சாதி விதிமுறைகளை மீறியதற்காக, கிராமப்புறங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் முதல், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்பில் நகர்ப்புற பாகுபாடு வரை, சாதியானது குடிமக்களின் கண்ணியத்தையும் வாய்ப்பையும் தொடர்ந்து மறுக்கிறது.
சமத்துவத்திற்கான அரசியலமைப்பு வாக்குறுதிகள் இருந்தபோதிலும், பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் (Scheduled Castes (SC)), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes (ST)), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBC)) தொடர்ந்து சாதி அடிப்படையிலான வன்முறை மற்றும் ஒதுக்கீட்டை எதிர்கொள்கின்றனர். செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau (NCRB)) அறிக்கை, 2023-ல் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கு (SC) எதிராக 57,789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2022-ல் பதிவான 57,582 வழக்குகளைக் காட்டிலும் 0.4% அதிகரித்துள்ளது.
மேலும் 2023-ல் 12,960 வழக்குகள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு (ST) எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-ல் 10,064 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 28.8% கடுமையான உயர்வைக் காட்டுகிறது. சாதி விதிமுறைகளை மீறியதற்காக கிராமப்புறங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் முதல் வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பில் நகர்ப்புற பாகுபாடு வரை, சாதியின் அடிப்படையில் குடிமக்களின் கண்ணியத்தையும் வாய்ப்பையும் தொடர்ந்து மறுக்கிறது.
சாதிப் படிநிலைகள் இன்னும் அப்படியே உள்ளன
சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா பூலே, பி.ஆர். அம்பேத்கர், பெரியார், மகாத்மா காந்தி ஆகியோர் பிராமணிய சாதிய அமைப்பிற்கு சவால் விட்டவர்கள். இதனால், இவர்கள் நம்பிக்கையின் ஒளிவிளக்காக இருக்கிறார்கள். அவர்களின் இயக்கங்கள், பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்-1989 (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) போன்ற அரசியலமைப்பு பாதுகாப்புகளுடன் இணைந்து, சாதி படிநிலைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இதற்கான முன்னேற்றம் சமமாகவோ அல்லது சீராகவோ இல்லை. பலர் இன்னும், சாதி அடிப்படையிலான மேன்மையின் மீதான நம்பிக்கை நம்புகிறார்கள். தலித்துகளை சிறுநீர் குடிக்க வற்புறுத்துவது முதல் நில உரிமையை நிலைநாட்டியதற்காக ஆதிவாசிகளை விரட்டியடிப்பதுவரை பயங்கரமான தண்டனையின்றி வன்முறைச் செயல்களைச் செய்ய சமூக உயரடுக்கு பிரிவினர்களை அனுமதிக்கிறது. இத்தகைய செயல்கள் தனிப்பட்ட பாரபட்சத்தை (personal prejudice) மட்டுமல்ல, மனிதாபிமான விழுமியங்களை உள்வாங்குவதில் சமூகத்தின் தோல்வியையும் பிரதிபலிக்கின்றன. இது இந்தியா உண்மையிலேயே நாகரிக சமூகம் என்ற கூற்றில் சந்தேகங்களை எழுப்புகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தலைமையிலான தற்போதைய ஆட்சி இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் பின்னடைவை சந்தித்துள்ளது. சில நேரங்களில், அது மதச் சடங்குகளில் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளைச் சேர்ப்பது போன்ற குறியீட்டு சைகைகளைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்த செயல்களில் உண்மையான மாற்றம் இல்லை. இந்துத்துவா கதைகள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் எதிர்ப்பை கலாச்சார ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக வடிவமைக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் ஆர்வலர்களை "இந்துவெறுப்பாளர்கள்" (Hinduphobic) என்று முத்திரை குத்துகிறார்கள்.
இந்த சொல்லாட்சி நீதிக்கான நியாயமான கோரிக்கைகளை முடக்குகிறது. உதாரணமாக, வன்கொடுமைச் சட்டத்தை பலவீனப்படுத்திய உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் விமர்சிக்கப்பட்டனர் மற்றும் இழிவுபடுத்தப்பட்டனர். இந்தி திரைப்படமான ”பூலே” (Phule) வெளியீட்டின் போது தலித்-பகுஜன் கலாச்சார வெளிப்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள், இந்த சமூகங்களை பிரதான சமூகத்திலிருந்து மேலும் தள்ளிவைக்கின்றன. கூடுதலாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற சமூக நீதியை ஊக்குவிக்கும் கொள்கைகள் சீரற்ற முறையில் செயல்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, சமூக உயரடுக்குகள் இன்னும் முக்கியமான நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன மற்றும் அதிகாரத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டைப் பேணுகின்றன.
சமூக உயரடுக்கு (social elites) மற்றும் பிற்படுத்தப்பட்ட குழுக்களுக்கு (subaltern groups) இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வலுவான கொள்கை கட்டமைப்பு இல்லாதது மிகவும் தெளிவாக உள்ளது. பாஜகவும் அதன் கூட்டணி அமைப்புகளும் சாதிப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடவோ அல்லது வெவ்வேறு சாதிகளிடையே ஒற்றுமையை வளர்க்கவோ ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை. அத்தகைய முயற்சிகள் ஆதிக்க சாதிகளின் சலுகைகளை பலவீனப்படுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
மாறாக, பிராமணிய கலாச்சாரக் கதைகளை ஊக்குவிப்பது, தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களின் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளுகிறது மற்றும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் சமமான கண்ணியத்திற்கான போராட்டங்களாகக் காட்டப்படுவதற்குப் பதிலாக பாரம்பரிய அதிகாரத்தின் மீதான தாக்குதல்களாகக் காட்டப்படுகின்றன. இந்துத்துவ சித்தாந்தவாதிகளால் ஆதரிக்கப்படும் இந்த அணுகுமுறை, சமமான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு இலக்கிற்கு எதிரானது.
வரலாற்றுரீதியாக, சாதிய இயக்கவியலை மறுவடிவமைத்த சக்திவாய்ந்த எதிர்ப்பு இயக்கங்களை இந்தியா கண்டது. 1970-களில் தலித் சிறுத்தைகள் இயக்கம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் அதிகாரத்தையும் சமூக மரியாதையையும் கோர தூண்டியது. வட இந்தியாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் எழுச்சி தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (OBC) மேலும் அதிகாரம் அளித்தது. ஆட்சி மற்றும் பொது உரையாடல்களில் அவர்களின் குரல்களை வலுப்படுத்தியது.
தலித் இலக்கியம் மற்றும் ஆதிவாசி கலை போன்ற கலாச்சார மற்றும் அறிவுசார் முயற்சிகள் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், இன்று இந்த இயக்கங்கள் சிதறடிக்கப்பட்டு பலவீனமாக உள்ளன. சமூக அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களுக்கு இனி அதே சக்தி இல்லை. சாதி அடிப்படையிலான வன்முறைக்கு சிவில் சமூகத்தின் எதிர்வினையும் குறைவாகவே உள்ளது.
தற்போதைய அரசியலமைப்பு வழிமுறைகள் மற்றும் சட்டமன்ற உத்தரவுகள் தெளிவான வரம்புகளைக் கொண்டுள்ளன. சட்டங்கள் இருந்தாலும், தாமதமான விசாரணைகள், குறைந்த தண்டனை விகிதங்கள் மற்றும் நீதித்துறை மற்றும் காவல்துறையில் உள்ள சமூக சார்பு ஆகியவற்றால் அமலாக்கம் பலவீனமாக உள்ளது. உதாரணமாக, தலித் மனித உரிமைகள் மீதான தேசிய பிரச்சாரத்தின் 2023 ஆய்வில், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 60% வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. இது சட்ட விதிகளுக்கு அப்பால் முறையான சீர்திருத்தங்களின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பன்முக அணுகுமுறை
சாதிய வன்கொடுமைகளை நிவர்த்தி செய்வதற்கு வலுவான அரசியல் விருப்பம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் அடிப்படையில் பல ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது. முதலாவதாக, அரசாங்கம் தற்போதுள்ள சட்டங்களை மிகவும் திறம்பட செயல்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புளுக்கு சாதி அடிப்படையிலான பாகுபாட்டைப் புரிந்துகொண்டு செயல்பட பயிற்சி அளிக்க வேண்டும். இரண்டாவதாக, அரசியல் தலைவர்கள் சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு தேசிய பிரச்சாரத்தை வழிநடத்த வேண்டும்.
பாரம்பரிய சாதி படிநிலைகள் மற்றும் பாரபட்சங்களை சவால் செய்ய அவர்கள் கல்வி, ஊடகங்கள் மற்றும் பொது தளங்களைப் பயன்படுத்தலாம். மூன்றாவதாக, மத நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட சிவில் சமூகம் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த உரையாடலை வளர்க்க வேண்டும். நான்காவதாக, உறுதியான நடவடிக்கைக் கொள்கைகள் கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கண்காணிக்கவும், அனைவருக்கும் கல்வி, வேலைகள் மற்றும் வளங்கள் நியாயமான முறையில் கிடைப்பதை உறுதி செய்யவும் வெளிப்படையான அமைப்புகள் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, தலித், ஆதிவாசி மற்றும் பகுஜன் குரல்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். சாதி அமைப்புக்கு எதிரான அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றுக்கு புதிய தலைவர்களும் புதிய தளங்களும் தேவை. சாதி எதிர்ப்பு சமூக இயக்கங்களின் மறுமலர்ச்சி, பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுக்களிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதுடன், சமூக நீதி செயல்திட்டத்தை முதன்மைக் கவலையாக மீண்டும் நிலைநாட்டும்.
ஹரிஷ் எஸ். வான்கடே, உதவிப் பேராசிரியர், அரசியல் ஆய்வு மையம், சமூக அறிவியல் பள்ளி, ஜேஎன்யு, புது தில்லி