நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (Land Acquisition Act) 2013 ஜனவரி 1, 2014 முதல் நடைமுறைக்கு வந்தது. இது ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், அதை அமல்படுத்தக் கோரி விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்?
பஞ்சாப் விவசாயிகள் பிப்ரவரி முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கானௌரி (Khanauri) மற்றும் ஷம்பு எல்லைகளில் (Shambhu borders) முகாமிட்டுள்ளனர். பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். மேலும், ஒன்றிய அரசின் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலையும் வைத்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ஐ அமல்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
இந்த சட்டத்தை அமல்படுத்த விவசாயிகள் ஏன் கோரிக்கை வைக்கிறார்கள்? மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (Land Acquisition Act), 2013 என்றால் என்ன?
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டம் (Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation, and Resettlement Act), 2013 (பொதுவாக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013 என குறிப்பிடப்படுகிறது) 1894-ஆம் ஆண்டின் காலாவதியான நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு பதிலாக ஒன்றிய அரசால் இயற்றப்பட்டது.
2013-ஆம் ஆண்டு சட்டம் நிலம் கையகப்படுத்துவதற்கான நவீன முறையை வழங்குகிறது. நிலம் கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை இது உறுதி செய்கிறது. இந்தச் சட்டம் ஜனவரி 1, 2014-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. 2015-ஆம் ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
சட்டம் இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அவை, நியாயமான இழப்பீடு (fair compensation) மற்றும் ஒப்புதல் தேவைகள் (consent requirements) ஆகும். நகர்ப்புறங்களில் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு இழப்பீடு நில உரிமையாளர்கள் பெற வேண்டும். கிராமப்புறங்களில், அவர்கள் சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு உரிமை பெற்றுள்ளனர். பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnership (PPP)) திட்டங்களுக்கு, பாதிக்கப்பட்ட 70% குடும்பங்களின் ஒப்புதல் தேவை. தனியார் நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்த 80% ஒப்புதல் தேவை.
பாசனத்துடன் கூடிய பல பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலத்திற்கு, மாநில அரசுகள் நிர்ணயித்தபடி, எவ்வளவு கையகப்படுத்தலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளன. இந்த வளமான நிலத்தை எடுத்துக் கொண்டால், விவசாயம் செய்வதற்கு சமமான தரிசு நிலத்தை அரசு உருவாக்க வேண்டும். சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகளில் யாராவது மகிழ்ச்சியடையவில்லை என்றால், அவர்கள் உதவிக்கு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (LARR) ஆணையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
நிலம் கையகப்படுத்துதலின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகளை மதிப்பிடுவதற்கு சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment (SIA)) தேவைப்படுகிறது. கூடுதலாக, வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான (Rehabilitation and Resettlement (R&R)) விதிகள் போன்றவை இந்தச் சட்டத்தில் அடங்கும். கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கீழ்கண்ட உரிமைகளை வழங்குகிறது.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படும்.
வாழ்வாதார இழப்புக்கு நிதி உதவி வழங்கப்படும்.
சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது வருடாந்திர அடிப்படையிலான வருமானம் வழங்கப்படும்.
மீள்குடியேற்றப் பகுதிகளில் வீதிகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற உட்கட்டமைப்புகள் செய்யப்படும்.
தன்னிச்சையான நிலம் கையகப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக "பொதுவான நோக்கம்" (public purpose) என்ற வரையறையை சட்டம் கட்டுப்படுத்துகிறது. பொது நோக்கங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள், நகரமயமாக்கல் மற்றும் தொழில்துறை வழித்தடங்கள் ஆகியவை அடங்கும். ஐந்து ஆண்டுகளுக்குள் நிலம் அதன் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாவிட்டால், அதை உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பித் தர வேண்டும் அல்லது நில வங்கியில் வைக்க வேண்டும்.
பாதுகாப்பு, இரயில்வே மற்றும் அணுசக்தி போன்ற சில திட்டங்களுக்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டங்களுக்கு இழப்பீடு மற்றும் வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான (Rehabilitation and Resettlement (R&R)) விதிகள் இன்னும் பொருந்தும். பொது விசாரணைகள் மற்றும் சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment (SIA)) அறிக்கைகளுக்கான அணுகல் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) ஆகியோருக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் ஆலோசனை செயல்முறைகள் தேவை.
பாரதி கிசான் யூனியன் பொதுச்செயலாளர் ஜக்மோகன் சிங் கூறுகையில், “இந்தச் சட்டத்தை அதன் உண்மையான வடிவில் செயல்படுத்தாததற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
நொய்டாவின் தற்போதைய நிலைமையை அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 160 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். யமுனா விரைவுச் சாலை போன்ற திட்டங்களுக்காக அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு "நியாயமான" இழப்பீடு வழங்காததைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.பல மாநிலங்கள் இந்தச் சட்டத்தை திருத்தங்களுடன் அமல்படுத்தியுள்ளதையும் ஜக்மோகன் சுட்டிக்காட்டினார். இது சர்ச்சைகளுக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கும் வழிவகுத்தது. இதில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். PPP முன்முயற்சிகள் போன்ற பல வகைகளுக்கான ஒப்புதல் தேவையை நீக்குவது உட்பட சில விதிகளை தளர்த்துவது போன்ற மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (Land Acquisition Act), 2013 ஒரு முற்போக்கான சட்டமாகும். இது நியாயமான இழப்பீடு மற்றும் விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தை கையகப்படுத்தலாமா என்பதைச் சொல்லும் ஒப்புதல் பிரிவுச் சட்டத்தில் உள்ளது. இது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் கட்டாய கையகப்படுத்துதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. இந்தச் சட்டத்தில் மறுவாழ்வு விதிகளும் உள்ளன. இந்த ஏற்பாடுகள் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் மீள்குடியேற்றப் பகுதிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை வழங்குவதன் மூலம் உதவுகின்றன. கூடுதலாக, தனியார் ஆதாயங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல்களை தவறாகப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடுக்கிறது. இது விவசாயிகளின் கண்ணியத்தைப் பாதுகாக்கிறது. ஏனெனில், நிலம் அவர்களின் முக்கிய வருமானம் மற்றும் அடையாளமாகும், ”என்று ஜக்மோகன் கூறினார்.
செயல்முறைத் தேவைகள் பெரும்பாலும் வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதைத் தாமதப்படுத்துகின்றன என்பதை நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். கூடுதலாக, இழப்பீடு செலவுகள் பொது மற்றும் தனியார் திட்ட வரவு செலவுத் திட்டங்களில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
வளர்ச்சித் தேவைகளை சமூக நீதியுடன் சமநிலைப்படுத்துவது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே உள்ளது. இந்தச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவது சவாலானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.