தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்க்கை பெறும் மாணவர்களை பிணையில்லாத மற்றும் உத்தரவாதமில்லாத கல்விக் கடனுக்குத் தகுதியுடையவர்களாக மாற்றும் பிரதம மந்திரி-வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய அம்சங்களானவை :
1. இத்திட்டத்திற்காக 2024-25 முதல் 2030-31 வரை ரூ.3,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 7 லட்சம் புதிய மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானியத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு 75% கடன் உத்தரவாதத்தை ஒன்றிய அரசு வழங்கும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை உள்ள மாணவர்கள், பிற அரசு உதவித்தொகை அல்லது வட்டி மானியத் திட்டங்களுக்குத் தகுதி பெறாதவர்கள், 3% வட்டி மானியத்தைப் பெறுவார்கள். தடைக்காலத்தின்போது ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு இந்த மானியம் பொருந்தும்.
3. இது மத்திய துறை வட்டி மானியம் (Central Sector Interest Subsidy (CSIS)) எனப்படும் தற்போதைய திட்டத்துடன் கூடுதலாகும். 10 லட்சம் வரையிலான கடனுக்கான முழு வட்டி மானியத்தை CSIS வழங்குகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சம் வரை இருக்கும் மற்றும் தொழில்நுட்ப அல்லது தொழில்முறை படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குகிறது.
4. கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (National Institutional Ranking Framework (NIRF)) தரவரிசையின் அடிப்படையில் தரமான உயர்கல்வி நிறுவனங்கள் (QHEIs) அடையாளம் காணப்படும். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் குறிப்பிட்ட களங்களில் முதல் 100 நிறுவனங்களை உள்ளடக்கும். இதில் 101 முதல் 200 வரை உள்ள மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் அனைத்து நிறுவனங்களும் அடங்கும். 860 உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் தகுதி பெறுவார்கள். NIRF தரவரிசைப்படி தகுதியான நிறுவனங்களின் பட்டியல் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
தெரிந்த தகவல்கள் பற்றி :
1. பிரதம மந்திரி-வித்யாலட்சுமி திட்டம் (PM Vidyalaxmi) என்பது தேசிய கல்விக் கொள்கை, 2020-ம் ஆண்டிலிருந்து உருவாகும் மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
2. உயர்கல்வித் துறையானது "PM-Vidyalaxmi" என்ற ஒருங்கிணைந்த இணைய இடைமுகத்தைக் கொண்டிருக்கும். அதில் மாணவர்கள் கல்விக் கடனுக்கும், வட்டி மானியத்திற்கும் விண்ணப்பிக்க முடியும், அனைத்து வங்கிகளும் பயன்படுத்தக்கூடிய எளிமையான விண்ணப்ப செயல்முறை மூலம். ஈ-வவுச்சர் (E-vouchers) மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (Central Bank Digital Currency (CBDC)) வாலட்கள் மூலம் வட்டி மானியம் செலுத்தப்படும்.