பெண் கல்வியில் மாற்றம் குறித்து . . . -ஷாமிகா ரவி

 ”பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ” முயற்சி கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்களைக் காட்டியுள்ளது.


"Beti Bachao, Beti Padhao" (BBBP) :  "பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ" (பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) என்பது பிரதமர் நரேந்திர மோடியால் 22 ஜனவரி 2015 அன்று ஹரியானாவின் பானிபட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் அதிகாரமளிப்பை ஊக்குவித்தல் மற்றும் குறைந்து வரும் குழந்தை பாலின விகிதத்தை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் நாடு தழுவிய சமூக பிரச்சாரமாகும்.


"பேட்டி பதேகி தோ கியா கரேகி? (பெண்குழந்தை படித்தால் என்ன செய்வாள்?)" என்ற சொற்றொடர் ஒரு காலத்தில் வீடுகளிலும் கிராமங்களிலும் எதிரொலித்த ஒரு நாட்டில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெண் கல்வியில் சக்திவாய்ந்த மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.


குஜராத்தின் துவாரகாவில் நடந்த மகிளா சம்மேளனத்தில் (பெண்கள் மாநாடு) கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 5-ம் வகுப்புக்கு மேல் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்று பெண்களிடம் கேட்டார். அதில் ஆச்சரியமாக, பெரும்பாலான வயதான பெண்கள், சில இளைய பெண்கள் கைகளை உயர்த்தினார்கள். காரணம் கேட்டபோது, ​​கெய்க்வாட் வம்சத்தின் (1721–1947) காலத்தில், தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பிக்காவிட்டால் தந்தைகள் தண்டிக்கப்பட்டனர் என்று பெண்கள் விளக்கினர். இதன் காரணமாக, அந்தக் காலத்துப் பல பெண்கள் கல்வியறிவு பெற்றனர். இருப்பினும், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பல வயதான பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள். ஆனால், அவர்களின் மருமகள்கள் கல்வியறிவு பெற்றவர்கள் அல்ல.


இந்த நிகழ்வு ஒரு பெரிய உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நல்ல நோக்கங்களுக்கு பொறுப்புணர்வு, தலைமைத்துவம் மற்றும் கொள்கையால் ஆதரிக்கப்பட வேண்டும். பிரதமர் தலைமையின் கீழ், இந்தியா அதனை நிகழ்த்துவதை இது காண்பிக்கிறது. விதிகளை மட்டுமல்ல, மனநிலைகளையும் மாற்றுவதற்கான ஒரு முறையான உந்துதல் உள்ளது. இந்த மாற்றம் வகுப்பறைகளில் அதிகமான பெண்களைப் பற்றியது மட்டுமல்ல. இது இந்திய சமூகத்தின் அடித்தளங்களை மாற்றுவது பற்றியது. இது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகையை பாதிக்கிறது. இந்த மாற்றத்தை இயக்கும் கருவி கல்வி, இது மகள்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.


குஜராத் மாதிரி


குஜராத் முதலமைச்சராக மோடி அவர்கள், பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியறிவின்மை போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க பன்முக அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்தார். சட்டங்களால் மட்டுமே அவற்றைத் தீர்க்க முடியாது. பொதுமக்களின் கருத்து மாற வேண்டியிருந்தது, இதற்கு உள்கட்டமைப்பு மற்றும் ஊக்கத்தொகைகள் தேவைப்பட்டன. 2003-ல் தொடங்கப்பட்ட கன்யா கெலவணி பிரச்சாரம் (Kanya Kelavani campaign) இந்த மாற்றத்திற்கான ஒரு முக்கிய வாகனமாக மாறியது. இந்த முயற்சி பெண்களின் கல்வி குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தது. அதே நேரத்தில், இளம் பருவத்தில் பள்ளிகளைவிட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறைகள் இல்லாதது போன்ற தடைகளை நிவர்த்தி செய்தது.


இதற்கான தீர்வுகள் குறிப்பிடத்தக்கவை. குஜராத்தில் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருந்த பெண் கல்வியறிவு விகிதம் 70% ஆக அதிகரித்தது. இது தேசிய சராசரியான 64%-ஐ விட அதிகமாகும். இலக்கு வைக்கப்பட்ட மாவட்டங்களில் பெண் மாணவர்களிடையே பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் விகிதம் கிட்டத்தட்ட 90%-ஆகக் கடுமையாகக் குறைந்தது.


பொது நிகழ்வுகளில் பெறப்பட்ட பரிசுகளை தனிப்பட்ட முறையில் ஏலம் விடுவதன் மூலமும், பெண் கல்விக்காக ₹19 கோடி திரட்டுவதன் மூலமும், பரவலான பொதுமக்கள் ஆதரவின் மூலம் பிரதமர் மோடி கொள்கை முயற்சியை மாற்றினார். அவர் ₹21 லட்சத்தை தனிப்பட்ட முறையில் பங்களித்தார். இந்த முயற்சிகள் ஒரு வலுவான செய்தியை வெளியிட்டன. பெண் கல்வி என்பது வெறும் அரசாங்கத் திட்டம் மட்டுமல்ல. அது முழு சமூகத்திற்கும் ஒரு காரணமாக அமைந்தது.


