சொத்து மற்றும் விற்பனையில் வரி செலுத்துவோர் இப்போது குறியீட்டு பலனைப் (indexation benefit) பெறலாம். வருமான வரி சட்டத்தின் மறுஆய்வு, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தீர்க்க வேண்டும்.
2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், வருமான வரிச் சட்டத்திற்கான (Income Tax Act (1961)) மறுஆய்வு ஒன்றை அறிவித்தார். இது வரி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வழக்குகளைக் குறைக்க உதவும். வரி விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் மற்றும் பங்குகள், கடன் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற சொத்து வகைகளில் நீண்ட கால ஆதாயங்களுக்கான வைத்திருப்புக் காலம் (holding periods) காரணமாக மூலதன ஆதாய வரி கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
நிதிநிலை அறிக்கை நீண்ட கால மூலதன (long-term capital gains) ஆதாயங்களுக்கு 12.5% வரியை முன்மொழிந்தது. அனைத்து நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துக்கள், தங்கம் மற்றும் பட்டியலிடப்படாத சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாயங்களை மதிப்பிடுவதற்கான குறியீட்டு பலனை நீக்குவதை முன்மொழிந்தது. வரி செலுத்துவோர் மற்றும் வரி நிர்வாகத்திற்கான மூலதன ஆதாயங்களின் கணக்கீட்டை எளிதாக்கும் நோக்கம் கொண்டதான, இந்த திட்டம் பரவலான விமர்சனத்தை சந்தித்தது. தொடக்கத்தில், 12.5% (20% இலிருந்து கீழே) குறைந்த வரி விகிதத்தை, குறியீட்டு பலன்களை அகற்றுவதற்கான இழப்பீடாக அரசாங்கம் இதை பாதுகாத்தது. இருப்பினும், வரி செலுத்துவோரின் கவலைகளை கவனத்தில் கொண்டு அரசாங்கம் தற்போது மறுபரிசீலனை செய்துள்ளது.
வரி செலுத்துவோர், ஜூலை 23, 2024க்கு முன் வாங்கிய சொத்தின் மீதான குறியீட்டுப் பலன்களுடன் (indexation benefit) 20% நீண்ட கால மூலதன ஆதாய வரியைச் செலுத்துவதை தேர்வு செய்யலாம். இது சொத்து வைத்திருக்கும் காலத்தில் நிலவிய பணவீக்கத்தின் அடிப்படையில், கொள்முதல் விலையை (purchase price), குறியீட்டு முறையுடன் (indexation benefits) சரிசெய்கிறது. நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் தேதிக்கு முன் செய்யப்படும் அனைத்து வாங்குதல்களுக்கும் (all purchases) இது பொருந்தும்.
பல ஆண்டுகளாக, சாதாரண வரி செலுத்துவோரின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, "எஸ்கேப்டு வருமானம்" (escaped income) ரூ. 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த மதிப்பீட்டை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க முடியும் என்று சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆறு மாதங்களில் முடிக்கப்படும் வருமான வரிச் சட்டத்தின் மறுஆய்வு, சர்ச்சைக்குரிய பிரிவுகளை ஆய்வு செய்து, சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.