இந்தியாவின் தூய எரிசக்தி லட்சியங்களில் 'முக்கியக் காரணி' -அல்கேஷ் குமார் ஷர்மா

 புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவை முக்கியமான தனிமங்களுக்கான தன்னிறைவு வழங்கல் சங்கிலியை உருவாக்குவதன் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன.


லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய மண் தனிமங்கள் (Rare Earth Elements (REEs)) போன்ற முக்கியமான தனிமங்களைப் பாதுகாப்பதில்தான் இந்தியாவின் தூய்மையான எரிசக்தியில் உலகளாவிய முன்னணியாக இருக்கும் லட்சியமும் நிலையான வளர்ச்சியும் தங்கியுள்ளன. இந்த தனிமங்கள் முக்கிய தொழில்நுட்பங்களை இயக்குகின்றன — மின்சார வாகனங்கள் (electric vehicles (EV)), சூரிய மின்கலன்கள், காற்றாடிகள் (wind turbines) மற்றும் ஆற்றல் சேமிப்பு — இவை இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கும் நீண்டகால எரிசக்தி இலக்குகளுக்கும் மிகவும் முக்கியமானவை. 2030ஆம் ஆண்டுக்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதையும், 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net zero emissions) எட்டுவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளதால், முக்கியமான தனிமங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களின் வழங்கலை உறுதி செய்வது முக்கியமானதாகிறது. உலகளாவிய போட்டிக்கு மத்தியில் இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட முக்கிய தனிமங்களை நம்பியிருப்பதால், வலுவான உள்நாட்டு சுரங்கம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் தேவைப்படுகின்றன.


சுரங்கங்களிலும் நவீன மறுசுழற்சி தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்வது மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் மற்றும் தூய்மையான எரிசக்தி போட்டியில் சுயநிறைவை அடைந்த இந்தியா (Atmanirbhar Bharat) தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்லும்.


இந்தியாவின் பசுமை மாற்றத்தில் முக்கியமான கனிமங்கள்


இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளுக்கு முக்கியமான தனிமங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மின்சார வாகன மின்கலன்களுக்கு லித்தியமும் கோபால்ட்டும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் மின்சார வாகன சந்தை 2023 முதல் 2030 வரை 49% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (compound annual growth rate (CAGR)) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024ஆம் ஆண்டு மின்சார இயக்கத்துறை மேம்பாட்டுத் திட்டம் (Electric Mobility Promotion Scheme (EMPS)) போன்ற அரசாங்க முயற்சிகளால் இயக்கப்படும். 2023ஆம் ஆண்டில், இந்தியாவின் மின்கள சேமிப்பு சந்தை $2.8 பில்லியன் மதிப்புடையதாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு அதிகரிக்கும் போது மின்கலன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இருப்பினும், லித்தியம், கோபால்ட், நிக்கல் ஆகியவற்றிற்கு 100% மற்றும் அரிய பூமி தனிமங்களுக்கு 90%-க்கும் அதிகமான இறக்குமதியை இந்தியா நம்பியிருப்பது, விநியோகச் சங்கிலி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் விநியோகச் சங்கிலியை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குகிறது. அரசியல் பதட்டங்கள், வர்த்தக வரம்புகள் மற்றும் கடுமையான போட்டி (குறிப்பாக, அரிய மண் தனிமங்களுக்கு உற்பத்தி மற்றும் செயலாக்கத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் சீனாவிலிருந்து பெறப்படும் தனிமங்கள்) போன்ற உலகளாவிய பிரச்சினைகள், இந்தியா ஏன் அதன் சொந்த வலுவான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. தூய்மையான எரிசக்தி இலக்குகள், தொழில் வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பை அடைய ஒரு சுயசார்பு விநியோகச் சங்கிலியை உருவாக்குவது முக்கியமானது.


இந்தியாவில் பயன்படுத்தப்படாத பரந்த தனிமங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரிலும் ராஜஸ்தானிலும் லித்தியமும், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அரிய மண் தனிமங்களும் உள்ளன. 2016-இல் தொடங்கப்பட்ட தேசிய கனிம ஆய்வுக் கொள்கையும் (National Mineral Exploration Policy (NMEP)), 2021-ல் சுரங்கங்கள் மற்றும் தனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம் அடுத்தடுத்த முன்னேற்றங்களும் தனியார் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலமும் மேம்பட்ட புவி இயற்பியல் ஆய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் ஆய்வை துரிதப்படுத்தியுள்ளன. 2023-ல், இந்திய புவியியல் ஆய்வுத்துறை (Geological Survey of India) ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அனுமான லித்தியம் வளங்களை அடையாளம் கண்டது. இது உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும், லித்தியம், கிராஃபைட் மற்றும் அரிய மண் தனிமங்கள் உள்ள 20 முக்கியமான தனிமப் பகுதிகள் ஏலத்திற்கு வைக்கப்பட்டன. இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டின. இது இந்தத் துறையில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்புவதைக் காட்டுகிறது.


ஆய்வு என்பது முதல்படி மட்டுமே. உலகளாவிய அரிய மண் தனிமங்கள் உற்பத்தியில் இந்தியா 1%-க்கும் குறைவாக பங்களிப்பதால், அரசு-தனியார் கூட்டுறவு மூலம் செயலாக்கம் மற்றும் சுத்திகரிப்பு திறனை விரைவாக உருவாக்க வேண்டும். தனியார் கூட்டாளர்கள் மேம்பட்ட செயலாக்க தொழில்நுட்பங்களைக் கொண்டு வரலாம் மற்றும் மறுசுழற்சி உள்கட்டமைப்பை ஆதரிக்கலாம். அதே, நேரத்தில் உள்நாட்டு லித்தியம் மற்றும் கோபால்ட் பரிசோதனை திட்டங்களுக்கு மானியங்கள், வரிச் சலுகைகள் மற்றும் ஆராய்ச்சி மானியங்கள் மூலம் அதிக அரசாங்க ஆதரவு தேவைப்படுகிறது.


