ஆவணமற்ற வங்காளதேசத்தவர்களைத் தடுத்துவைப்பதற்கும் நாடு கடத்துவதற்குமான சட்ட கட்டமைப்பு -வினீத் பல்லா

 ஆவணமற்ற வங்காளதேசத் தொழிலாளர்களைத் தடுத்து நாடு கடத்துவதற்கு எதிரான ஒரு பொதுநல வழக்கை (public interest litigation (PIL)) விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.


பல மாநிலங்களில் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வழக்கில் தலையிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை (PIL) விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த வாரம் ஒப்புக்கொண்டது.


மேற்கு வங்க புலம்பெயர்ந்த தொழிலாளர் நல வாரியம் (West Bengal Migrant Workers Welfare Board) தாக்கல் செய்த பொதுநல மனுவில், பிப்ரவரி முதல் ஜூலை வரை பல மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்காள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவணமற்ற வங்காளதேசக் குடியேறிகள் (undocumented Bangladeshi immigrants) என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.


நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கும் ஒன்பது மாநிலங்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் தங்கள் பதிலைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


இந்த வழக்கு, ஒரு நபரின் தேசியத்தை கேள்விக்குட்படுத்த மாநிலத்திற்கு உதவும் சட்ட கட்டமைப்பையும், வெளிநாட்டினரை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கான நடைமுறைகளையும் இது எடுத்துக்காட்டுகிறது.





ஒரு வெளிநாட்டவரை வரையறுத்தல்


இந்தியாவில் வெளிநாட்டினர் நுழைவது, தங்குவது மற்றும் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் முக்கிய சட்டம், வெளிநாட்டினர் சட்டம், 1946 (Foreigners Act) ஆகும். இந்தச் சட்டம் ஒரு "வெளிநாட்டவர்" என்பதை இந்தியக் குடிமகனாக இல்லாத எவரையும் வரையறுக்கிறது. மேலும், அவர்களின் நடமாட்டத்தைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தவும், அவர்கள் தங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.


சட்டத்தின் பிரிவு 9-ன் கீழ், இந்தச் சட்டம், ஒரு 'வெளிநாட்டவர்' தனது சான்றுகளை நிரூபிக்க ஒரு எதிர்மாறான ஆதாரச் சுமையைக் (reverse burden of proof) கொண்டுள்ளது. ஒருவரின் தேசம் குறித்து ஏதேனும் கேள்வி இருந்தால், அவர்கள் வெளிநாட்டவர் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அந்த நபரிடம் உள்ளது என்று அது கூறுகிறது. இந்திய சாட்சியச் சட்டம், 1872 (Indian Evidence Act) கூறுவதில் இருந்து வேறுபட்டாலும்கூட இந்த விதி பொருந்தும்.


வேறுவகைகளில் கூறுவதானால், சட்டத்தின்கீழ், ஒரு அதிகாரி ஒரு நபரின் தேசியத்தை சந்தேகித்தால், அந்த நபர் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இது சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் யாரையும் நிறுத்த அல்லது தடுத்து வைக்க அதிகாரத்தை வழங்குகிறது.


குடியுரிமையை நிரூபித்தல்


குடியுரிமையை நிரூபிப்பது என்பது மிகவும் கடுமையான பணியாகும். ஏனென்றால், பிறப்பால் குடிமக்களாக இருக்கும் நபர்களுக்கு குடியுரிமை அடையாளஅட்டை (citizenship card) போன்ற ஒற்றை ஆவணம் எதுவும் இல்லை.


குடியுரிமைச் சட்டம், 1955-ன் கீழ், ஒரு நபர் பிறப்பால் இந்தியக் குடிமகனாக இருக்க, அவர் மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும்.


முதலாவதாக, ஜனவரி 26, 1950 அன்று அல்லது அதற்குப் பிறகு, ஆனால் ஜூலை 1, 1987-க்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர்கள் தானாகவே குடிமக்களாகக் கருதப்படுவார்கள்.


இரண்டாவதாக, ஜூலை 1, 1987 அன்று அல்லது அதற்குப் பிறகு, ஆனால் குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2003 (2004-ன் 6)-க்கு முன்பு பிறந்தவர்கள், குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அவர்கள் பிறந்த நேரத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் மட்டுமே குடிமக்களாக இருப்பார்கள்.


மூன்றாவதாக, 2003-க்குப் பிறகு பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருந்தால், அல்லது அவர்களின் பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்தால், மற்றவர் பிறக்கும்போது சட்டவிரோதமாகக் குடியேறியவராக இல்லாதபோது மட்டுமே குடிமக்களாகக் கருதப்படுவார்கள்.


பல ஆண்டுகளாக, உச்சநீதிமன்றத்திற்கு உட்பட நீதிமன்றங்கள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் அட்டைகள் மற்றும் நிரந்தரக் கணக்கு எண் அட்டைகள் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் அடையாள ஆவணங்கள் (PAN cards) குடியுரிமைக்கான உறுதியான ஆதாரம் அல்ல என்று கூறியுள்ளன.


மாறாக, குடியுரிமையை நிரூபிப்பதற்கு பெரும்பாலும் இந்தியாவில் பிறப்பை உறுதிப்படுத்தும் தொடர்ச்சியான ஆவணங்கள் தேவைப்படுகின்றன. மேலும், ஜூலை 1, 1987-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, ஒரு பெற்றோரின் அல்லது இருவரின் குடியுரிமையும் இதில் அடங்கும். இதில் பிறப்புச் சான்றிதழ்கள், பள்ளிப் பதிவுகள் மற்றும் நில ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.


இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஆவணப் பற்றாக்குறை இருப்பதால், குறிப்பாக கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே, பிறப்புப் பதிவு கடுமையாக்கப்படுவதற்கு முன்பு பல பிறப்புகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. வெவ்வேறு ஆவணங்களில் பெயர்கள் மற்றும் எழுத்துப்பிழைகளில் உள்ள வேறுபாடுகள் பலருக்கு செயல்முறையை மேலும் சிக்கலாக்குகின்றன. இதனால், அவர்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிப்பது ஒரு சிக்கலான பணியாக அமைகிறது.


உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய உத்தரவுகள்


மே 2, 2025 அன்று, உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, "சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்காளதேசிகள்/ரோஹிங்கியாக்களை" நாடு கடத்துவதற்கான "திருத்தப்பட்ட வழிமுறைகளை" வெளியிட்டது. இந்தக் கடிதம், "சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து, அடையாளம் கண்டு, நாடு கடத்த/ திருப்பி அனுப்ப வேண்டும்”. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைக்க அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அத்தகைய நபர்களைத் தடுத்து வைக்க "ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் கீழ் போதுமான தடுப்புக்காவல் மையங்களை" நிறுவவும் இது மாநிலங்களைக் கேட்டுக்கொள்கிறது.


மிக முக்கியமான உத்தரவு சரிபார்ப்பு செயல்முறையைப் (verification process) பற்றியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமகன் என்று கூறினால், அந்த மாநில அதிகாரிகள் அவர்களின் சான்றுகளைச் சரிபார்க்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில், "சந்தேகத்திற்குரிய நபர் தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்படுவார்" (suspected person shall be kept in the Holding Center) என்று அந்தக் கடிதம் கூறுகிறது.


30 நாட்களுக்குள் சரிபார்ப்பு அறிக்கை எதுவும் பெறப்படாவிட்டால், "வெளிநாட்டினர் பதிவு அதிகாரி சந்தேகத்திற்குரிய வங்காளதேசம்/மியான்மர் நாட்டவரை நாடு கடத்த/திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கலாம்." அடையாளம் காணப்பட்ட சட்டவிரோத குடியேறிகளின் உயிரின அடையாளத்தை (பயோமெட்ரிக்) பதிவுசெய்து, எதிர்காலத்தில் அவர்கள் இந்திய ஆவணங்களைப் பெறுவதைத் தடுக்க, ஒரு பொது இணையதளத்தில் நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுவதையும் இந்த அறிவுறுத்தல்கள் கட்டாயமாக்குகின்றன.




நாடுகடத்தல் செயல்முறை


சட்டவிரோத வெளிநாட்டினரை நாடு கடத்துவது பொதுவாக பல படிகளைப் பின்பற்றுகிறது.


அசாமில், செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் பிடிபடும் வெளிநாட்டினர் முதலில் வெளிநாட்டினர் (தீர்ப்பாயங்கள்) உத்தரவு, 1964-ன் (Foreigners (Tribunals) Order) கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களால் வழக்குத் தொடரப்படுகிறார்கள். இந்த தீர்ப்பாயங்கள் ஒரு நபர் வெளிநாட்டவரா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றன. மேலும் தீர்ப்பாயம் அந்த நபருக்கு "தனது வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்த நியாயமான வாய்ப்பை" வழங்கும் என்று உத்தரவு கூறுகிறது. ஏப்ரல் 2012-ல், 1964 உத்தரவு திருத்தப்பட்டது. இதற்கான தீர்ப்பாயங்கள் 60 நாட்களுக்குள் வழக்குகளை முடிக்க வேண்டும் என்றும் கோரியது.


மற்ற மாநிலங்களில், வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் மட்டுமே வெளிநாட்டினரை நாடு கடத்த முடியும் என்று காவல்துறை கையேடுகள் கூறுகின்றன. சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு நாடுகடத்தல் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக, 2014-ல் உள்துறை அமைச்சகம் (MHA) இதைத் தெரிவித்தது. இந்த வெளிநாட்டினரை "அவர்களின் தேசியம் சரிபார்க்கப்பட்டு பயண ஆவணங்கள் வழங்கப்படும் வரை", நிறுத்தி வைத்தல் அல்லது தடுப்பு மையங்களில் தடுத்து வைக்க வேண்டும் என்று MHA மார்ச் 2020-ல் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


காவல்துறை கையேடுகளின்படி, நாடுகடத்தப்படுவதற்கான உத்தரவு நாடுகடத்தப்படும் நபருக்கு வழங்கப்பட வேண்டும். நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டவுடன், அந்த வெளிநாட்டவரின் நாட்டின் பிரதிநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.


2020-ல் மத்திய உள்துறை அமைச்சகம் இதை "தொடர்ச்சியான மற்றும் செயல்பாட்டின் சட்டப்பூர்வ செயல்முறை" (continuous and ongoing statutory process) என்று அழைத்தது. அதன், மே மாதம் அறிவிப்பானது மிகவும் வேகமான செயல்முறையாக, 30 நாள் காலக்கெடுவின் ஒரு நபரை நாடுகடத்துவதற்கான உத்தரவின் காரணமாக அல்ல, மாறாக சரிபார்ப்பில் நிர்வாக தாமதம் காரணமாக நாடு கடத்த முடியும் என்பதாகும். இது உரிய செயல்முறை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.


சட்டப்பூர்வ சவாலுக்கான காரணங்கள்


புதிய நடைமுறையின் சட்டப்பூர்வத்தன்மையை சவால் செய்ய உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமைகளை மீறுவதால், உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று மனு வாதிடுகிறது. வெளிநாட்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டுமே மக்களைத் தடுத்து வைக்கும் அதிகாரத்தை வெளிநாட்டினர் சட்டம் அரசாங்கத்திற்கு வழங்கவில்லை என்றும் அது வாதிடுகிறது.


இந்த மனு இரண்டு முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறது. அவை, காவல்துறைக்கு வழங்கப்பட்ட தன்னிச்சையான அதிகாரங்கள் மற்றும் 30 நாள் காலக்கெடு ஆகும். இவை ஒரு நபரை வெளிநாட்டவராக அறிவித்து முறையான சட்ட நடைமுறை இல்லாமல் நாடு கடத்த அனுமதிக்கின்றன என்று அது வாதிடுகிறது.

                                  


Original article:

Share: