இந்தியா தனது தொழிற்துறையைத் தக்கவைக்க சூரிய மின்சக்தியை வழங்கும் நாடாக மாற வேண்டும்.
இந்தியா பெருமை கொள்ளக்கூடிய வெற்றிகளில் ஒன்று உள்நாட்டு சூரிய மின்சக்தி தொழிற்துறையை உருவாக்குவதாகும். 2017ஆம் ஆண்டில், மின்சக்தியின் ஒரு யூனிட் விலை நிலக்கரி சக்தியை விட குறைவாக இருந்தது. இது தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி திட்டங்களில் முதலீடு செய்யும் வணிகங்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. 2024-25ஆம் ஆண்டில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (International Renewable Energy Agency) இந்தியா 1,08,494 ஜிகாவாட்-மணி நேரம் (gigawatt-hour (Gwh)) சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ததாக அறிவித்தது.
இது ஜப்பானின் 96,459 ஜிகாவாட்-மணி நேரத்தை விட அதிகமாக இருந்ததாகவும் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளராக இந்தியாவை மாற்றியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (Ministry of Renewable Energy) கூற்றுப்படி, இந்தியாவின் சூரிய மின்கல கட்டமைப்புகள் (solar module panels) தயாரிக்கும் திறன் 2014ஆம் ஆண்டில் 2 ஜிகாவாட் ஆக இருந்து. இது 2025ஆம் ஆண்டில் 100 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் உள்நாட்டில் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 117 ஜிகாவாட் ஆக இருந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்பினும், உண்மையான உற்பத்தி திறன் நம்பிக்கையான மதிப்பீடாகும். தற்போதைய உண்மையான உற்பத்தி திறன் சுமார் 85 GW ஆகும்.
இந்தியா தனது காலநிலை உறுதிமொழிகளின் (climate commitments) ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டில் தனது மின்சார தேவைகளில் பாதி அளவை புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறுவதாக அறிவித்துள்ளது. இதன் அளவு 500 ஜிகாவாட் ஆகும். இதில் 250 ஜிகாவாட் 280 ஜிகாவாட் சூரிய சக்தியிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் இந்தியா 2030ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 30 ஜிகாவாட்டை சேர்க்க வேண்டும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வருடத்திற்கு 17 ஜிகாவாட் முதல் 23 ஜிகாவாட் வரை மட்டுமே சேர்க்க முடிந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இருக்க வேண்டும் என்றாலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் சூரிய மின்கல கட்டமைப்புகள் சீனாவை விட 1.5 முதல் 2 மடங்கு வரை அதிக விலை கொண்டவை.
ஏனெனில், சீனாவின் மிகப்பெரிய திறன், தேவையான மூலப்பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் மிக உயர்ந்த உற்பத்திகள் இதற்கு முக்கிய காரணியாகும். 2024ஆம் ஆண்டில், இந்தியா தனது சிறந்த சாதனையாக அமெரிக்காவுக்கு சுமார் 4 ஜிகாவாட் அளவிலான சூரிய மின்கல கட்டமைப்புகளை ஏற்றுமதி செய்தது. அதுவும் அமெரிக்காவின் தற்காலிக வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாகவே சாத்தியமானது. இதனை சீனாவின் 2024 ஆம் ஆண்டில் சுமார் 236 ஜிகாவாட் அளவிலான ஆண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடலாம்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகவிருக்கும் பெரிய உற்பத்தி திறன், புதிய சந்தைகள் இல்லாமல் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த நிலையில், இந்தியா ஆப்பிரிக்காவிற்கு ‘சூரிய ஆற்றல் வழங்குநராக’ (solar supplier) முன்னிலை வகிக்க முயற்சிப்பது சர்வதேச சூரிய கூட்டமைப்பு (International Solar Alliance) மூலம் ஒரு நல்ல நடவடிக்கையாகும். இந்தியாவின் பிரதம மந்திரி குஸும் திட்டம் (PM Kusum scheme) கிராமப்புறங்களுக்கு சூரிய ஆற்றல் மற்றும் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டம் (PM Surya Ghar scheme) நகர்ப்புறங்களில் கூரையிலான சூரிய ஆற்றல் ஆகியவை இன்னும் நாட்டுக்குள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், அவை ஆப்பிரிக்காவில் முன்மாதிரியாக பயன்படுத்தப்படலாம். அங்கு போதுமான கிராமப்புற மின்சாரம் இல்லாததால், அதன் விளைநிலங்களில் 4% மட்டுமே பாசனம் மூலம் பயன்படுத்த முடிகிறது. இது சூரிய ஆற்றல் இயங்கும் இந்திய மின்பம்புககளுக்கான பெரிய வாய்ப்பாக இருக்கிறது. சீனா இன்னும் ஆப்பிரிக்காவில் முக்கியமான சூரிய ஆற்றல் வழங்குநராக இருந்தாலும், இந்தியா 2-வது நம்பகமான நாடாக தன்னை நிலைநிறுத்தி, தன் தொழில்துறையில் நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்பை பெற வேண்டும்.