தற்போதைய செய்திகளில் ஏன்?
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ எம் கான்விலார் தலைமையிலான 7 உறுப்பினர்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு குறைதீர்ப்பாளர் லோக்பால் (Lokpal) அமைப்பு, 7 BMW கார்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் லோக்பால் அமைப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
‘இந்தியாவின் லோக்பால் அமைப்பிற்கு 7 BMW 3 series 330Li-கார்களை வழங்குவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வெளிப்படையான ஒப்பந்தங்களை வரவேற்கிறது என்று அக்டோபர் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘long wheelbase’ மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள ‘M Sport’ வகை கார்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
முக்கிய அம்சங்கள்:
1. லோக்பால் என்பது இந்தியாவில் ஒரு சுதந்திரமான ஊழல் எதிர்ப்பு அமைப்பாகும். இது மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஒன்றிய அரசுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கவும் உருவாக்கப்பட்டது. இது 2010ஆம் ஆண்டில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான ஜன் லோக்பால் இயக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் நிறுவப்பட்டது. இந்தியா தனது முதல் லோக்பால் அமைப்பை 2019-ல் பெற்றது.
2. 2013ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், லோக்பால் ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். இவர்களில் 50% நீதித்துறை உறுப்பினர்களாக (judicial members) இருக்க வேண்டும். லோக்பாலின் உறுப்பினர்களில் 50%-க்கும் குறையாமல் பட்டியல் சாதியினர் (Scheduled Castes), பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes), சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது.
3. இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு மாநிலமும் லோக்ஆயுக்தா என்ற அமைப்பை அமைக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த அமைப்பு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். சில பொது அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களை லோக்ஆயுக்தா கையாளும் என்று சட்டம் கூறுகிறது.
4. சட்டத்தின் பிரிவு 11, லோக்பால் விசாரணை இயக்குநர் தலைமையில் ஒரு விசாரணைப் பிரிவை அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (public servants under the Prevention of Corruption Act) இன் கீழ் பொது ஊழியர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்தப் பிரிவு பொறுப்பாகும். விசாரணை இயக்குநர் இந்திய அரசின் இணைச் செயலாளருக்குக் குறையாத பதவியில் இருக்க வேண்டும். மேலும், லோக்பால் பரிந்துரைக்கும் விசாரணைகளைக் கையாள இவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவார்.
5. இந்தச் சட்டத்தின் கீழ் லோக்பாலுக்கு அளிக்கப்படும் புகார்களின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாள, வழக்குத் தொடுப்பு இயக்குநர் (Director of Prosecution) தலைமையிலான ஒரு வழக்குத் தொடுப்புப் பிரிவையும் இது கொண்டுள்ளது.
லோக்பால் தினம்
இந்த ஆண்டு, இந்திய லோக்பால் நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கும் வகையில் ஜனவரி 16 முதல் முறையாக லோக்பால் தினமாகக் (Lokpal Day) கொண்டாடப்பட்டது. 2014ஆம் ஆண்டு இந்த நாளில்தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் சட்டம், 2013-ன் பிரிவு 3 அமலுக்கு வந்ததன் மூலம் இந்திய லோக்பால் நிறுவப்பட்டது.
6. லோக்பாலின் அதிகார வரம்பு (jurisdiction) பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல், மத்திய அரசின் A, B, C மற்றும் D குழு ஊழியர்கள் வரை பரந்த அளவிலான அரசு பணியாளர்களை உள்ளடக்கியது. லோக்பாலின் சொந்த உறுப்பினர்கள் கூட ‘பொது ஊழியர்’ (public servant) என்ற வரையறையின் கீழ் உள்ளனர்.
7. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தால் அதை விசாரிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச உறவுகள், வெளிப்புற மற்றும் உள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி தொடர்பானதாக இருந்தால் லோக்பால் விசாரிக்க முடியாது. மேலும், முழு லோக்பால் அமர்வும் விசாரணையைத் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு குறைந்தது 2/3 பங்கு உறுப்பினர்கள் அதற்கு அனுமதி அளிக்காவிட்டால், பிரதமருக்கு எதிரான புகார்கள் விசாரிக்கப்படாது.
8. பிரதமருக்கு எதிரான அத்தகைய விசாரணை (நடத்தப்பட்டால்) இரகசியமாக நடத்தப்பட வேண்டும். புகார் நிராகரிக்கப்பட வேண்டும் என்று லோக்பால் முடிவுக்கு வந்தால், விசாரணையின் பதிவுகளை பகிரப்படவோ அல்லது எந்த ஒரு நபருக்கும் கிடைக்கச் செய்யவோ கூடாது.
9. தற்போதைய லோக்பாலில் அனுமதிக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களில் ஏழு பேர் உள்ளனர். தலைவர் நீதிபதி கான்வில்கரைத் தவிர, அமைப்பில் உள்ள ஆறு உறுப்பினர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ்; கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி; கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எல் நாராயண சுவாமி; முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா; குஜராத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் பங்கஜ் குமார் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அஜய் திக்ரே ஆகியோர் உள்ளனர்.
10. லோக்பால் சட்டத்தின் பிரிவு 7, லோக்பால் தலைவரின் சம்பளங்கள், படிகள் மற்றும் சேவை நிபந்தனைகள் இந்திய தலைமை நீதிபதிக்கு உள்ளதைப் போலவே இருக்கும் என்று கூறுகிறது மற்ற உறுப்பினர்களுக்கான அது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு உள்ளதைப் போலவே இருக்கும். தலைமை நீதிபதிக்கு ஒரு Mercedes கார் வழங்கப்படுகிறது. அதே சமயம் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு BMW 3 series கார்கள் வழங்கப்படுகின்றன. இது லோக்பால் அமைப்பு அறிவிப்பு விடுத்த அதே வகை கார் ஆகும்.
குறைதீர்ப்பாளர் அமைப்பின் தோற்றம்
1. குறைதீர்ப்பாளர் (ombudsman) அமைப்பு 1809-ல் ஸ்வீடனில் (Sweden) தோன்றியது. மேலும், அதிகாரத்துவத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக ஜனநாயக அரசாங்கத்தின் அரணாக பல நாடுகளால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறைதீர்ப்பாளர் என்பது ஒரு Swedish வார்த்தை, இது நிர்வாக மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான புகார்களைக் கையாள சட்டமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியைக் குறிக்கிறது.
2. இந்தியாவில், 1966ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)), குடிமக்களின் குறைகளைத் தீர்க்கவும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க சேவைகளுக்குள் ஊழலை எதிர்த்துப் போராடவும் குறைதீர்ப்பாளர் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு அமைப்பின் யோசனையை முதன்முதலில் முன்மொழிந்தது. மத்திய அளவில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோகாயுக்தா என்ற இரண்டு சிறப்பு அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
3. 1968 முதல் 2001ஆம் ஆண்டு வரை, குறைதீர்ப்பாளர் அமைப்பை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த லோக்ஆயுக்தாக்களை அமைத்தன. இது லோக்பாலுக்கு சமமானதாகும். மகாராஷ்டிரா லோக் ஆயுக்தா மற்றும் உபயுக்தா சட்டம் என்ற சிறப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி 1971ஆம் ஆண்டில் லோக் ஆயுக்தாவை உருவாக்கிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.