திருமலையின் கோயிலின் லட்டு எப்படி புனித பிரசாதமாக மாறியது? -லாஸ்ய சேகர்

 கோயிலில் லட்டுவை அறிமுகப்படுத்தியவர் யார் என்பது தெரியவில்லை என்றாலும், கி.பி 1790 ஆம் ஆண்டிலிருந்தே இது பரவலாக இருந்ததாக பதிவுகள் காட்டுகின்றன.


பக்தர்களால் விரும்பப்படும் திருமலை லட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, புனித பிரசாதமாகப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறியதை அடுத்து பிரச்சனை வந்துள்ளது. இது பல விடை தெரியாத கேள்விகளை எழுப்பியுள்ளது. அசுத்தமான நெய்யால் செய்யப்பட்ட லட்டுகள் எப்போதாவது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டனவா அல்லது பக்தர்களை சென்றடையும் முன்பே நிராகரிக்கப்பட்டதா? கூடுதலாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanam (TTD)) ஆய்வகம், ஒவ்வொரு பிரிவையும் சோதிக்கிறது, இந்த மாசுபாட்டைக் கண்டறியத் தவறியது எப்படி?


திருமலையில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள சித்தூரிலிருந்து நான் வருவதால், லட்டு மீது மக்கள் எவ்வளவு பக்தி கொண்டவர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். வெங்கடேசப் பெருமானைப் போலவே மரியாதையுடன் நடத்துகிறார்கள். லட்டுவை ருசிக்கும் போது, ​​மக்கள் மிகுந்த மரியாதை காட்டுகின்றனர். அவர்கள் தங்கள் காலணிகளை அகற்றி, அவை சுத்தமாக இருப்பதை உறுதிசெய்து, அசைவ உணவுகளை சாப்பிட்ட நாட்களில் அதைத் தவிர்க்கிறார்கள். லட்டுக்கு இந்த மரியாதை உள்ளூர் மட்டுமல்ல; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் இந்த புனிதமான பிரசாதத்திற்காக ஒரே அளவிலான பக்தியைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


லட்டுவின் தேவை மிக அதிகமாக இருப்பதால், அது கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இது கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanam (TTD)) தனது உத்திகளை மாற்றத் தூண்டியது. 


எப்போதும் போக பிரசாதம் இல்லை


திருமலை லட்டு அதன் புவியியல் அடையாளத்தை (geographical identification (GI)) 2009-ல் பெற்றது. இது 20-ம் நூற்றாண்டிலிருந்து பக்தர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுவதில்லை. மாறாக, அது தெய்வத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது.  பக்தர்களுக்கு லட்டு வழங்கும் வழக்கம் 1940-ஆம் ஆண்டுகளில் தொடங்கியது. திருமலை ஒழுகு (Thirumalai Ozhugu) என்ற தமிழ் நூலில் அர்ச்சகரும், சரித்திர ஆசிரியருமான கோகுல் கிருஷ்ணன் என்பவரிடமிருந்து இந்தத் தகவல் வருகிறது. இந்த சிறப்பு பிரசாதத்தை முன்னிட்டு, பக்தர்கள் மண் பானையில் தயிர் சாதம் கொண்டு வெங்கடேசப் பெருமானின் சன்னதிக்கு வந்தனர். இறைவனுக்கு விருப்பமானதாக கருதப்படுவதால் இந்த உணவு இன்றும் பரிமாறப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.


லட்டு பாடி (Laddu Padi) என்பது கோயிலில் காணிக்கை சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடம் ஆகும். இது பிரிட்டிஷ் வருவாய் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு வெளியான "திருமலை திருப்பதி தேவஸ்தான திட்டம்" (Tirumala Tirupati Devasthanam Dittam) என்ற புத்தகம் லட்டு தயாரிப்பதற்கான வழிகாட்டியை வழங்குகிறது. கோவிலில் லட்டுவின் தோற்றம் தெளிவாக இல்லை. ஆனால், அது குறைந்தது கி.பி 1790 முதல் இருந்ததாக பதிவுகள் காட்டுகின்றன. 


திருப்பதியில் உள்ள எஸ்.வி.பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி இந்த தகவலை ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பகிர்ந்துள்ளார். "திருப்பதியின் கதைகள்" (The Stories of Tirupati) என்ற புத்தகத்தை எழுதினார். அதில், அரிசி மாவு மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட அதிரசலு என்ற இனிப்பு முதலில் திருமலையில் பிரசாதமாக வழங்கப்பட்டதாக விளக்கியுள்ளார். இது பின்னர் பூந்தியால் மாற்றப்பட்டது, அதில் பருப்பு மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மிருதுவான உருண்டைகள் உள்ளன. காலப்போக்கில், லட்டு பூந்தியில் இருந்து உருவானது மற்றும் கோவிலில் ஒரு பாரம்பரியமாக மாறிவிட்டது. 


