நகராட்சிகளின் நிதிக் கட்டமைப்பு ஏன் குறைபாடுடையதாக உள்ளது? -திகேந்தர் சிங் பன்வார்

 நகராட்சி பத்திரங்கள் (municipal bonds) உள்ளூர் நிதியின் புதிய எல்லையா? ஒன்றிய அரசு வரிகளை அதிகமாகக் கட்டுப்படுத்துவது ஒரு பிரச்சனையா?


தற்போதைய செய்தி: நகர்ப்புற இந்தியா (Urban India) தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கை உருவாக்குகின்றன. ஆனால், நகராட்சிகள் நாட்டின் வரி வருவாயில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பெறுகின்றன. இந்திய நகரங்கள் போதுமான நிதியை உருவாக்கவில்லை. அதற்குக் காரணம் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அல்ல. மாறாக, நிதி மற்றும் வரிவிதிப்பு முறைகள் அவற்றுக்கு போதுமான ஆதரவு வழங்காதது இதற்கு முக்கிய காரணியாகும். இன்று, நகராட்சி நிதி, அரசுகளுக்கிடையேயான பரிமாற்றங்கள், கடன்கள் மற்றும் திட்டங்களைச் சார்ந்துள்ளது. ஒன்றிய அரசு வரிகளை அதிகமாகக் கட்டுப்படுத்துவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.


நகரங்கள் தங்கள் வரி வருவாயை எவ்வாறு இழந்தன?


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்திய நகரங்கள் தங்கள் சொந்த வருவாய் ஆதாரங்களில் ஏறக்குறைய 19% இழந்தன. நகராட்சி பட்ஜெட்டுகளின் பாரம்பரிய உயிர்நாடிகளான நகராட்சி வரி (Octroi), நுழைவு வரி மற்றும் உள்ளூர் கூடுதல் கட்டணங்கள் சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பிற்குள் சேர்க்கப்பட்டன. வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீட்டு வழிமுறைகள் (compensatory mechanisms) பெரும்பாலும் நகராட்சிகளைத் தவிர்த்துவிட்டது. இதனால், நகரங்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கங்களின் பணத்தை இன்னும் அதிகமாக நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


எனவே, நகராட்சிகளுக்கு நிதி சுயாட்சி மற்றும் கணிக்கக்கூடிய வருவாய் வழிகள் இரண்டும் இல்லை. இது ஜனநாயகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை (Peculiar inversion) உருவாக்குகிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. ஆனால், பொறுப்பு உள்ளூர் அரசாங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், நகரங்கள் திடக்கழிவு மேலாண்மை, குறைந்த விலை வீடுகள், காலநிலை மீள்தன்மை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய சேவைகளுக்கு நிதியளிக்க போதுமான வளங்கள் இல்லை.


நகராட்சி பத்திரங்கள் என்றால் என்ன?


நிதி ஆயோக்கின் நகர உத்தி மற்றும் புதிய மானியங்கள் போன்ற பல முக்கியமான அரசாங்கத் திட்டங்கள், நகரங்கள் பணம் திரட்டுவதற்கான ஒரு முக்கிய வழியாக பத்திரங்கள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இந்திய நகர பத்திரங்கள் இன்னும் அதிகம் நம்பப்படுவதில்லை. நகரங்கள் தங்கள் பத்திரங்களை ஆதரிக்க போதுமான பணத்தை திரட்ட முடியாது என்பதால் மட்டுமல்ல, இந்தப் பத்திரங்கள் எவ்வளவு நம்பகமானவை என்பதை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அமைப்பு நியாயமற்றதாக இருப்பதன் காரணத்தினால் இந்த சூழல் உருவாகிறது.


ஒரு நகரத்தின் கடனளிக்கத் தகுதியான நிலை (Creditworthiness) பெரும்பாலும் அதன் ‘சொந்த வருவாய்’ (own revenue) செயல்திறன் - சொத்து வரிகள், பயனர் கட்டணங்கள் மற்றும் கட்டணங்கள் மூலம் குறுகிய அளவில் தீர்மானிக்கப்படுகிறது. அதே, நேரத்தில் மானியங்கள் மற்றும் இடமாற்றங்கள் மூலம் உயர் அரசாங்க மட்டங்களிலிருந்து பெறும் நிலையான நிதியைப் புறக்கணிக்கிறது. இது வெறும் கணக்கீட்டில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல - இது தவறான சிந்தனை முறையைக் காட்டுகிறது. ரிசர்வ் வங்கி அல்லது மதிப்பீட்டு நிறுவனங்கள் அரசாங்க மானியங்கள் வெறும் ‘தொடர்ச்சியற்ற வருமானம்’ என்று கூறும்போது, ​​நகரங்கள் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ளது என்று தவறாகக் கூறுகின்றன. ஆனால், இந்த மானியங்கள் சட்டபூர்வமான உரிமைகள், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மறுபகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.


74வது திருத்தச்சட்டம், நகரங்களை மாநிலம் அல்லது ஒன்றிய அரசிடம் நிதிக்காக காத்திருப்பவர்களாக கருதவில்லை. மாறாக வரித்தொகையில் ஒரு பங்கைப் பெற உரிமையுள்ள சமமான நிர்வாக அடுக்குகளாகவே கருதுகிறது. இதேபோல், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிறுவனங்கள், சொத்து வரி வசூல் மற்றும் பயனர் கட்டணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நகரங்கள் ‘தன்னிறைவை’ (self-reliant) அடைய வேண்டும் என்று நீண்டகாலமாக வாதிட்டு வருகின்றன.