சுரங்கங்களில் முதலீடு


முக்கியமான தனிமங்களைப் பெறுவதற்கு இந்தியாவிற்குள் இருக்கும் சுரங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். 2 சுரங்கங்கள் மற்றும் தனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 தனியார் ஆய்வுக்கு வழிவகுத்தது. ஆனால், இந்தத் துறை இன்னும் அதிக செலவுகள், ஒழுங்குமுறை தடைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. 2022ஆம் ஆண்டில், சுரங்கத் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% மட்டுமே பங்களித்தது. ஆஸ்திரேலியாவில் இது 13.6% ஆக இருந்தது. இந்த இடைவெளியைக் குறைக்க, அரசாங்கம் உரிய செயல்முறைகளை நெறிப்படுத்த வேண்டும் மற்றும் தனியார் மூலதனத்தை ஈர்க்க உற்பத்தி தொடர்பான மானியங்கள் போன்ற நிதி சலுகைகளை வழங்க வேண்டும். ஆய்வு, சுரங்கம், பதப்படுத்துதல் மற்றும் இறுதிக்காலப் பொருட்களிலிருந்து மீள்வது ஆகியவற்றில் மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்த இந்திய அரசு ரூ.34,300 கோடி திட்டத்துடன் தேசிய முக்கியமான தனிம திட்டத்தை  (National Critical Mineral Mission (NCMM)) தொடங்கியுள்ளது.


NMDC போன்ற அரசாங்க ஆதரவு பெற்ற நிறுவனங்கள் தங்கள் ஆஸ்திரேலிய கிளை மூலம் விரிவடைந்து முக்கியமான தனிமத்துறையில் நுழையத் திட்டமிட்டுள்ளன. IREL (இந்தியா) லிமிடெட் நியோடைமியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் போன்ற முக்கியமான கனிமங்களை பிரித்தெடுக்க தயாராகி வருகிறது. ஆனால், இரு நிறுவனங்களுக்கும் புதிய திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் வலுவான கூட்டாண்மைகள் தேவை. வெளிநாடுகளில் கனிம சொத்துக்களை வாங்குவதற்காக 2019-ல் உருவாக்கப்பட்ட கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL), அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மின்னணு கழிவு மறுசுழற்சி குறித்த புதிய விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் கனிம விநியோகத்தையும் அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.


சுழற்சி பொருளாதாரத்தை நோக்கி நகர்தல்


இந்தியாவின் சுரங்க மற்றும் செயலாக்க வசதிகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. உள்கட்டமைப்பை நவீனமயமாக்க இயந்திர சுரங்க உபகரணங்கள், தானியங்கி செயலாக்க ஆலைகள் மற்றும் கழிவு மேலாண்மை அமைப்புகளில் முதலீடு தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மறுசுழற்சி வரை நீட்டிக்கப்படுகின்றன. இந்தியா ஆண்டுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் மின்-கழிவுகளை (e-waste) உருவாக்குகிறது. ஆனால், 10% மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேம்பட்ட மறுசுழற்சி வசதிகள் முக்கியமான கனிமங்களை மீட்டெடுக்கலாம், சுழற்சி பொருளாதாரத்தை (circular economy) வலுப்படுத்தலாம். 2022-ஆம் ஆண்டு மின்கல கழிவு மேலாண்மை விதிகள் (Battery Waste Management Rules) மறுசுழற்சி இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஆனால், பலவீனமான செயல்படுத்தல் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு சவால்களை முன்வைக்கின்றன. அரசு-தனியார் மையங்கள் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை அதிகரிக்கலாம், செலவுககள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கலாம்.


இந்தியாவின் சுத்தமான எரிசக்தி மாற்றமும் தொழில்துறை வளர்ச்சியும் சுரங்க மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தின் மூலம் முக்கியமான கனிமங்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தது. சுரங்கக் குத்தகைகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், சுரங்கங்களில் முதலீடு செய்ய வேண்டும், மறுசுழற்சியை மேம்படுத்த வேண்டும், சத்தீஸ்கரில் ஆய்வுகளை துரிதப்படுத்த வேண்டும், நகர்ப்புற சுரங்கத்தை ஊக்குவிக்க வேண்டும், மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் இறக்குமதி சார்பு குறைக்கப்படுவதோடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, புதுமைகள் உந்தப்படும்.


தேசிய முக்கிய தனிம திட்டம் மற்றும் சமீபத்திய ஏலங்கள் நேர்மறையான நடவடிக்கைளாகும். ஆனால், அவற்றின் வெற்றிக்கு வலுவான மாநில ஆதரவு, தெளிவான கொள்கைகள் மற்றும் அரசு-தனியார் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. வலுவான தனிம சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவின் மின்சார வாகனம், சூரிய மற்றும் சேமிப்பு இலக்குகளை இயக்கும் அதே நேரத்தில் அதை பசுமை பொருளாதார முன்னணியாக நிலைநிறுத்தும்.


அல்கேஷ் குமார் சர்மா, பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் செயலாளராகவும் உள்ளார்.



Original article:

Share: