குறைந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல்கள் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் அவசியத்தை காட்டுகின்றன.
ஜூலை 1-ஆம் தேதி இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அமலாக்கத்தின் 8-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. மறைமுக வரி முறையில் சமீப காலங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த வரி வசூல் காணப்பட்டது. இது இந்த முறையில் கட்டமைப்பு மாற்றங்களின் அவசியத்தை வெளிப்படுத்துகிறது. சமீபத்திய சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஜூன் 2025-இல் ரூ.1.85 லட்சம் கோடியாக இருந்தது. இது நான்கு மாதங்களில் மிகவும் குறைவானது. இந்த அளவு 2024ஆம் ஆண்டு ஜூன் மாத வசூலை விட 6.2% அதிகமாக இருந்தது. இது நான்கு வருடங்களில் மிகவும் மெதுவான வளர்ச்சி விகிதமாகும். மொத்த வசூலைத் தாண்டிப் பார்க்கும்போது, தகவல்கள் காட்டுவது என்னவெனில், திருப்பிச்செலுத்துதல் [refunds] கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அரசாங்கத்தின் உண்மையான வசூலில் வளர்ச்சி வெறும் 3.3% மட்டுமே இருந்தது. மேலும், இறக்குமதியைத் தவிர்த்த உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து வரும் வருமானம் கடந்த ஜூன் மாதத்தைவிட 4.6% அதிகமாக இருந்தது - இது அதன்பிறகு ஏற்பட்ட சராசரி பணவீக்க விகிதத்தைவிட சற்றே வேகமானதாக மட்டுமே இருந்தது. நுகர்வு வரியாக இருப்பதால், சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் சரிவு என்பது பொருளாதார நடவடிக்கைகளில் சரிவைப் பிரதிபலிக்கிறது. ஆனால், இது அமைப்பின் திறமையின்மையையும் வெளிக்காட்டுகிறது. இது போன்ற குறைபாடுகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சரியான முறையில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். எரிபொருளை சரக்கு மற்றும் சேவை வரியில் சேர்க்க வேண்டும் என்பது ஒரு பொதுவான கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், இதற்கு மாநில அரசுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு உள்ளது. ஏனெனில், எரிபொருள் மற்றும் மதுபானம் ஆகியவை ஒன்றிய அரசிடமிருந்து தன்னிச்சையாக செயல்படும் மாநிலங்களுக்கு இருக்கும் சில வருவாய் ஆதாரங்கள் இவை ஆகும். இருப்பினும், இந்த பொருட்களை நிரந்தரமாக விலக்கி வைக்க இது போதுமான காரணமாக இருக்க முடியாது. ஒரே நாடு, ஒரே வரி (one nation, one tax) இலக்கை முழுமையாக அடைய வேண்டிய நேரம் இது. மாநிலங்கள் வருவாயை இழந்தால், ஒன்றிய அரசு அவர்களுக்கு ஒன்றிய வரிகளில் அதிக பங்கை வழங்க ஒப்புக் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசும் தனது வருவாய்க்காகப் பகிர முடியாத கூடுதல் வரிகளை (non-shareable cesses) அதிகமாக நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும். தங்கள் பங்கிற்கு, தேர்தல் சார்ந்த இலக்கு இல்லாத இலவசங்களுக்கு இந்த அதிக தொகையைப் பயன்படுத்துவதற்கான சோதனையை மாநிலங்கள் எதிர்க்க வேண்டும். நம்பிக்கை இரண்டு வழிகளில் செல்கிறது.
மற்றொரு, முக்கியமான சீர்திருத்தம் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களின் எண்ணிக்கையை குறைப்பதாகும். இதுவும் தாமதமாகிவிட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் பொருத்தம் மற்றும் விகித நிர்ணய குழுக்கள் (fitment and rate-setting committees) இந்த பிரச்சினையை ஆராய்ந்து வருகின்றன. இது 28% சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்திற்கு மேல் விதிக்கப்படும் கூடுதல் வரியான சரக்கு மற்றும் சேவை இழப்பீட்டு வரியை என்ன செய்வது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாற்றுவதால் ஏற்படும் எந்தவொரு இழப்புகளையும் மாநிலங்கள் மீட்டெடுக்க உதவும் வகையில் இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாறியதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்புகளை ஈடுகட்ட உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. பின்னர், கோவிட்-19 நெருக்கடியின்போது ஒன்றிய அரசு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த உதவும் வகையில் மார்ச் 2026 வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல் வரியை பரந்த சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் இணைக்கும் சோதனையை ஒன்றிய அரசு தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அதன் நோக்கம் முடிந்ததும், வரியை நீக்க வேண்டும். வரிவிதிப்பு என்பது ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் மட்டுமல்ல. இது மக்களுடனும் தொடர்புடைய ஒன்றாகும். இனி தேவைப்படாத கூடுதல் வரியை நீக்குவது பொதுமக்களின் பாராட்டைப் பெறுவது மட்டுமல்லாமல், மிகவும் தேவைப்படும் நகர்ப்புற நுகர்வையும் அதிகரிக்க செய்யும்.