விவசாயப் பொருட்களை நிர்வகிப்பதில் ரயில்வே துறையை பயன்படுத்துவதன் மூலம், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை கணிசமாக குறைக்கலாம். இந்த ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழலுக்கும் விவசாய உற்பத்திக்கும் பெரிதும் உதவும்.
உலகளவில் விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், உலகளாவிய விவசாய ஏற்றுமதியில் அதன் பங்கு 2.4% மட்டுமே உள்ளது. இருப்பினும், விவசாய ஏற்றுமதியில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறைந்த உற்பத்தித்திறன், மோசமான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு போன்ற விநியோகச் சங்கிலி சிக்கல்கள், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை ஏற்படுத்துகிறன.
இந்தியாவின் அறுவடைக்குப் பிந்தைய இழப்பை பற்றிய பார்வை
முட்டை, மீன், இறைச்சி (22%), பழங்கள் (19%), மற்றும் காய்கறிகள் (18%) போன்ற அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கணிசமான அளவு இழப்பு ஏற்படுகிறது. அழிந்து போகக்கூடிய உணவுகளை ஏற்றுமதி செய்யும் போது, சுமார் 19% இழப்பு ஏற்படுத்திகிறது. குறிப்பாக, அவை இறக்குமதி செய்யும் நாட்டை அடையும் போது அதன் தரம் குறைந்து விடுகிறது. அழிந்துபோகும் பொருட்களை சரியான நேரத்தில் நுகர்வோருக்கு வழங்க சரியான சேமிப்பு, போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை முக்கியமான தேவைகளாகும். விவசாயத் தளவாடங்களை மேம்படுத்துவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழுவின் (Doubling Farmer’s Income (DFI)) முக்கிய நோக்கமாகும்.
விநியோகச் சங்கிலியில், பல்வேறு போக்குவரத்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். விளைபொருட்களை பண்ணைகளிலிருந்து சந்தைகளுக்கு கொண்டுசெல்லும் போக்குவரத்தில் தொடங்கி, நீண்ட தூரத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வது (மொத்த விற்பனை நிலையங்கள்) பின்னர் ரயில், சாலை, நீர் அல்லது விமானம் மூலம் நுகர்வோருக்கு (கடைசி மைல் வரை) பொருட்களைக் கொண்டு செல்வது என அறுவடை முடிந்தவுடன் பயிர் அழிந்து போகக்கூடிய பொருட்களின் வர்த்தகம் நேரப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்தியாவில் 86% விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் (small and marginal (SMF)) உள்ளனர் என்று சமீபத்திய விவசாயக் கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்த விவசாயிகள் தங்கள் சிறிய உற்பத்தியின் காரணமாக, எதிர்பார்த்த பொருளாதாரத்தை அடைய போராடுகிறார்கள். உறுதியான சந்தை ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளால் விவசாயிகள் வருமான இழப்பை சந்திக்கின்றனர்.
இந்தியாவில், உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்களின் விலை குறைவதற்கு காரணமாகும். நிதி ஆயோக் அறிக்கையின்படி, இரும்பு, எஃகு, உரங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதன் மூலம் இந்திய ரயில்வே தனது வருவாயின் பெரும்பகுதியை ஈட்டுகிறது. 2022-நிதியாண்டில், இந்த சரக்கு போக்குவரத்து இந்திய ரயில்வேயின் வருவாயில் 75% ஆகும். நாடு முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களை இணைப்பதில் இந்திய இரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உணவுக் கழகம் அதன் 90% உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கு இந்திய இரயில்வேயை பெரிதும் நம்பியுள்ளது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளும் (97%) சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
ரயில்வேயின் முயற்சிகள்
இந்திய ரயில்வே அழிந்துபோகக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதில் முன்னேற்றம் கண்டுள்ளது. ரயில்வே வேகன்களில் ஏற்றப்பட்ட டிரக்குகளை எடுத்துச் செல்ல டிரக்-ஆன்-டிரெய்ன் சேவையை (truck-on-train service) அவர்கள் அறிமுகப்படுத்தினர். பால் மற்றும் மாட்டுத் தீவனத்தில் சோதனைக்குப் பிறகு இந்தச் சேவை விரிவடைகிறது. COVID-19 தொற்றுநோய் காலத்தின்போது, அழிந்துபோகக்கூடிய பொருட்கள் மற்றும் விதைகளை சந்தைகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இடையே கொண்டு செல்ல சரக்கு சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சிறு விவசாயிகளுக்கு உதவுவதற்காக, பால், இறைச்சி மற்றும் மீன் போன்ற அழிந்து போகக்கூடிய பொருட்கள் உபரியாக உற்பத்தி செய்யப்படும் பகுதிகளை அவை நுகரப்படும் பகுதிகளுடன் இணைக்க விவசாய ரயில் (Kisan Rail) தொடங்கப்பட்டது. விவசாய ரயில் இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டி காட்டுகிறன. உதாரணமாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள திராட்சை விவசாயிகள், விவசாய ரயிலைப் பயன்படுத்தி சுமார் 22,000 குவிண்டால்களை அனுப்பியதன் மூலம் குவிண்டாலுக்கு ₹5,000 கூடுதலாக வருமானம் ஈட்டினார். பழங்கள் மற்றும் காய்கறிகளின் நீண்டதூர போக்குவரத்துக்கு ரயில்வேயைப் பயன்படுத்துவதன் நன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.
விவசாயத்தில் ரயில்வேயின் பங்கு கடந்த சில ஆண்டுகளாக நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த ரயில்வே திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலக வள நிறுவனம் (World Resources Institute (WRI)) இந்தியாவால் ஆதரிக்கப்படும் சாம்பியன்ஸ் 12.3 இந்தியாவின் நண்பர்கள் குழு, ரயில்வே வழியாக அழிந்துபோகும் போக்குவரத்தில் பல நிறுத்தங்களைக் கையாள்வது ஒரு சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் போக்குவரத்திற்கான சிறப்பு வண்டிகளில் முதலீடு செய்வது மற்றும் பாதுகாப்பான சரக்கு கையாளுதலுக்கான ரயில் வசதிகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த மேம்பாடுகள் விவசாயத்தில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, மாசுபாடு அபாயங்களைக் குறைத்து, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு பயனளிக்கும். கூடுதலாக, போக்குவரத்து நேரத்தைக் குறைக்க, ஏற்றுதல் மற்றும் இறக்குதல் செயல்முறைகளை மேம்படுத்தவும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழு பரிந்துரைக்கிறது. ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மூலம் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு செல்வதற்கு சாலைகளைவிட ரயில்வேக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் திறமையான போக்குவரத்தை உறுதி செய்கிறது.
பயன்படுத்தப்படாத வாய்ப்புகள்
இந்திய இரயில்வே அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் கணிசமாகக் குறைத்து, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பயனளிக்கும். வர்த்தக அமைச்சகத்தின் (Logistics Division, Ministry of Commerce) தளவாடப் பிரிவின்படி, சாலைப் போக்குவரத்தைவிட ரயில் சரக்கு 80% குறைவான கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது.
செயல்திறனை அதிகரிக்கவும், ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், போக்குவரத்து முறைகள் மற்றும் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பொது-தனியார் கூட்டாண்மை மூலம் தனியார் துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும். 2024 விவசாய பட்ஜெட் நவீன உள்கட்டமைப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட ஆதரவுடன் பண்ணை-சந்தை இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரயில்வே முன்முயற்சிகள் அழிந்துபோகும் பொருட்களை திறமையாக கொண்டு செல்வதன் மூலமும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதன் மூலமும் இந்த இலக்குகளை அடைய முடியும்.
ஸ்வேதா லம்பா உலக வள நிறுவனம் (World Resources Institute (WRI)), இந்தியாவில் உணவு, நிலம் மற்றும் நீர் திட்டத்தின் திட்ட மேலாளராக உள்ளார். நித்யா ஷர்மா WRI இந்தியாவில் உணவு, நிலம் மற்றும் நீர் திட்டத்தின் திட்ட மேலாளராக உள்ளார்.