குடிமக்களில் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்கள் பலமுறை தலையிட வேண்டியிருப்பது, நிர்வாகத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
"மாற்றுப் பாலினத்தை" அங்கீகரித்து திருநங்கைகளின் உரிமைகளை ஆதரித்த முக்கியமான தேசிய சட்ட சேவைகள் ஆணைய (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பு வெளிவந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அவர்களைப் பாதுகாப்பதற்கான 2020 விதிகள் (Transgender Persons (Protection of Rights) Rules) தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவர்கள் இன்னும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அக்டோபர் 17 அன்று, மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (Transgender Persons (Protection of Rights) Act), 2019 மற்றும் அதன் விதிகளைப் புறக்கணித்ததற்காக உச்ச நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்தது, இது "மாற்றுப் பாலினத்தவர் சமூகத்தின் மீது மிகவும் அக்கறையற்ற அணுகுமுறையைக்" காட்டுகிறது என்று குறிப்பிட்டது.
ஜேன் கௌஷிக், ஒரு மாற்றுப்பாலினத்தவர். ஒரு வருடத்திற்குள் தான் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் தனது வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தை அணுகினார். மாற்றுப் பாலினத்தவர் சட்டம் (Trans Act) எவ்வளவு சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது என்பதை சரிபார்க்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை உருவாக்கியது. இந்தக் குழு சம வாய்ப்புகளுக்கான நியாயமான கொள்கையை பரிந்துரைக்கும். இந்தக் குழு தங்கள் வரைவைச் சமர்ப்பித்த மூன்று மாதங்களுக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். சொந்தக் கொள்கைகள் இல்லாத அமைப்புகளுக்கு, ஒன்றிய அரசின் கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்படும்.
சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்புகளை செயல்படுத்த ஒரு குழுவை உருவாக்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால், இது ஒரு பெரிய தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கண்ணியமான மற்றும் சமத்துவமான வாழ்க்கையை மாற்றுப்பாலினத்தவர்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழ உதவுவதில் அரசாங்கம் உறுதியாக இல்லை. தேசிய சட்ட சேவைகள் ஆணைய (National Legal Services Authority (NALSA)) தீர்ப்பு மற்றும் மாற்றுப்பாலினத்தவர் விதிகள் (Trans Rules) மாற்றுப்பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ பராமரிப்பு மற்றும் கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்புகளை கட்டாயப்படுத்துகின்றன.
இருப்பினும், நடைமுறைப்படுத்தல் மிகவும் மோசமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, விதிகள் அரசுகள் மருத்துவமனைகளில் தனி கழிவறைகள் மற்றும் வார்டுகளை (wards) கட்ட வேண்டும் என்று கோருகின்றன. இருப்பினும், காலக்கெடுவை கடந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இது ஒரு கனவாகவே உள்ளது. மேலும், மாற்றுப்பாலினத்தவர் நலவாழ்வு வாரியங்களை (transgender welfare boards) அமைப்பதையும் கட்டாயப்படுத்தின. 2024ஆம் ஆண்டு வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இதை நடைமுறைப்படுத்திருந்தன. எனினும், இவை இன்னும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிகாரத்துவ அக்கறையின்மை மற்றும்/அல்லது உணர்வின்மை காரணமாக மருத்துவ பராமரிப்பு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் கடவுச்சீட்டு (Passport) மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் மறுக்கப்பட்டதால், நாடு முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
குடிமக்களில் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவின் உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்கள் பலமுறை தலையிட வேண்டியிருப்பது, நிர்வாகத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. விதிகள் மற்றும் குழுவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.