சொத்துவரி சீர்திருத்தம் முக்கியமானது. ஆனால், அதை மட்டுமே சார்ந்திருப்பது நியாயமானதாக இருக்காது. சொத்து வரி போதாது. ஏனெனில், அது பொதுவாக ஒரு நகரம் ஈட்டக்கூடிய பணத்தில் 20–25% மட்டுமே தருகிறது. மேலும் அதை வசூலிப்பது பெரும்பாலும் அரசியல் மற்றும் நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது நியாயமற்றது. ஏனெனில், இது நகரங்களை நடத்துவதற்கான செலவில் பெரும்பகுதியை மக்கள்மீது, குறிப்பாக ஏற்கனவே மோசமான சேவைகளைப் பெறும் ஏழை சமூகங்கள் மீது சுமத்துகிறது. பயனர்கள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் (user pays) என்ற எண்ணம் அடிப்படை பொது சேவைகளை வாங்க வேண்டிய பொருட்களாக மாற்றுகிறது. ஆனால், தூய்மையான நீர், கழிப்பறைகள், தெரு விளக்குகள் மற்றும் போக்குவரத்து ஆகியவை பொருட்கள் அல்ல - அவை அனைவரும் பெற வேண்டிய அடிப்படை உரிமையாகும்.


முன்னோக்கி செல்லும் வழி என்ன?


இந்தியா நிதி ஒப்பந்தத்தை (fiscal contract) ஜனநாயகப்படுத்த வேண்டும். டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற Scandinavian நாடுகளில், உள்ளூர் வரிகள் மிகவும் முக்கியமானவை என்பதால் நகரங்கள் நல்ல நிதி நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. இந்த நகரங்கள் வருமான வரிகளை நேரடியாக வசூலிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இது மக்களுக்கும் அவர்களின் உள்ளூர் அரசாங்கங்களுக்கும் இடையே வெளிப்படையான மற்றும் பொறுப்பான தொடர்பை உருவாக்க உதவுகிறது.


Scandinavian  நாடுகள் என்றால் என்ன?


Scandinavian நாடுகள் என்பது வரலாற்று, கலாச்சார மற்றும் மொழியியல் உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளின் குழுவைக் குறிக்கிறது.


இந்தப் பரவலாக்கப்பட்ட மாதிரியானது செயல்திறன் (efficiency) மற்றும் சமத்துவம் (equity) இரண்டையும் உருவாக்கியுள்ளது: குடிமக்கள் தங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்க்க முடியும். மேலும், நகரங்கள் நீண்ட காலத்திற்குத் திட்டமிட நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. முக்கியமாக, அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலிருந்து வரும் இடமாற்றங்கள் பகிரப்பட்ட நிதி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.  அவை விருப்பமான சலுகைகளாக அல்ல. இந்தியாவால் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். நகராட்சிகள் கணிக்கக்கூடிய, போதுமான மற்றும் கட்டப்படாத வருவாயைக் கொண்ட - அவற்றின் சொந்த ஆதாரங்களிலிருந்தும், அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட இடமாற்றங்களிலிருந்தும் - மறுவடிவமைக்கப்பட்ட ஒரு நிதி கூட்டாட்சி (fiscal federalism) மாதிரியாகும்.


இதேபோல், நகரப் பத்திரங்கள் நம்பகமானதாக இருக்க வேண்டுமென்றால், முதலில் மானியங்களும் பகிரப்பட்ட வரிகளும் (recognise grants and shared taxes) ஒரு நகரத்தின் வருமானத்தின் உண்மையான பகுதிகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நகரங்கள் நம்பகமான நிதிப் பதிவை உருவாக்க உதவுகிறது. இரண்டாவதாக, மதிப்பீட்டு முறை நிதி அளவீடுகளை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, ஒரு நகரத்தின் நிர்வாகத் திறனை - வெளிப்படைத்தன்மை, தணிக்கை விதிமுறைகளை பின்பற்றல் (audit compliance), குடிமக்கள் பங்கேற்பு போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, நகரங்கள் தங்கள் சரக்கு மற்றும் சேவை வரி அல்லது மாநில நிதிகளில் சிலவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் திட்டமிடப்பட்ட அரசாங்கங்களுக்கு இடையிலான குழுப்பணியை மீண்டும் கொண்டு வரும்.


இந்தியாவின் நகர்ப்புற எதிர்காலம் நிதி நீதியைச் (fiscal justice) சார்ந்தது. நகர நிதியை வெறும் கணிதமாக மட்டும் பார்க்காமல், ஒரு தார்மீக மற்றும் அரசியல் பிரச்சினையாக பார்க்க வேண்டும். நகரங்களுக்கு வழங்கப்படும் பணம் ஒரு பரிசு அல்ல; அது ஒரு சமூக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். நகரங்கள் தாங்கள் ஈட்டும் பணம் தொண்டு அல்ல; அது அவர்களின் உரிமை. நகரங்கள் வெறும் செலவுகள் மையங்கள் அல்ல - அவை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ளும் போதுதான் உண்மையான சீர்திருத்தம் தொடங்கும்.


திகேந்தர் சிங் பன்வார் சிம்லாவின் முன்னாள் துணை மேயர் ஆவார், தற்போது கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.



Original article:

Share: