பாரசீக வளைகுடாவில் எந்தவொரு மோதல் சூழ்நிலையும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஆனால், அதைத் தீர்க்க தீர்வுகள் உள்ளன.
மே 13, 2024 அன்று, இந்தியாவும் ஈரானும் சபஹார் துறைமுகத்தை (Chabahar Port) இயக்குவதற்கான 10 ஆண்டுகால இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில், இந்தியன் போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (Indian Ports Global Limited) மற்றும் ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்பு இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இந்தியாவை ஈரானுடன் இணைக்கும் பாலம் என்பதை விட இந்த ஒப்பந்தமும் சபஹார் துறைமுகமும் முக்கியமானது என்று சோனோவால் கூறினார். ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் முக்கிய பொருளாதார இணைப்புகளாக இந்த ஒப்பந்தம் உள்ளன.
ஆனால் இதற்குமுன், இதேபோன்ற மற்றும் சமமான முக்கியத்துவம் வாய்ந்த இணைப்புத் திட்டம், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தில் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)), செப்டம்பர் 9, 2023 அன்று புதுதில்லியில் நடந்த G-20 உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் கையெழுத்திட்டு முன்மொழியப்பட்டது. இதற்கு, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates (UAE)) மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கையெழுத்திட்டன. உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மையின்கீழ் (Partnership for Global Infrastructure and Investment (PGII)) உருவாக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (IMEC), ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையேயான இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெல்ட் அண்ட் ரோடு முன்னெடுப்புக்கு (Belt and Road Initiative (BRI)) எதிர்வினையாக
இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடமானது (IMEC) இந்தியாவை அரேபிய வளைகுடாவுடன் இணைப்பது மற்றும் வளைகுடாவை ஐரோப்பாவுடன் இணைப்பது போன்ற இரண்டு வழிகளைக் கொண்டுள்ளது. இரயில்வே, மின்சாரம் மற்றும் டிஜிட்டல் இணைப்புகளுக்கான கேபிள்கள் மற்றும் சுத்தமான ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நம்பகமான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து வலையமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கண்ட்லா (Kandla), மும்பை (Mumbai) மற்றும் முந்த்ரா (Mundra) போன்ற இந்திய துறைமுகங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகங்களுடன் இணைப்பது, பின்னர் சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவிற்கு ரயில் மற்றும் சாலை வழியாக பொருட்களை கொண்டு வருவது ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்தில் 4,800 கிலோமீட்டர் வழித்தடங்கள் பிராந்திய விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பதையும் (secure regional supply chains), வர்த்தக அணுகலை அதிகரிப்பதையும் (increase trade accessibility), பிராந்தியங்கள் முழுவதும் வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதையும் (improve trade facilitation across regions) நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பெரும்பாலான வர்த்தகம் சூயஸ் கால்வாய் (Suez Canal) வழியாகச் செல்கிறது. ஏனெனில், பாகிஸ்தான் வர்த்தகத்திற்கான தரைவழிப் பாதைகளைத் தடுத்துள்ளது. இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (IMEC) இந்த சவாலை எதிர்கொள்ளும். இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்திற்கான நேரம், தூரம் மற்றும் செலவுகளை கணிசமாகக் குறைக்கும். இது போக்குவரத்து நேரத்தை 40% மற்றும் செலவுகளை 30% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இது பிராந்தியத்தில் சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சிக்கு (Belt and Road Initiative (BRI)) ஒரு சிறந்த பதிலாகக் காணப்படுகிறது. இதில், அமெரிக்கா ஒரு முக்கிய ஆதரவாளராக உள்ளது.
காஸா போரின் தாக்கம்
இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அக்டோபர் 7 அன்று காஸாவில் போர் தொடங்கியதால், அது நிறுத்தப்பட்டது. மே 12ஆம் தேதி நேர்காணலில், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்கு ஆசியாவின் நிலைமை காரணமாக இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (IMEC) திட்டத்தில் தாமதம் குறித்த கவலைகளை ஒப்புக் கொண்டார். போருக்குப் பிறகு இந்த திட்டத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடத்திற்கு (IMEC) சில பெரிய பிரச்சனைகள் இருப்பதை காசா போர் காட்டியது. போரின் போது, யேமனில் உள்ள ஹவுதிகள் இஸ்ரேல் மற்றும் மேற்கில் உள்ள அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் செங்கடலுக்குள் நுழைவதைத் தடுத்தனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கடற்படை முயற்சிகள் இருந்தபோதிலும், ஹவுதிகள் இன்னும் இந்தக் கப்பல்களை இலக்காகக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, இஸ்ரேலையும் அதன் நட்பு நாடுகளையும் தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் (Cape of Good Hope) சுற்றி நீண்டபாதையைத் தேர்த்தெடுக்கக் கட்டாயப்படுத்தியது. இது கப்பல் போக்குவரத்திற்கான நேரம் மற்றும் காப்பீட்டுச் செலவுகளை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், இந்தியா உட்பட உலகின் மற்ற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அனுப்புவதற்கான ஒரு முக்கிய பாதையான வடக்கில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல் 2019ஆம் ஆண்டில் பாரசீக வளைகுடா நெருக்கடியின்போது இதேபோன்ற சூழ்நிலையை எதிரொலிக்கிறது. ஈரான் தனது பிராந்தியத்தில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை (U.S. drone) சுட்டு வீழ்த்தியதால் தூண்டப்பட்டது. ஜூன் 21 அன்று திட்டமிடப்பட்ட ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
இந்த நேரத்தில், ஈரான் பலமுறை பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல்களை பலமுறை இடைநிறுத்தியது. இது, இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாரசீக வளைகுடாவில் இந்தியக் கொடியேற்றப்பட்ட கப்பல்களில் ஆயுதமேந்திய பாதுகாப்புக் குழுக்களுடன் இந்திய கடற்படை 'சங்கல்ப் திட்டத்தைத்' (Operation Sankalp) தொடங்கியது. காசா போரைப் பொறுத்தவரை, இஸ்ரேலின் முக்கிய துறைமுகங்களான எய்லட் (Eilat) மற்றும் ஹைஃபா (Haifa), வர்த்தக இடையூறு (disruption in trade) மற்றும் ஹமாஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல்களால் கணிசமான இழப்புகளைச் சந்தித்தன. ஜனவரி 2023-ல், இந்தியாவில் இருந்து அதானி குழுமம் ஹைஃபா துறைமுகத்தை வாங்கியது. அதை பெரிதாக்கவும் அதிகக் கப்பல்களை கையாளவும் திட்டமிட்டனர். ஆனால், காஸா போர் காரணமாக, அவர்களின் திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
ஓமன் மற்றும் எகிப்து குறித்து
இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா (Fujairah) மற்றும் ஜெபல் அலி (Jebel Ali) போன்ற துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த துறைமுகங்கள் அனைத்தும் பாரசீக வளைகுடாவில் உள்ளன. இதனால், அங்கு ஏற்படும் மோதல்களால் பாதிக்கப்படக்கூடியவை.
இந்த அச்சுறுத்தலுக்கு, ஓமன் ஒரு தீர்வை வழங்குகிறது. பாரசீக வளைகுடாவின் நேரடி அச்சுறுத்தல்களிலிருந்து விலகி, அதன் துறைமுகங்கள் அரேபிய கடலில் திறக்கின்றன. ஓமன் இந்திய துறைமுகங்களுக்கு மிக நெருக்கமான மற்றும் நேரடியான பாதையை வழங்குகிறது. வரலாற்று ரீதியாக, ஓமனும் இந்தியாவும் 'தோவ்ஸ்' என்று அழைக்கப்படும் சிறிய படகுகளைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்துள்ளன. மேலும், ஓமன் பிராந்தியத்தில் ஒரு நல்ல அரசியல் நட்பு நாடாக உள்ளது. இஸ்ரேல் உட்பட அனைவருடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது.
மேற்கில், இஸ்ரேலிய துறைமுகங்களை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) எகிப்து வழியாக அதன் முக்கிய மத்தியதரைக் கடல் துறைமுகங்களில் ஒன்றை அடைய வேண்டும். இது ஐரோப்பியத் துறைமுகங்களுக்குப் பாதுகாப்பான பாதையை உருவாக்குகிறது. எகிப்தானது, இப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அதன் ஈடுபாடு பிராந்தியத்தில் செயல்பாட்டை சமன் செய்கிறது. ஓமனைப் போலவே, எகிப்தும் அண்டை நாடுகள் மற்றும் ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. எகிப்து இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திலிருந்து (IMEC) விலக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்திருந்தது. எனவே, இந்த நீட்டிப்பு அரசியல் மற்றும் பொருளாதார பரிசீலனைகளை நிவர்த்தி செய்கிறது. கிழக்கில் ஓமன் மற்றும் மேற்கில் எகிப்துடன், இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) மோதல்களிலிருந்து இடையூறுகளுக்குக் குறைவாக பாதிக்கப்படக்கூடியதாகிறது. இது இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) தற்போதைய கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு முக்கியமானதாகிறது.
இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) ஒரு புதுமையான யோசனையாகும். ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords), மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் நன்றாகப் பழகத் தொடங்கியதால் இது நடக்கிறது. இந்த முன்னெடுப்பானது பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவும், மோதல்களால் ஏற்படும் இணைப்பில் உள்ள சிக்கல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவும். இது சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்னெடுப்புடன் (BRI) போட்டியிடுவது மட்டுமல்ல, இது பிராந்தியத்தை வலுவாகவும் மேலும் இணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதாகும்.
ஓய்வு பெற்ற கர்னல் ராஜீவ் அகர்வால், புதுதில்லியில் உள்ள Manohar Parrikar Institute for Defence Studies and Analyses (MP-IDSA)-ல் உதவி இயக்குநராக உள்ளார்.