நாடு தழுவிய அளவில் வெற்றியை அதிகரித்தல்


குஜராத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு, ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ (BBBP)’ முயற்சி 2015-ல் நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்டது. இதன் குறிக்கோள்கள் இரண்டு ஆகும். அவை, பெண் சிசுக்கொலையைத் தடுப்பது (prevent female foeticide) மற்றும் பெண் கல்வியை மேம்படுத்துவது (to promote girls education) ஆகும். இந்த முயற்சி அதன் ஆரம்ப கட்டத்தில் 100 பாலின முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் கவனம் செலுத்தியது. பின்னர், நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற பல அமைச்சகங்களை ஒன்றிணைத்து மாற்றத்திற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது. விளைவுகளின் பிற நடவடிக்கைகளில், அதன் தாக்கம் சிறுமிகளின் உயிர்வாழ்வு விகிதத்தில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் பிறப்பு பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகளாக (2015-16) இருந்து 929 (2019-21) ஆக உயர்ந்துள்ளது. ஊக்கமளிக்கும் விதமாக, 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 20 மாநிலங்கள் தேசிய சராசரியான 930-ஐவிட சிறப்பாக செயல்படுகின்றன.


ஆனால், பிறப்பு பாலின விகிதத்தில் (sex ratio at birth) ஏற்படும் இந்த முன்னேற்றங்கள் ஊக்கமளிக்கின்றன. அவை, மிகப்பெரிய கடமையின் ஒரு பகுதி மட்டுமே. பெண் கல்வியின் உண்மையான சக்தியானது சமூகம் முழுவதும் அது ஏற்படுத்தும் அலை விளைவுகளில் உள்ளது. படித்த பெண்கள் தாமதமாக திருமணம் செய்துகொண்டு குறைவான குழந்தைகளைப் பெறுகிறார்கள். இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 2.0 ஆகக் குறைந்துள்ளது. இது மாற்று நிலைக்கு (replacement level) சற்று கீழே உள்ளது. இந்த மாற்றம் அதிகரித்துவரும் பெண் கல்வி மற்றும் தொழிலாளர் பங்கேற்புடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இடைநிலைக் கல்வி பெற்ற பெண்கள் நிறுவனப் பிரசவங்கள் மற்றும் மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2014-ம் ஆண்டில் 1,000 நேரடி பிறப்புகளுக்கு 49-ஆக இருந்த பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் 2020-ம் ஆண்டில் 33-ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பெண் தொழிலாளர் பங்களிப்பு ஒரு சவாலாகவே இருந்தாலும், கல்வியறிவு மற்றும் திறன்களால் செழித்து வளரும் துறைகளான சுகாதாரம், கல்வி, STEM மற்றும் தொழில்முனைவு போன்ற துறைகளில் இது அதிகரித்து வருகிறது. இன்றைய படித்த இந்திய பெண்கள், ஆயுதப்படைகளில் உள்ள ”அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின்” தலைமை நிர்வாக அதிகாரிகள் வரை தங்களின் தடைகளை உடைத்து வருகின்றனர்.


அதிக தாக்க விளைவு


படித்த பெண்கள் படித்த தாய்மார்களாக வளர்கிறார்கள். இது வாழ்க்கையின் பல அம்சங்களை மாற்றுகிறது. படித்த தாய்மார்களின் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுவதாகவும், சிறந்த சுகாதார விளைவுகளை அனுபவிப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. மத்தியப் பிரதேசத்தில், சமீபத்திய ஆய்வுகள் 89.5% மக்கள் ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (BBBP)’ பற்றி அறிந்திருப்பதாகவும், 63.2% பேர் தங்கள் மகள்களை பள்ளிக்கு அனுப்ப இது நேரடியாக ஊக்குவித்ததாகவும் கூறுகின்றனர். ஆரம்பத்தில் திருமணத்தை தாமதப்படுத்துவதற்கும், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்கும் சமூகங்கள் ஆதரவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஒரு காலத்தில் பெண்கள் பள்ளிகளில் இருந்து முற்றிலுமாக விலக்கப்பட்ட பகுதிகளில் மாறிவரும் மனநிலையை இந்த புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கின்றன.


இந்த மாற்றம் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட சிந்தனைமிக்க மற்றும் பயனுள்ள கொள்கைகளால் எளிதாக்கப்பட்ட ஒரு ஆழமான மற்றும் நீடித்த மாற்றமாகும். இந்த முயற்சிகளின் நீண்டகால தாக்கம் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, முழு சமூகங்களையும் மேம்படுத்தும் நேர்மறையான கருத்துச் சுழற்சியின் காரணமாக இன்னும் அதிகமாக வெளிப்படும். இன்றைய படித்த பெண்கள் வெறும் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாளைய சாத்தியமான தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்காலத்திற்கான மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஆவர். படித்த பெண்கள் பணியிடத்தில் சேரவும், தங்கள் குடும்பங்களின் வருமானத்திற்கு பங்களிக்கவும், தங்கள் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்யவும் அதிக வாய்ப்புள்ளது.


எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ​​நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் தொடங்கப்பட்ட மாற்றங்கள் வேகம் பெற வாய்ப்புள்ளது. இது மிகவும் சமமான சமூகத்தை உருவாக்க உதவும். அத்தகைய சமூகத்தில், ஒவ்வொரு பெண்ணுக்கும் கற்றுக்கொள்ளவும், வளரவும், செழிக்கவும் உரிமை உண்டு. ஒரு பெண் கல்வி கற்பது என்பது ஒரு சமூகத்தைக் காப்பாற்றுவதற்குச் சமம் என்பதில் தெளிவாக இருப்போம்.


ஷமிகா ரவி, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் செயலாளர்.



Original article:

Share: