கர்நாடகா மாநில அரசின் இந்த சட்ட மசோதா, அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது. இத்தகைய கட்டுப்பாடான இட ஒதுக்கீடுகள் பெங்களூரு போன்ற பொருளாதார நகரங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை அவற்றின் திறந்த பொருளாதாரத்தால் செழித்து வருகின்றன.
சர்ச்சைக்குரிய இந்த சட்ட மசோதாவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலைகள், மற்றும் பிற நிறுவனங்கள், நிர்வாகப் பணிகளுக்கு 50% உள்ளூர் மக்களையும், மேலாண்மை அல்லாத பணிகளுக்கு 75% உள்ளூர் மக்களை பணியமர்த்த வேண்டும். தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கான கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதா, 2024 (Karnataka State Employment of Local Candidates in the Industries, Factories and Other Establishments Bill, 2024), திங்கள்கிழமையன்று கர்நாடகா அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. தகுதியான உள்ளூர் மக்கள் கிடைக்கவில்லை என்றால், நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்த வேண்டும்.
ஆந்திரப் பிரதேசம் (2019) மற்றும் ஹரியானா (2020) போன்ற மாநிலங்கள் இதற்க்கு முன்பு இதே போன்ற சட்டங்களை இயற்றியுள்ளன. இருப்பினும், இத்தகைய சட்டங்கள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இதேபோன்ற சட்டத்தை ரத்து செய்தது. இது ஹரியானாவில் வசிக்காதவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பை மீறுவதாகக் கூறியது.
இந்தச் சட்டங்களை இயற்றுவதற்கான அரசியல் முயற்சிகள் இந்தியாவில் பரவலான வேலையின்மை கவலைகளுக்கு மத்தியில் ஏற்படுகின்றன. மாநில அரசாங்கம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், முதல்வர்கள் தங்கள் வாக்காளர்களின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியமாகிறது. இருப்பினும், இந்தக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளன.
முதலாவதாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இது போன்ற சட்டங்களை இயற்றின ஆனால் இந்த சட்டம் குடிமக்கள் இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், வாழ்வாதாரம் சம்பாதிப்பதற்குமான அரசியலமைப்பு உரிமைக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக வாதிடப்படுகிறது.
இரண்டாவதாக, அவைகள், அரசாங்கத்தின் மிதமிஞ்சிய கண்காணிப்பு இராஜ்ஜியத்தை (inspector-raj) மீண்டும் அறிமுகப்படுத்தலாம். இந்த அமைப்பின் கீழ், வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமா என்பதை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். இது தொழிலாளர்களை வாடகைக்குத் தேடும் நடத்தையை ஊக்குவிக்கும்.
மூன்றாவதாக, இத்தகைய சட்டங்கள் தனியார் துறைக்கு தீங்கு விளைவிக்கும். இந்திய இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகளை அரசாங்கங்களால் உருவாக்க முடியாது. எனவே, தனியார் துறையை வளரச் செய்வதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சட்டங்கள் நிறுவனங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும். சிறந்த திறமையாளர்களை ஈர்க்கும் திறனைக் குறைக்கும், மேலும் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் லாபத்தைக் குறைக்கும். இம்மாதிரி சட்டங்கள், குருகிராம் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களின் பொருளாதாரத்தை தடுக்க முடியும். ஏனென்றால், அந்த நகரங்கள் பொருளாதார வெளிப்படைத்தன்மையினால் செழித்து வருகின்றன.