நவம்பர் மாதம் பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற உள்ள காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (Conference of the Parties (COP30)) முன்னரே, பல வளர்ந்த மேற்கத்திய நாடுகள் காலநிலை நடவடிக்கைகளில் தலைமை தாங்க தயங்குகின்றன. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும், காலநிலை உறுதிமொழிகளைப் புதுப்பித்து, தகுதியான ஒரு தகவமைப்புத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் குறித்து இந்தியா உலகளாவிய தலைமையை ஏற்க வேண்டுமா? ஜேக்கப் கோஷி நடத்தும் உரையாடலில் ஹிஷாம் முண்டோல் மற்றும் உல்கா கெல்கர் ஆகியோர் இந்தக் கேள்வியைப் பற்றி விவாதிக்கின்றனர்.
திருத்தப்பட்ட பகுதிகள்:
இது காலநிலை மாற்ற மாநாட்டிற்கு மிகவும் அசாதாரணமான முன்னோட்டமாகத் தெரிகிறது. அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் காலநிலை தொடர்பான தலைமையை ஏற்கத் தயங்குகிறது. மேலும் காலநிலை மாற்ற மாநாட்டை நடத்தும் பிரேசில், செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. நாம் ஒரு முழுமையான தோல்வியை நோக்கிச் செல்கிறோமா?
ஹிஷாம் முண்டோல்: நான் பிரகாசமான பக்கத்தைப் பார்க்க முனைகிறேன். பெரும்பாலான காலநிலை மாற்ற மாநாட்டின் கூட்டங்களுக்கு முன்பு, விவகாரங்கள் பெரும்பாலும் தெளிவாகத் தெரியவில்லை. உலகம் நிச்சயமற்ற அரசியல் காலங்களைக் கடந்து செல்கிறது. எனவே, 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் போன்ற பெரிய முடிவுகளை நாம் காண முடியாமல் போகலாம். 'நல்ல ஒருங்கிணைப்பு அமைப்பு' (Axis of Good) என்று அழைக்கப்படும் நாடுகளின் குழு, காலநிலை மாற்றத்தில் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் காண்கிறேன். ஐரோப்பியர்களும் இந்தியர்களும் காலநிலை தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுகிறார்கள். மேலும், பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகள், காடுகள் போன்ற பொதுவான பகுதிகளில் இணைந்து பணியாற்றினால் எனக்கு ஆச்சரியம் எதுவும் இருக்காது. சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் இந்தியா மிகவும் முக்கிய நாடக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதைவிட முக்கியமான ஒன்று நிலைத்தன்மையாகும். இந்தியாவில் காலநிலை மாற்றம் என்பது அரசியல் ரீதியாகப் பிளவுபடுத்தும் பிரச்சினை அல்ல. நாங்கள் உறுதிமொழிகளைச் செய்துள்ளோம், அவற்றை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். இறுதியாக, 'செயல்படுத்தப்பட உள்ள காலநிலை மாற்ற மாநாடு' என்பது லட்சியமாகத் தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நாம் செயல்படுத்த முடிந்தால், அதுதான் உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.
உல்கா கெல்கர்: முதலாவதாக, இந்த காலநிலை மாற்ற மாநாடு, காலநிலை மாற்றத்திற்கு நிதி தேவை என்பதை வலியுறுத்தும் என்றும், தனியார் துறை வருவாய் ஏற்கனவே இருக்கும் இடங்களில் தணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல என்றும் நான் எதிர்பார்க்கிறேன். எனவே, சூரிய சக்தி அல்லது மின்சார வாகனங்களுக்கு நிதி மட்டுமல்ல, விவசாயம் மற்றும் நீர்வளங்கள் போன்ற துறைகளில் காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப தாங்கும் முயற்சிகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, செயல்படுத்தலில் கவனம் செலுத்துவது என்பது நம்மைப் போன்ற நாடுகள் பொதுத் துறைகளில் மட்டுமல்ல, முதலீடு செய்ய குறிப்பிட்ட திட்டங்களைத் திட்டமிட வேண்டும் என்பதாகும்.
மூன்றாவதாக, 2035-ஆம் ஆண்டுக்குள் காலநிலை நடவடிக்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் $1.3 டிரில்லியன் இந்த காலநிலை மாற்ற மாநாட்டில் 'பாகு டு பெலெம்' திட்ட வரைபடத்தின் முக்கியப் பகுதியாக இருக்க வேண்டும். இந்த திட்ட வரைபடம் முழு நிதி அமைப்பையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் - பொது நிதி மட்டுமல்ல தனியார் நிறுவனங்கள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் - நிதியுதவியை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
செயல்படுத்தல் என்பது நாடுகள் தங்கள் நாட்டில் செய்ய வேண்டியது, இல்லையா? அதற்கு நமக்கு ஏன் காலநிலை மாற்ற மாநாடு தேவை?
உல்கா கெல்கர்: பல காலநிலை மாற்ற மாநாடுகளின் பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய முறிந்து போகும் நிலையை அடைகின்றன. கடைசி நிமிடத்தில் அதைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, செயல்முறை தொடர்கிறது. மேலும், ஒவ்வொரு காலநிலை மாற்ற மாநாடும் முந்தைய மாநாடுகளைவிட படிப்படியாக வளர்ச்சியடைகிறது.
செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி விவாதிக்காமல் அதை செயல்படுத்துவது சாத்தியமில்லை. அதற்கு முதன்மையானது நிதியாகும். இது தொழில்நுட்பம் மற்றும் திறன்களையும் குறிக்கலாம். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கும் தணிப்பதற்கும் தேவையான பணத் தொகுப்பில் சேர்க்கக்கூடிய புதுமையான புதிய நிதி ஆதாரங்கள் குறித்த விவாதங்கள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவாதங்கள் நடந்தவுடன், செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நாடுகள் திரும்பிச் சென்று சில நடைமுறை அடிப்படையில் (திட்டங்களை) செயல்படுத்தலாம். இல்லையெனில், செயல்படுத்தல் என்பது நாடுகள் தங்கள் நாட்டில் எவ்வளவு பொது நிதியை திரட்ட முடியுமோ அல்லது தனியார் நிறுவனங்களும் வங்கிகளும் லாபத்தை மட்டும் தான் கருத்தில் கொண்டு எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ என்பதை மட்டுமே சார்ந்து இருக்கும்.
அறிவியல் சார்ந்த உண்மை என்னவென்றால், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான நாடுகளின் அதிகாரப்பூர்வ உறுதியளித்தாலும், 2100-ஆம் ஆண்டுக்குள் பாரிஸ் ஒப்பந்த இலக்கான 2°C அதிகரிப்பைக் காட்டிலும் குறைவான உலகளாவிய உமிழ்வைக் குறைக்க வாய்ப்பில்லை. இதற்குக் காரணம், நாம் முன்னர் விவாதித்தது போல, இதில் உள்ள அதிக செலவுகள் தான். நாடுகள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, காலநிலை தீர்வுகளுக்கு நிதியளிப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துவதை எவ்வாறு உறுதி செய்வது?
ஹிஷாம் முண்டோல்: நாடுகள் தாராள மனப்பான்மையுடன் மட்டுமல்லாமல், தனிநபர், தேசிய, ராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நலன்களால் இயக்கப்படும்போது சிறப்பாக செயல்பட்டது. உதாரணமாக, அனைத்து உலக நாடுகளும் HIV-AIDS நோய்க்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. சப்-சஹாரா ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி இந்த தொற்றுநோயால் பேரழிவை சந்திக்கப்போகிறது என்பதை உணர்ந்ததால், அது அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று கருதியது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்களை சரிசெய்வது, வளர்ச்சி மூலம் அவற்றைத் தடுப்பதை விட அதிகமாக செலவாகும். சீனா சுற்றுச்சூழலுக்காக மட்டுமல்ல, எதிர்காலமாகவும் அதைப் பார்ப்பதால் பசுமைப் பொருளாதாரத்தில் முதலீடு செய்கிறது. அதானி மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய இந்திய நிறுவனங்கள் பசுமை ஆற்றலில் முதலீடு செய்கின்றன. ஏனெனில், அது அவர்களுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும். பல நாடுகள் கார்பன் சந்தைகளையும் ஆராய்ந்து வருகின்றன. அங்கு உமிழ்வைக் குறைப்பது லாபகரமானதாக இருக்கும்.
உல்கா கெல்கர்: பெரும்பாலும், இந்தியாவிற்கான சவாலின் அளவு மேற்கத்திய நாடுகளில் எப்போதும் புரிந்து கொள்ளப்படுவதில்லை, சில சமயங்களில் அந்த அளவுகோல் வழங்கும் வாய்ப்பும் முழுமையாகப் பாராட்டப்படுவதில்லை என்றும் நான் நினைக்கிறேன். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதிகமாக இருப்பதால், முதன்முறையாக மின்சாரத் துறையின் உமிழ்வு அதிகரிப்பதை நிறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்திற்கான மாதிரி கணிப்புகளைப் பார்த்தால், பல ஆண்டுகளாக, வீடுகள் கட்டப்பட வேண்டிய, உற்பத்தி வேலைகள் உருவாக்கப்பட வேண்டிய, போக்குவரத்து முதல் சமையல் வரை பல்வேறு பயன்பாடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டிய ஒரு வளர்ந்துவரும் பொருளாதாரமாக இருந்தாலும், இந்தியாவின் மின்துறை உமிழ்வுகள் உண்மையில் வளரும் என்று கணிக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, ஆற்றலுக்கும் உமிழ்வுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு வகையான இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதன் அளவை மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் எப்போதும் பாராட்டுவதில்லை.
தகவமைப்பு என்று வரும்போது, தீர்வின் அளவு முக்கியமானது. விவசாயத்திற்கான பிரதான் மந்திரி கிசான் ஊர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மஹாபியன் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) சூரிய சக்தி திட்டம் அல்லது பொது போக்குவரத்திற்கான மின்சார பேருந்துகள் போன்ற புதுமையான திட்டங்கள் செலவுகளைக் குறைத்து சேவைகளை மிகவும் குறைவான விலையில் வழங்க முடியும்.
இரண்டாவதாக, தகவமைப்பு மற்றும் தணிப்பு நன்மைகள் இரண்டும் உள்ள திட்டங்களை நாம் தீவிரமாக ஆராய வேண்டும். உதாரணமாக, வெப்பம் அல்லது வெள்ள அபாயங்களின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கு மட்டுமல்லாமல், உமிழ்வைக் குறைக்கவும் உதவும் திட்டங்கள் கண்டிப்பாக வேண்டும். உதாரணமாக, விவசாயத்தில் சூரிய சக்தியில் இயங்கும் சங்கிலித்தொடர்-குளிர் சேமிப்பு அமைப்புகள் (cold-chain storage systems) இருக்கலாம்.
காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (Conference of the Parties (COP30)) முன்னர், மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் அதன் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDCs)) புதுப்பிக்க வேண்டும். மேலும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கான திட்டத்தையும் (National Adaptation Plan (NAP)) சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் என்ன சேர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஹிஷாம் முண்டோல்: 2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 50% மின்சாரத்தைப் பெறுவதை இந்தியா ஏற்கனவே லட்சியமாகக் கொண்டுள்ளது. இதில் அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: இந்தியாவின் மின்சாரத்தில் பாதி புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து வருகிறது. பசுமை ஹைட்ரஜன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், இரண்டையும் அதிகாரப்பூர்வமாக இணைப்பது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். இந்த மாற்றம் சிறியதாக இருந்தாலும், அதை தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளில் சேர்ப்பது, இந்தியா தனது காலநிலை இலக்குகளில் தீவிரமாக இருப்பதைக் வெளிப்படையாகக் காட்டும்.
உல்கா கெல்கர்: பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரம் தொழில்துறை ஆகும். இது குறைக்க கடினமான துறையாக இருக்கிறது. ஏனெனில், இவை எரிபொருளை மாற்றக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதிலிருந்து வருவதில்லை, மாறாக செயல்முறை உமிழ்வுகளிலிருந்து நிறைய உமிழ்வுகள் வருகின்றன. உங்களிடம் சிமென்ட் தயாரிக்க வேறு வழி அல்லது எஃகு தயாரிக்க வேறு வழி இல்லையென்றால், அந்த செயல்முறை உமிழ்வை மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, இது ஒரு நீண்டகால செய்தியாக, தொழில்துறைக்கு ஒருவித புதிய தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்காகக் கருத வேண்டிய நேரமாக இருக்கலாம். இது அதிக மின்மயமாக்கலைக் கொண்டுவருவதைக் குறிக்கலாம். இது புதுப்பிக்கத்தக்க அல்லது தூய்மையான மூலங்களிலிருந்து வரலாம்.
இரண்டாவதாக, சில திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வழிகளை நாம் பரிசீலிக்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு, இந்தியா சர்வதேச கார்பன் சந்தையில் பங்கேற்க விரும்பும் திட்டங்களின் பட்டியலை உருவாக்கியது. உதாரணமாக, அது கூறியது, சூரிய சக்தியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வரவுகளை விற்க விரும்பவில்லை; சூரிய சக்தியுடன் சேமிப்பு (மின்கலன்களைப் பயன்படுத்தி) ஆகியவற்றை பரிசீலிக்க விரும்புகிறோம். எனவே, ஏன் ஏற்புக்காகவும் அத்தகைய முன்னுரிமை திட்டங்களின் விருப்பப் பட்டியலை உருவாக்கக்கூடாது, இது நிச்சயமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தாலும் மாற்றியமைக்கப்படலாம்? மேலும், அதனுடன், நிதி ‘கலப்பு’ முறையில் (தனியார் மற்றும் பொதுத் துறையால் பகுதியாக நிதியளிக்கப்பட்டு) வழங்கப்படக்கூடிய குறிப்பிட்ட மாதிரிகளைக் குறிப்பிடலாமா?.