LARRDIS (Parliament Library and Reference, Research, Documentation and Information Service)-ஐ ஒரு ஆராய்ச்சி மையமாக உருவாக்குவது இந்தியாவின் நாடாளுமன்ற செயல்முறைகளை வலுப்படுத்தும்.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுவது ஒரு பொதுவான அம்சமாக மாறிவிட்டது. இதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறார்கள். நாடாளுமன்றம் அரசியலுக்கான இடம் மட்டுமல்ல, கொள்கைகள் உருவாக்கப்பட்டு, அவற்றை ஆராயப்படும் இடமும் இதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கம் கேள்வி கேட்கப்பட்டு பொறுப்பேற்க வைக்கப்படும் இடமும் நாடாளுமன்றம் ஆகும்.
சிக்கலான மற்றும் மாறுபட்ட பிரச்சினைகள் குறித்து சட்டம் இயற்றுவது ஒரு கடினமான வேலை. இந்த விஷயங்களில் பொருளாதார சீர்திருத்தங்கள், காலநிலை மாற்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். இதைச் சிறப்பாகச் செய்ய, உயர்தர ஆராய்ச்சி மற்றும் குறிப்புதவி சேவைகளுக்கான அணுகல் அவசியம். நாடாளுமன்ற நூலகம் என்பது நாட்டின் சிறந்த ஒன்றாகும். பல ஆராய்ச்சி அறிஞர்கள் அதன் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், கடந்த கால மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுப்படி, ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மட்டுமே இதைப் பயன்படுத்துகின்றனர்.
நாடாளுமன்ற நூலகம் மற்றும் குறிப்பு, ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் சேவை (LARRDIS) உடனடியாகவும் திறமையாகவும் செயல்படுகிறது — ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் 15 ஆண்டு கால நாடாளுமன்ற பதவிக்காலத்தில் ஆற்றிய உரைகள் குறித்து தனது இணைய கோரிக்கைக்கு, மூன்று நாட்களுக்குள் அனைத்தும் தனது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டதாக நினைவு கூர்ந்தார். இருப்பினும், உள்ளீடுகள் அதன் இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொகுதிகளில் உள்ளவற்றுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. "இது ஒரு ஆராய்ச்சி அமைப்போ அல்லது கல்வி நிறுவனமோ அல்ல," என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் LARRDIS-ன் பங்கை விவரித்தார்.
ஆனால் இந்த இடைவெளி இப்போது PRS நாடாளுமன்ற ஆராய்ச்சி போன்ற அமைப்புகளால் நிரப்பப்படுகிறது. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆராய்ச்சியில் உதவுவதற்காக சபை உதவியாளர்களை (Legislative Assistants to Members of Parliament (LAMP)) வழங்குகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் சுமார் 800 எம்.பி.க்கள் உள்ளனர். எந்த நேரத்திலும், 40 முதல் 50 எம்.பி.க்களுக்கு மட்டுமே LAMP உதவியாளர்கள் (LAMP fellow) சேவை உள்ளது. LAMP அதிக மதிப்பைச் சேர்ப்பதற்கும் திறம்பட செயல்படுவதற்கும் பாராட்டப்படுகிறது. இருப்பினும், இது வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டுள்ளது. கூட்டமைப்பினர் ஒவ்வொரு எம்.பி.யுடனும் குறுகிய நேரத்தை மட்டுமே செலவிடுகிறார்கள். இதன் காரணமாக, பல எம்.பி.க்கள் ஆராய்ச்சிக்காக அரசியல் உதவியாளர்கள் அல்லது வெளிப்புற ஆலோசகர்களை நம்பியுள்ளனர்.
சபை விவாதங்கள் அரசியல் மோதல்கள் போல மாறி வருகின்றன. பல அரசியல் கட்சிகள் தங்கள் எம்.பி.க்களுக்கு பேசுவதற்கு வரையறைகளை வழங்குகின்றன. இதன் பொருள் எம்.பிக்கள் பெறும் தகவல்கள் ஒருதலைப்பட்சமாக இருக்கலாம் அல்லது நிபுணத்துவம் மற்றும் உண்மைகள் இல்லாமல் இருக்கலாம். இதன் விளைவாக, விவாதங்கள் ஆழமான பகுப்பாய்வைக் கொண்டிருக்காமல் போகலாம் என்ற நிலைப்பாடு உள்ளது.
LARRDIS-ன் நன்மை, தீமை மற்றும் விரும்பத்தகாதது
LARRDIS நாடாளுமன்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் தீவிரமாக உள்ளது. இது மக்களவை நடவடிக்கைகள், குழு அறிக்கைகள் மற்றும் அரியவகை புத்தகங்களின் PDF காப்பகங்களை உருவாக்கியுள்ளது. 2023-ம் ஆண்டில், எம்.பி.க்கள் எழுதிய கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு சேவையை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அதன் பெரும்பாலான சேவைகள் எதிர்வினையாற்றும் தன்மை கொண்டவை. எம்.பி.க்கள் நேரிலோ அல்லது இணையவழியிலோ கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
எம்.பி.க்களின் தகவல் கோரிக்கைகளின் எண்ணிக்கை 1950-ல் 150-லிருந்து 2019-ல் 8,000-க்கு மேல் உயர்ந்தது. இருப்பினும், LARRDIS பெரும்பாலும் தனித்து இயங்குகிறது, பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள் அல்லது ஆலோசனை நிறுவனங்களுடன் குறைந்தபட்ச கூட்டாண்மைகளே உள்ளன. இந்த தனிமை, முன்கூட்டியே, எதிர்நோக்கு கொள்கை பகுப்பாய்வு செய்யவும், போக்குகளை முன்னறிவிக்கவும் அதன் திறனை மட்டுப்படுத்துகிறது. இது உள்நாட்டு ஆராய்ச்சி திறனையும் மட்டுப்படுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, LARRDIS மாற வேண்டும். இது ஒரு சுறுசுறுப்பான, எதிர்காலம் சார்ந்த மற்றும் உள்ளடக்கிய ஆராய்ச்சி மையமாக மாற வேண்டும். இது இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். இந்த மாற்றம் இந்தியாவின் நாடாளுமன்ற செயல்முறையை மேம்படுத்தும்.
நிறுவப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகங்கள் சிறப்பு ஆராய்ச்சி அலகுகளைக் (special research units) கொண்டுள்ளன. இந்த அலகுகள் சட்டமியற்றுபவர்களுக்கு துல்லியமான, பாரபட்சமற்ற மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்குகின்றன. சர்வதேச நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions (IFLA)) மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான கூட்டாண்மை (Inter-Parliamentary Union (IPU)) ஆகியவை இந்த ஆராய்ச்சி சேவைகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. இந்த வழிகாட்டுதல்களின்படி, ஒரு முழுமையான ஆராய்ச்சி செயல்பாடு இரகசியத்தன்மை, நடுநிலைமை மற்றும் நிறுவன நினைவகத்தை உறுதி செய்ய வேண்டும்.
ஐரோப்பிய நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை (European Parliamentary Research Service (EPRS)) சிந்தனையாளர்கள், கல்வி கூட்டமைப்புகள் மற்றும் பிற நாடாளுமன்ற சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஒன்றாக, அவை பரந்த அளவிலான அறிவுத் தொகுப்பை உருவாக்குகின்றன. EPRS அறிக்கைகள் மற்றும் கொள்கைக்கான சுருக்கங்களைக் கொண்டு பயன்படுத்த எளிதான வலைத்தளத்தையும் இயக்குகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) பாதிக்கும் உலகளாவிய போக்குகளைக் கண்காணிக்கிறது. இது ஆரம்பநிலை கட்டத்தில் ஐரோப்பிய ஆணைய தாக்க மதிப்பீடுகளை மதிப்பாய்வு செய்கிறது. EPRS "ஐரோப்பா அல்லாதவற்றின் செலவு" (Cost of Non-Europe) அறிக்கைகளையும் மேற்கொள்கிறது. இது கூட்டு EU நடவடிக்கைகளின் நன்மைகளைக் காட்டுகிறது.
அர்ஜென்டினாவின் சட்டமன்ற ஆலோசனைக்கான அறிவியல் அலுவலகம் (OCAL) வெளிப்புற நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருப்பங்களைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு தகவல் அளிக்கிறது, சமூக சவால்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறது, சட்டமியற்றுபவர்களை அறிவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைக்கிறது, மற்றும் பயிற்சி திட்டங்களை நடத்துகிறது. பிரான்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருப்பங்களை மதிப்பீடு செய்யும் நாடாளுமன்ற அலுவலகம் (OPECST) மற்றும் மெக்சிகோவின் யூனியன் காங்கிரஸிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் அலுவலகம் (INCyTU) ஆகியவை இதே பங்கை வகிக்கின்றன.
LARRDIS இந்த முன்னெச்சரிக்கை மற்றும் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றலாம். கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேருவது ஒரு சாத்தியமான படியாகும். இந்தக் கூட்டமைப்புகள் கொள்கை தொடர்பான ஆய்வுகளை உருவாக்க உதவும். இத்தகைய ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் அல்லது காலநிலை மாற்றம் போன்ற சிக்கலான மற்றும் புதிய பிரச்சினைகளைக் கையாள முடியும்.
நாடாளுமன்றங்களுக்கு இடையேயான கூட்டாண்மை (Inter-Parliamentary Union (IPU)) இத்தகைய கூட்டமைப்புகளுக்கான எடுத்துக்காட்டுகளை குறிப்பிடுகிறது. பெனின் (ஆப்பிரிக்கா) மற்றும் கொலம்பியா (தென் அமெரிக்கா) ஆகிய நாடுகளில், அறிஞர்கள் நேரடியாக நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த அவர்கள் தொழில்நுட்ப ஆவணங்களை இணைந்து எழுதுகிறார்கள். எகிப்து நாடாளுமன்றக் குழுக்களில் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூட்டணிகளின் குழுக்களை இணைக்கிறது. ஸ்வீடனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சங்கம் (RIFO) என்ற அமைப்பு உள்ளது. இது சட்டமியற்றுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாகப் பேசவும் பணியாற்றவும் உதவுகிறது.
LARRDIS-ஐ மறுசீரமைக்க சிறந்த வழி, படிப்படியாகவும் ஆலோசனை ரீதியாகவும் அணுகுமுறையை மேற்கொள்வதாகும். இந்த அணுகுமுறை உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். LARRDIS-ன் ஆணை தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். எம்.பி.க்கள் மற்றும் குடிமக்கள் போன்ற யார் இதைப் பயன்படுத்தலாம் என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். திருப்புமுனை காலக்கெடு (turnaround timelines) மற்றும் இரகசியத்தன்மை நெறிமுறைகளுக்கும் (confidentiality protocols) தெளிவான விதிகள் தேவை. சிந்தனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி, OECD மற்றும் UNDP போன்ற அமைப்புகளின் நிபுணர்கள் அதன் பணியை வலுப்படுத்த முடியும்.
இது வெறும் நிர்வாக சீர்திருத்தம் அல்ல. சட்டம் இயற்றுதல், பொறுப்புத் தன்மை மற்றும் நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான முதலீடாகும். இந்தியா ஒரு சிக்கலான நாடாகும். இதன் காரணமாக, சரியான தகவல் இல்லாமல் உருவாக்கப்படும் கொள்கைகளின் விலை மிக அதிகமாக இருக்கலாம். ஒரு நவீன ஆராய்ச்சி சேவை, சட்டமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான தகவல் இடைவெளியைக் குறைக்கும். இது விவாதங்களின் தரத்தை மேம்படுத்துவதோடு, நாடாளுமன்ற செயல்முறைகளில் குடிமக்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.
சுவாதி சுதாகரன் மற்றும் அபந்திகா கோஷ் புதுதில்லியில் உள்ள Chase Advisors என்ற பொதுக் கொள்கை ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.