உளுந்து மற்றும் மிளகினால் செய்யப்பட்ட அகன்ற, அடர் பழுப்பு நிற வடை, ஒரு காலத்தில் பாரம்பரியத்தைக் குறிக்கிறது. "திருமலை கு வடை அழகு" (Tirumalai ku vadai azhagu) என்ற பழமொழி இதை பிரதிபலிக்கிறது. திருமலை கோவிலில் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டதாகவும் பதிவுகள் குறிப்பிடுகின்றன. 


திருமலையில் தற்போது மூன்று வகையான லட்டுகள் வழங்கப்படுகின்றன. பாதாம் பருப்புடன் மேம்படுத்தப்பட்ட 750 கிராம் லட்டு, இது ரூ.200 செலவாகும் மற்றும் முக்கிய பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது வகை தினசரி திருமண சடங்கான கல்யாணோத்சவத்திற்காக செய்யப்படுகிறது. சாதாரண லட்டு 175 கிராம் எடையும் 50 ரூபாயும் கொண்டது. பல ஆண்டுகளாக, கோயில் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு சிறிய அளவிலான லட்டுவை இலவசமாக வழங்கியது.  ஆனால், இந்த நடைமுறை கோவிட் -19 க்குப் பிறகு நிறுத்தப்பட்டது. 


லட்டுகளின் தரம் குறைந்து வருகிறதா? 


லட்டு மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில், பிரசாதத்தின் தரம் வெகுவாகக் குறைந்து வருவதாக பக்தர்களும், கோயிலின் சமையலறையில் பணிபுரிபவர்களும் கூறுகின்றனர். "நிலைத்தன்மையில் சிக்கல் உள்ளது. ஒரு காலத்தில் நெய் மற்றும் முந்திரி பருப்புகளால் நிறைந்திருந்த லட்டு, சமீபத்தில் உலர்ந்துவிட்டது. இது போதுமான நெய் இல்லாததைக் குறிக்கிறது" என்று கோயிலுக்கு வழக்கமாக வருகை தரும் வி ஸ்ரீகாந்த் ரெட்டி கூறினார். 


சமீபத்தில் லட்டுகளில் இருந்து சில பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. "ஒரு காலத்தில் பிரதானமாக இருந்த குங்குமப்பூ மற்றும் பாதாம் இப்போது சேர்க்கப்படவில்லை. குங்குமப்பூ இப்போது தீர்த்தம் தண்ணீரில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், பாதாம் பெரிய, அதிக விலையுயர்ந்த லட்டுகளில் மட்டுமே சேர்க்கப்படுகிறது" என்று 1970-ஆம் ஆண்டுகளில் கோயில் சமையலறையில் பணியாற்றிய முன்னாள் சமையல்காரர் கூறினார். புதிய தொழில்நுட்பத்தால் லட்டு தயாரிக்கும் முறை வெகுவாக மாறியுள்ளது. முன்பெல்லாம் விறகுகளைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான சமையல் வேலைகள் நடந்தன. இப்போது, ​​சமையலுக்கு  எரிவாயு(LPG) பயன்படுத்துகிறது.


"நாங்கள் தயாரித்த லட்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் இல்லாமல் இரண்டு வாரங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது, ​​ஒரு வாரத்திற்கு வெளியில் வைத்தால் பூஞ்சையின் அடுக்கு உருவாகிறது. இது தரம் குறைவதைக் குறிக்கிறது," என்று சமையல்காரர் கூறினார்.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரைவு அறிக்கையின்படி, லட்டு தயாரிப்புக்கு நெய் முக்கியமானது. ஒரு சாதாரண அளவிலான லட்டுவில் (175 கிராம்) சுமார் 40 கிராம் பசு நெய் உள்ளது. பொருட்களின் தரம், குறிப்பாக நெய், லட்டுவின் சுவையை பெரிதும் பாதிக்கிறது. நெய்யில் கலப்படம் இருந்தால், அது ஒட்டுமொத்த சுவையையும் பாதிக்கிறது. இருப்பினும், சுவையை விட, லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை கணிசமாக பாதிக்கிறது.



Original article:

Share: