நீதிமன்றங்களில் பாலின சமத்துவத்திற்கான பாதை -அர்ச்சனா ராமசுந்தரம்

 தேசிய அளவிலான போட்டி மூலம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது உயர்நீதிமன்றங்களில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வை (gender imbalance) சரி செய்யும்.


குறிப்பாக, இந்தியா உயர்நீதிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது. இந்திய நீதி அறிக்கை 2025-ல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளபடி, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளில் பெண்கள் 14% மட்டுமே உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில், ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளார். இந்தியாவின் முதல் பெண் தலைமை நியமிக்கப்படுவது ஒரு நல்ல செய்தியாகும். ஆனால், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு வேறு எந்தப் பெண்ணும் சேர்க்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பெண்களே இல்லாமல் போகலாம். மேலும், 25 உயர் நீதிமன்றங்களில், ஒரே ஒரு நீதிமன்றத்திற்கு மட்டுமே பெண் தலைமை நீதிபதி உள்ளார்.


இந்தக் கடுமையான குறைபாடு கடந்த காலங்களிலும் வெளிப்பட்டது. மேலும், சில நீதிபதிகளும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய எந்த வலுவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், நிலைமை மோசமாகவே உள்ளது.


இந்த பாலின வேறுபாட்டிற்கு முக்கிய காரணம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் தற்போதைய கொலீஜியம் அமைப்பு ஆகும். கொலீஜியம் தலைமை நீதிபதி மற்றும் ஒரு சில மூத்த நீதிபதிகளைக் கொண்டது. இந்த அமைப்பு ஒரு நெருக்கமான, உயரடுக்கு குழுவாக (‘elitist club’) செயல்படுகிறது. பெண்கள் மற்றும் சமூகத்தின் பிற பின்தங்கிய பிரிவுகள் அதிக அளவு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.


சீர்திருத்தம் தேவை


இந்த விவகாரத்தில் கீழ் நீதிமன்றங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. ஏனெனில், இந்த மட்டத்தில் நீதிபதிகள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாக வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் விளைவாக, கீழ் நீதிமன்றங்களின் ஒட்டுமொத்தமாக பெண்கள் 38% உள்ளனர்.


பதவி உயர்வுக்கான சிறந்த வாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு தேவையான வசதிகள் இருந்தால் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். உச்ச நீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம் (Centre for Research and Planning of the Supreme Court) வெளியிட்ட அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் 20% மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப்பறைகள் இல்லை.


உயர் நீதித்துறையில் உள்ள இந்த பாலின சமமின்மை, இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service (IAS)), இந்திய காவல் பணி (Indian Police Service (IPS)), மற்றும் இந்திய வெளியுறவு சேவை (Indian Foreign Service (IFS)) போல, திறந்த தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மூலம் நீதிபதிகள் நியமிக்கப்படும் முறையால் சரிசெய்ய முடியும். இந்த பரிந்துரை புதியதல்ல.


கடந்த சில ஆண்டுகளில், இந்த யோசனை அதிக கவனம் பெற்றது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் ஆதரவைப் பெற்றுள்ளது. நவம்பர் 2023-ல் உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின விழாவில் அவர் ஆற்றிய உரையில், அகில இந்திய நீதித்துறை சேவையை (All-India Judicial Service) உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். நியாயமான மற்றும் திறந்த போட்டியின் மூலம் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பாக இது இருக்கும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். அத்தகைய அமைப்பு குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட சமூகக் குழுக்களுக்கும் வாய்ப்புகளை வழங்கும்.


துரதிர்ஷ்டவசமாக, இந்த பரிந்துரை நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் இரண்டிலிருந்தும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது; அவர்களின் பார்வையில், இது நிர்வாகத் தலையீட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் நீதித்துறை சுயாட்சியை பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்த வாதம் நம்பத்தகுந்ததாக இல்லை. போட்டித் தேர்வுகள் (competitive exams) மூலம் கீழ் நீதிமன்றங்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்தவொரு நிர்வாகத் தலையீட்டிற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றால், இதேபோன்ற அமைப்பு உயர் நீதித்துறையின் சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கும்? உண்மையில், ஒரு திறந்த போட்டித் தேர்வு நீதிபதிகள் தகுதியின் அடிப்படையில் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்யும். இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும், பாரபட்சம் மற்றும் சார்புநிலையைக் குறைக்கும். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறையை உருவாக்க உதவும்.


ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)), ஒரு மாதிரியாக 


இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, ஒன்றிய அரசுப்பணியாளர் ஆணையத்தின் (UPSC) முக்கியப் பங்கை அங்கீகரிப்பது முக்கியம். ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், குடிமைப் பணி தேர்வுகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க நாடு தழுவிய போட்டித் தேர்வை நடத்துகிறது.


பல ஆண்டுகளாக, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வுகளுக்கு வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்கள் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்னணியில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைக் கண்டன. 2024-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,009 வேட்பாளர்களில், 318 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்தும் 160 பேர் பட்டியல் பிரிவிலிருந்தும், 87 பேர் பட்டியல் பழங்குடியின பிரிவிலிருந்தும், மற்றும் 109 பேர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவிலிருந்தும் வந்துள்ளனர். பெண்கள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர்; முதல் 25 வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களில் 11 பேர் பெண்கள் உள்ளனர். உண்மையில், முதல் மற்றும் இரண்டாம் தரவரிசைகள் இரண்டையும் பெண்களே பெற்றுள்ளனர்.


இந்தியா காவல் பணியில் உள்ள சூழ்நிலை இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. 2024ஆம் ஆண்டில், 54 பெண்கள் இந்தியா காவல் பணியில் சேர்ந்தனர். இது மொத்த பலத்தில் 28% ஆகும்.


முன்னோக்கிச் செல்லும் வழி


அரசியலமைப்பின் 312வது பிரிவு, சீரான ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் சேவை தரங்களை உறுதி செய்வதற்காக, அகில இந்திய நீதித்துறை சேவை உட்பட புதிய அகில இந்திய சேவைகளை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அத்தகைய சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று ஒருவர் நம்புகிறார். இது போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டதும், இந்திய நீதித்துறை சேவை மீதான கட்டுப்பாடு உச்சநீதிமன்றத்திடம் இருக்க வேண்டும்.


இருப்பினும், இந்தத் தேர்வு அனைத்து இந்தியர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த தகுதித் தரநிலைகள் மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட வேண்டும். இது நீதித்துறையின் தேர்வு செயல்பாட்டில் மிகவும் தேவையான பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையை உருவாக்கும்.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வழக்கு எதுவாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்ற வேண்டும். நிச்சயமாக, அவர்களின் தேர்வுக்குப் பிறகு ஒரு விரிவான அடிப்படை பயிற்சித் திட்டம் தொடர்பான நடைமுறைகள் உட்பட, இந்த நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்படும்.


போர் என்பது தளபதிகளிடம் மட்டும் விடப்பட வேண்டிய மிக முக்கியமான விவகாரம் என்று முன்னாள் பிரெஞ்சு பிரதமர் ஜார்ஜஸ் கிளெமென்சியோ கூறியுள்ளார். அதேபோல நீதி என்பது நீதிபதிகளிடம் மட்டும் இருக்க வேண்டிய  முக்கியமான விவகாரம். 


இந்த விவகாரத்தில் இந்த நாட்டின் குடிமக்களுக்கும் பங்கு உண்டு. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறையை உறுதி செய்வதற்காக தேர்வு செயல்முறைக்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.


அர்ச்சனா ராமசுந்தரம் ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் ஆவார். மேலும், லோக்பால் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.



Original article:
Share: