இந்தியாவில் சிறிய குற்றங்களுக்கு சில தண்டனைகள் மிகவும் கடுமையானதாக உள்ளது. உதாரணமாக, தெருவில் பசுவின் பால் கறந்ததற்காக அல்லது செல்லப்பிராணி நாய்க்கு சரியான பயிற்சி அளிக்காததற்காக ஒருவரை கைது செய்யலாம்.
இந்த மசோதா மக்களவையின் தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளுக்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2025, கடந்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. குற்றவியல் குற்றச்சாட்டுகளைக் குறைப்பதற்கும் சில குற்றங்களுக்கான தண்டனைகளை எளிதாக்குவதற்கும் 16 மத்திய சட்டங்களை மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நரேந்திர மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இரண்டாவது ஜன் விஸ்வாஸ் மசோதாவாகும். முதலாவது, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) சட்டம், 2023, 19 அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் கையாளப்படும் 42 மத்திய சட்டங்களில் உள்ள 183 விதிகளிலிருந்து குற்றவியல் குற்றச்சாட்டுகளை நீக்கியது.
ஜன் விஸ்வாஷ் மசோதா ஏன் கொண்டுவரப்பட்டது?
விதி சட்டக் கொள்கை மையம் 882 மத்திய சட்டங்களின் தரவுத்தளத்தை உருவாக்கியது. இவற்றில், 370 சட்டங்களில் 7,305 குற்றங்களுக்கான குற்றவியல் விதிகள் உள்ளன. இந்தக் குற்றங்களில் 75%-க்கும் அதிகமானவை கப்பல் போக்குவரத்து, வரிவிதிப்பு, நிதி நிறுவனங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் போன்ற முக்கிய குற்றவியல் நீதிக்கு வெளியே உள்ள சட்டங்களிலிருந்து வருவதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
குற்றவியல் சட்டத்தின் இந்த பரவலான பயன்பாடு பல காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், சில தண்டனைகள் சாதாரண செயல்களுக்கு வழக்கத்திற்கு மாறாக கடுமையானதாக உள்ளது. உதாரணமாக, தெருவில் பசுவின் பால் கறந்ததற்காக அல்லது அவரது செல்ல நாய்க்கு போதுமான பயிற்சி அளிக்காதாலோ ஒருவரை கைது செய்யலாம்.
இதுபோன்ற சட்டங்கள் அரிதாகவே பயன்படுத்தப்பட்டாலும், அவை அரசாங்கம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கின்றன. தண்டனை குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு ஒத்திருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையையும் அவை மீறுகின்றன. இந்தச் சட்டங்களில் பல காலாவதியான கருத்துக்கள் மற்றும் அரசின் அதிகப்படியான பாதுகாப்பு அணுகுமுறையிலிருந்து வருகின்றன.
அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் வணிகம் தொடர்பான 1,536 சட்டங்களில், பாதிக்கும் மேற்பட்டவை சிறைத்தண்டனைகளை உள்ளடக்கியது என்பதைக் கண்டறிந்துள்ளது. வணிகங்கள் பின்பற்ற வேண்டிய 69,233 இணக்கங்களில், 37.8% சிறைத்தண்டனைக்கான வாய்ப்பை உள்ளடக்கியது. இந்தத் தண்டனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை குறைந்தது ஒரு வருடம் சிறைத்தண்டனையை உள்ளடக்கியது ஆகும்.
குற்றவியல் சட்டத்தின் இந்த அதிகப்படியான பயன்பாடு கருத்துக்கள், வணிகம், பணம், தொழில்முனைவு மற்றும் இறுதியில் வேலைவாய்ப்புகள், செல்வம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குவதற்கு தடையாக மாறியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
குற்றமயமாக்கலின் உயர் மட்டம், ஏற்கனவே சுமையில் உள்ள இந்தியாவின் சட்ட அமைப்புக்கு அதிக அழுத்தத்தை சேர்க்கிறது. ஆகஸ்ட் 24 நிலவரப்படி, மாவட்ட நீதிமன்றங்களில் 3.6 கோடிக்கும் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், 2.3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளன என்றும் தேசிய நீதித்துறை தரவு கட்டம் காட்டுகிறது.
2023ஆம் ஆண்டு முதல் ஜன் விஸ்வாஸ் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது வணிக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறிய தவறுகள் மற்றும் நடைமுறை சிக்கல்களை குற்றவியல் குற்றங்களாகக் கருதுவது அமைப்பை மெதுவாக்குகிறது மற்றும் கடுமையான வழக்குகளை ஒதுக்கித் தள்ளுகிறது என்று கூறியது. இந்த அழுத்தத்தைக் குறைத்தல், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் நீதி அமைப்பை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.
மசோதா என்ன செய்கிறது?
2025ஆம் ஆண்டு மசோதா 355 விதிகளில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. இவற்றில், வணிகத்தை எளிதாக்க 288 விதிகள் குற்றமற்றவையாகவும், அன்றாட வாழ்க்கையை எளிதாக்க 67 விதிகள் திருத்தப்படும்.
திருத்தப்படவுள்ள 16 சட்டங்கள்:
* இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934
* மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940
* சாலைப் போக்குவரத்துக் கழகச் சட்டம், 1950
* தேயிலைச் சட்டம், 1953
* தென்னை நார்த் தொழில் சட்டம், 1953
* கைத்தறி (உற்பத்திக்கான பொருட்களை ஒதுக்குதல்) சட்டம், 1985
* டெல்லி நகராட்சிக் கழகச் சட்டம், 1957
* பயிற்சிச் சட்டம், 1961
* மோட்டார் வாகனச் சட்டம், 1988
* புது டெல்லி நகராட்சிக் கவுன்சில் சட்டம், 1994
* மத்திய பட்டு வாரியச் சட்டம், 1948
* ஜவுளிக் குழுச் சட்டம், 1963
* வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1985
* நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம், 2006
* சட்ட அளவியல் சட்டம், 2009
* மின்சாரச் சட்டம், 2003
மசோதாவின் சில முக்கிய அம்சங்கள் யாவை?
மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicles Act (MVA)), பயிற்சிச் சட்டம் மற்றும் சட்ட அளவியல் சட்டம் (Legal Metrology Act (LMA)) உள்ளிட்ட 10 சட்டங்களின்கீழ் 76 குற்றங்களில் முதல் முறையாக குற்றவாளிகளுக்கு "எச்சரிக்கை" (“warning”) மற்றும் "சரிசெய்தல் அறிவிப்பு" (“improvement notice”) போன்ற புதிய யோசனைகளை இந்த மசோதா கொண்டு வருகிறது.
உதாரணமாக, யாராவது முதல் முறையாக தரமற்ற எடைகள் மற்றும் அளவைகளைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு நேரடி அபராதத்திற்குப் பதிலாக "சரிசெய்தல் அறிவிப்பு" கிடைக்கும். தற்போது, இந்தக் குற்றத்திற்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த நபர் சிக்கலை சரிசெய்ய வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த மசோதா சிறிய, தொழில்நுட்ப அல்லது நடைமுறை குற்றங்களுக்கான சிறைத்தண்டனைகளை நீக்கி, அவற்றை அபராதங்கள் அல்லது எச்சரிக்கைகளால் மாற்றுகிறது. உதாரணமாக, மின்சாரச் சட்டம், 2023-ன் கீழ், உத்தரவுகளைப் பின்பற்றாததற்காக மூன்று மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக, இப்போது ரூ. 10,000 முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த மசோதா தண்டனைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் மாற்றுகிறது. மீண்டும் மீண்டும் குற்றங்கள் செய்வோருக்கு, அபராதம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் 10% தானாகவே அதிகரிக்கும். இது புதிய சட்டங்களின் தேவையைத் தவிர்க்கிறது மற்றும் மீறல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வணிகம் செய்வதை எளிதாக்குவதும் மக்களுக்கு தேவையற்ற சட்ட சிக்கல்களைக் குறைப்பதும் ஜன் விஸ்வாஸின் நோக்கம் என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகஸ்ட் 18 அன்று கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளாக NDA அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி வருகிறது. தனது சுதந்திரதின உரையில், பிரதமர் நரேந்திர மோடியும் தேவையற்ற சட்டங்களை நீக்குவதாக உறுதியளித்தார். இந்தியாவில், மிகச் சிறிய பிரச்சினைகளுக்கு மக்களை சிறைக்கு அனுப்பக்கூடிய சட்டங்கள் உள்ளன. மேலும், யாரும் அவற்றில் அதிகக் கவனம் செலுத்தவில்லை என்று அவர் கூறினார். அதனால்தான் அரசாங்கம் இதுபோன்ற மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மசோதா மக்களவையின் தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது அடுத்த அமர்வின் முதல் நாளில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டு மசோதா சீர்திருத்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, 10 அமைச்சகங்கள் அல்லது துறைகளால் கையாளப்படும் 16 மத்திய சட்டங்களை உள்ளடக்கியதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை மேம்படுத்துவதையும், வாழ்க்கையையும் வணிகத்தையும் எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹரிகிஷன் சர்மா, தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தேசிய நிறுவனத்தின் மூத்த உதவி ஆசிரியராக உள்ளார்.