கடன் திருப்பிச் செலுத்தாததால் வீடுகளை இழப்பதில் இருந்து குடும்பங்களைப் பாதுகாத்தல்: கேரள ஒற்றை குடியிருப்பு பாதுகாப்பு மசோதா என்பது என்ன? -ஷாஜு பிலிப்

 கேரள அரசாங்கம் குடியிருப்பு பாதுகாப்பு நிதியை (Dwelling Place Protection Fund) உருவாக்கும். தற்போதுள்ள திட்டங்களின்படி, வருடத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.


கேரளா சட்டமன்றம் கேரளா ஒற்றை குடியிருப்பிட பாதுகாப்பு மசோதாவை (Kerala Single Dwelling Place Protection Bill) நிறைவேற்றியுள்ளது. இது நிதிச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு வட்டி அமலாக்கச் சட்டம், 2002 (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002) இன் கீழ் வங்கி நிறுவனங்களால் கைப்பற்றப்படுவதிலிருந்து தவணை தவறிய கடனாளியின் அடமானம் வைக்கப்பட்ட சொத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக ஒரு மாநிலம் கடனாளிகளைப் பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.


மசோதா


நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களை அடமானம் வைத்து அந்த தொகையை திருப்பிச் செலுத்தாததால், குடும்பங்கள் தங்கள் வீடு/வசிக்கும் இடத்தை வெளியேற்றுவதன் மூலம் தங்கள் ஒற்றை வசிப்பிடத்தை இழக்கும் சூழ்நிலையைத் தடுப்பதற்காக இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கேரள மாநில நிதி நிறுவனங்கள் (Kerala State Financial Enterprises (KSFE)) உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களையும் கொண்டிருக்கும்.


நிபந்தனைகள்


கடன் தொகை ரூ 5 லட்சத்தை தாண்டக்கூடாது மற்றும் கடனாளிக்கு நகராட்சி பகுதிகளில் 5 சென்ட்டுக்கும் அதிகமான நிலமும் கிராமப்புற பகுதிகளில் பத்து சென்ட்டுக்கும் அதிகமான நிலமும் இருக்கக்கூடாது. கடன், அதன் வட்டி, அபராத வட்டி மற்றும் பிற தற்செயலான செலவுகள் உள்ளிட்ட நிலுவைத் தொகை, ரூ.10 லட்சத்தை தாண்டக்கூடாது. விண்ணப்பதாரருக்கு வேறு சொத்துகள் இருக்கக்கூடாது மற்றும் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்வி, சிகிச்சை, திருமணம், வீடு கட்டுதல்/வீடு புதுப்பித்தல், விவசாயம் மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான வாழ்வாதாரத்தை உருவாக்குதல் தவிர வேறு எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்ட கடன்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்படாது.





கடனாளி (debtor) எவ்வாறு நிவாரணம் பெறுவார்


ஒரு குடும்பம்/தனிநபர், தனது வசிப்பிடத்தை அடமானம் வைத்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், நிதி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பறிமுதல் அல்லது மீட்பு நடவடிக்கைகளின் காரணமாக தங்கள் வசிப்பிடத்தை இழக்கும் பட்சத்தில், அவர்கள் பாதுகாப்பிற்கு தகுதி உடைய நபர்களாக மாறுவார்கள்.


மாவட்ட மற்றும் மாநில அளவில் குடியிருப்பிட பாதுகாப்பு குழுக்கள் இருக்கும். பாதிக்கப்பட்ட ஒருவர் மாவட்ட அளவிலான குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம். இதில் மாவட்ட வளர்ச்சி ஆணையர் (district development commissioner) தலைவராகவும் விவசாயம், பஞ்சாயத்து, மாவட்ட பேரிடர் மேலாண்மை (district disaster management) மற்றும் முன்னணி வங்கியின் மூத்த அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இரு தரப்பினரையும் கேட்டு, சமரசம் (conciliation) ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடனை திருப்பிச் செலுத்த முடியாது எனக் குழு நம்பினால், அந்த விண்ணப்பத்தை மாநிலக் குழுவிற்கு அனுப்பி, அரசு கடனை ஏற்றுக்கொள்ள பரிந்துரை செய்யப்படும்.



பரிந்துரையைப் பெற்றதும், மாநில அளவிலான குழு மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டு வேண்டுகோளை நிராகரிப்பது அல்லது அரசாங்கம் கடனை ஏற்றுக்கொள்ள உத்தரவிடுவது என்ற முடிவை எடுக்கும். அரசாங்கத்தின் எந்தவொரு வீட்டுவசதி திட்டத்திலும் நிலுவையில் உள்ள கடனை உள்வாங்குவதற்கான ஏற்பாடும் இதில் உள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள தலைமை செயலாளர் (Chief Secretary) அல்லது கூடுதல் தலைமை செயலாளரிடம் (Additional Chief Secretary) மேல்முறையீடு செய்யலாம்.


கேரளா அரசாங்கம் குடியிருப்பிட பாதுகாப்பு நிதியை (Kerala Dwelling Place Protection Fund) உருவாக்கும் மற்றும் தற்போதுள்ள திட்டங்களின்படி, இதற்காக ஒரு வருடத்தில் ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.




ஏன் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது


2017ஆம் ஆண்டில், கேரளா சட்டமன்றம் மத்திய அரசை சர்பாசி சட்டம், 2002ஆம் ஆண்டு சட்டத்தில் (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act (SARFAESI Act)) திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ரூ.10 லட்சத்திற்கு குறைவான நிலுவைக் கடன்கள் மற்றும் ஐந்து சென்ட் வரையிலான குடியிருப்பு நிலங்களை சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்க மாநிலம் விரும்பியது.


இருப்பினும், மத்திய அரசு சிறிய அளவிலான கடனாளிகளுக்கு பயனளிக்க எந்த நிவாரணமும் அளிக்கவில்லை. இதன் காரணமாக, மாநிலம் தனது தனிப்பட்ட சட்டத் தீர்வை உருவாக்கியது. இந்த மசோதா மாநிலத்தின் லைப் திட்டத்தின் (Life Mission scheme) கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கட்டப்பட்ட  4 லட்சம் வீடுகளுக்கும் பாதுகாப்பை வழங்க உள்ளது.



Original article:

Share: