சரிபார்ப்பை நம்புவது விளக்க முடியாததாகவே உள்ளது. தரவு அடிப்படையிலான தணிக்கைகளும், அமைப்பு மட்டத்தில் வெளிப்படைத்தன்மையும் முன்னுரிமை அளிக்கப்படும் வரை, வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுகள் பொதுமக்களின் சந்தேகத்தையும், நிறுவன உள்நோக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தும்.


முன்னோக்கி செல்லும் வழி


இன்று, இந்தியா உலகின் மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் சூழல் அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. இது ஆதார்-இணைக்கப்பட்ட தரவுத்தளங்கள் (Aadhaar-linked databases) மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) முதல் தரவு பகுப்பாய்வு மற்றும் மின்-ஆளுகை வரை நீண்டுள்ளது. இருப்பினும், 2025ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்தை (Special Intensive Revision) வழி நடத்தும் நடைமுறைகள் இந்த முன்னேற்றத்தின் சிறிய பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. பலவீனங்கள் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியாகவும் உள்ளன. அவை கண்டறியும் தன்மை மற்றும் தரவுத்தள ஒருங்கிணைப்பு இல்லாததால் உருவாகின்றன. எனவே வழிகாட்டும் நெறிமுறைகளை சீர்திருத்துவது விருப்பமானது அல்ல; ஜனநாயக நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானது.


வாக்காளர் பட்டியல், நிலையான, மாநில எல்லைக்குட்பட்ட பதிவாக இல்லாமல், உயிருள்ள, முக்கியமான தேசிய சொத்தாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் துல்லியம் தேர்தல்களின் நேர்மையையும், தேர்தல் நிர்வாகத்தில் பொதுமக்களின் நம்பிக்கையையும் நேரடியாக வடிவமைக்கிறது.


நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்கத் தயாராகும் போது, ​​பீகாரில் நடந்தவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சமீபத்திய நீதிமன்றக் கருத்துக்கள் காட்டுகின்றன. எதிர்கால புதுப்பிப்புகள் சரியாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும், பொறுப்புடனும் செய்யப்பட வேண்டும். செயல்முறை தரவைச் சரிபார்க்க மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். தெளிவான டிஜிட்டல் பதிவுகளை வைத்திருக்க வேண்டும் மற்றும் தவறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் வலையமைப்பு (Election Commission of India Network (ECI-Net)) அமைப்பு பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவாக சரிசெய்யப்பட வேண்டும். மேலும், புகார்களைக் கையாள விரைவான மற்றும் பயனுள்ள வழி இருக்க வேண்டும்.


2025ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்தை வெறும் வழக்கமான சரிபார்ப்பாக இருக்கக்கூடாது; அது திறந்த, துல்லியமான மற்றும் நேர்மையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்பகமான செயல்முறையாக மாற வேண்டும்.


ராஜீவ் குமார் ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர், பிட்ஸ் பிலானி மற்றும் ஜேஎன்யு ஆகியவற்றில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர், டிஆர்டிஓ மற்றும் டிஎஸ்டியில் முன்னாள் விஞ்ஞானி.



Original article:

Share: