சிறுத்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது, ஆனால் மனிதர்களுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
பிப்ரவரி 29 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட ‘இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை, 2022’ (‘Status of Leopards in India, 2022’ report) அறிக்கையின்படி, இந்தியாவில் 13,874 சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2018 இல் 12,852 ஆக இருந்தது.
மேலும், அந்த அறிக்கை என்ன சொல்கிறது. இந்தியாவில் சிறுத்தைகளின் பொதுவான நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.
ஒட்டுமொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு
இந்திய சிறுத்தைகள் (Indian leopards (Panthera pardus fusca)) இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் உள்ள பல்வேறு வன வாழ்விடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. அவை, மிகப்பெரிய வேட்டையாடுபவர்களாக இருப்பதால், உணவுச் சங்கிலியில் மிக உயர்ந்த கட்டத்தில் இருந்து, சுற்றுச்சூழல் அமைப்பை சீரானதாக வைத்திருக்க அவை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிங்கங்களைப் (lions (Panthera leo)) போலவே, சிறுத்தைகள் மேற்கில் இருந்து, பெரும்பாலும் எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் (8,820) உள்ளன. அதைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைகள் (3,596), மற்றும் சிவாலிக் குன்றுகள் மற்றும் கங்கைச் சமவெளிகளில் (1,109) மிதமான அளவில் உள்ளன. மாநில வாரியாக, மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் (3,907) உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1,985), கர்நாடகா (1,879) மற்றும் தமிழ்நாட்டில் (1,070) உள்ளன.
இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (Wildlife Institute of India’s (WII) துறைத்தலைவராக இருந்த ஒய்.வி.ஜாலா, ”புலிகளின் எண்ணிக்கை அளவுக்கு சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இந்த அதிகரிப்பு சிறிதளவு மட்டுமே. இருப்பினும், சிறுத்தைகள் இன்னும் வேட்டைக்காரர்களால் குறிவைக்கப்படுவதால், அவற்றின் எண்ணிக்கையை நிலையாக தக்க வைத்திருப்பது ஒரு சாதனை என்று அவர் குறிப்பிட்டார்.
சில பிராந்தியங்களில் எண்ணிக்கை குறைவு
இருப்பினும், ஒரு சில பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள் ஆண்டுக்கு 3.4% சரிவை பதிவு செய்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது. இது, 2018 இல் 1,253 இல் இருந்து 2022 இல் 1,109 ஆக குறைந்துள்ளது.
பல மாநிலங்களிலும் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒடிசாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 2018 இல் 760 இல் இருந்து 2022 இல் 562 ஆகக் குறைந்துள்ளது, மேலும் உத்தரகாண்டில் 2018 இல் 839 ஆக இருந்த மக்கள் தொகை 2022 இல் 652 ஆகக் குறைந்துள்ளது. கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் கோவாவிலும் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைவதற்கு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம். ராஜாஜி மற்றும் கார்பெட் தேசிய பூங்காக்களில் (Rajaji and Corbett national parks) சிறுத்தைகளின் எண்ணிக்கை நிலையானதாக உள்ளதாக உத்தரகண்ட் வனவிலங்குத் துறை அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர். இருப்பினும், ராம்நகர் வனப்பிரிவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு இப்பகுதியில் புலிகள் அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
சிறுத்தைகளுக்கான பிற அச்சுறுத்தல்களில் வேட்டையாடுதல் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களை இழப்பது ஆகியவை அடங்கும். சிறுத்தைகளின் இறப்புக்கு சாலை விபத்துகளும் ஒரு முக்கிய காரணமாகும்.
புலி பாதுகாப்பு முயற்சிகளின் பலன்கள்
புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, சிறுத்தைகள் மற்றும் பிற உயிரினங்களின் வாழ்விடத்தையும் வளங்களையும் எதிர்மறையாக பாதிக்கும். இருப்பினும், புலிகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளும் சிறுத்தைகளின் எண்ணிக்கையின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன.
உதாரணமாக, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் நிலப்பரப்பை எடுத்துக் கொள்ளுங்கள், இங்கு சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. வனவிலங்கு அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், "இந்த நிலப்பரப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, பெரும்பாலும் புலிகள் பாதுகாப்பு என்ற குடையின் கீழ் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இதற்கு காரணமாகும்," என்று கூறினர்.
"புலிகள் சிறுத்தைகள் மீது ஒழுங்குமுறை அழுத்தத்தை செலுத்தினாலும், வெளியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் ஒப்பிடும்போது புலிகள் காப்பகங்களில் சிறுத்தைகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது" என்று அறிக்கை கூறியது.
மத்தியப் பிரதேச முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) அசீம் ஸ்ரீவஸ்தவா இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம், ”மத்திய பிரதேசத்தில் உள்ள புலி ஒரு குடை இனம். நாம் புலியைப் பாதுகாக்கும் போது, இணை வேட்டையாடும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்விடத்தையும் பாதுகாக்கிறோம். புலிகள் பாதுகாப்பில் மாநிலம் மிகச் சிறந்த சாதனை படைத்துள்ளது மற்றும் சிறுத்தைகளுக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
சிறுத்தை-மனித மோதல் கவலையளிக்கிறது
வாழ்விடங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் சிறுத்தைகளின் தகவமைப்புத் தன்மை, அவை விவசாய-மேய்ச்சல் பகுதிகள், தோட்டங்கள் மற்றும் மனித குடியிருப்புகளுக்கு அருகில் செழிக்க உதவுகின்றன. இதனால், சிறுத்தை-மனித மோதல் அதிகரித்து வருகிறது.
அறிக்கையின்படி, சிவாலிக் பகுதியில், சுமார் 65% சிறுத்தைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ளன. வனவிலங்குகளால் ஏற்படும் மனித இறப்பு மற்றும் காயங்களில் 30% சிறுத்தைகளால் ஏற்பட்டவை (கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,000 வழக்குகளில் 570) என்று உத்தரகாண்ட் வனத்துறை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மகாராஷ்டிரா மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது, கடந்த ஏழு ஆண்டுகளில் 113 அபாயகரமான தாக்குதல்களைப் புகாரளித்துள்ளது. அதே நேரத்தில், கர்நாடகா 100 க்கும் மேற்பட்ட மனித-சிறுத்தை மோதல்களைப் பதிவு செய்துள்ளது. சுரங்கம் மற்றும் பிற மனித நடவடிக்கைகள் காரணமாக இந்த மோதல் அதிகரிப்பு பெரும்பாலும் வாழ்விட இழப்பு காரணமாக இருக்கலாம்.
கேரளாவில், 2013 முதல் 2019 வரை, மொத்தம் 547 மனித-சிறுத்தை மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 173 கால்நடைகள் இறப்பு அல்லது காயங்கள் (93 கால்நடைகள், 2 எருமைகள், 78 ஆடுகள்) அடங்கும்.
உத்தரபிரதேசத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் "10 கி.மீ.க்கும் குறைவான அகலத்தில்" இருப்பதால் தாக்குதல்கள் அதிகமாக நடந்துள்ளன. உத்திர பிரதேசத்தின் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் (Katarniaghat Wildlife Sanctuary) குறித்த 2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில், “சிறுத்தையுடனான 38% மோதல்கள், பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் அல்லது அருகில் இருக்கும்போது நிகழ்ந்தது. மேலும் 40% மோதல்கள் விவசாய வயல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 11% தாக்குதல்கள் விவசாய நிலங்களில் மலம் கழிக்கும் மக்கள் மீது இருந்தன.
தமிழ்நாட்டில், காடுகளால் சூழப்பட்ட காபி-தேயிலை தோட்டங்கள் மற்றும் பிற வணிகத் தோட்டங்கள் அடிக்கடி சிறுத்தைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. காடுகளின் விளிம்புகளுக்கு அருகில் நிலம் மலிவானது என்பதால், தோட்டத் தொழிலாளர்கள் இந்த நிலங்களை வீடு கட்டுவதற்காக வாங்குகிறார்கள் என்று 2017 ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.