வெவ்வேறு காரணங்கள் அவர்களின் பொருளாதாரங்களில் ஏற்றத்தைத் தடுக்கின்றன. ஆனால், கட்டமைப்புக் குறைபாடுகளை சரிசெய்வதில் தயக்கம் இருவருக்கும் பொதுவானதாக உள்ளது.
இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா தனது முதலீட்டு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது. அதே நேரத்தில் சீனா அதிக முதலீட்டைக் குறைத்து உள்நாட்டு நுகர்வில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இரு நாடுகளும் கடந்த பத்தாண்டிற்கு மேலாக சக்திவாய்ந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, இரு தலைவர்களும், அந்தந்த அரசியல் அமைப்புகளில் மிகவும் வலுவாக இருந்தாலும், தங்கள் பொருளாதாரங்களைத் தேவையான திசையில் வழிநடத்த முடியவில்லை. இந்தியாவில், சீன வணிகங்கள் இன்னும் முதலீடு செய்யத் தயங்குகின்றன. மேலும் சீனாவில், நுகர்வோர் நம்பிக்கை மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது.
இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சிக்காததற்காக அரசாங்கத்தைக் குறைகூற முடியாது. புதிய உற்பத்தி அலகுகளுக்கு குறைந்த வரிவிகிதங்கள் மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க உற்பத்தி தொடர்பான ஊக்கத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஆனால், முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் மிகக் குறைவு. உண்மையில், நாட்டிற்குள் இருந்து தனியார் மூலதனம் வெளிநாடுகளுக்கு நகர்வதுபோல் தெரிகிறது. மற்றொரு கவலை என்னவென்றால், உற்பத்தி மற்றும் முதலீடு ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் குவிந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் பாதியை உருவாக்கியுள்ளன.
உற்பத்தித் துறையின் பங்கை அதிகரிப்பதில் உள்ள சவால் புதியதல்ல. உற்பத்தியில் பெரிய உயர்வு இல்லாமல், முதலீட்டு ஏற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. முந்தைய அரசாங்கங்களும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. உதாரணமாக, UPA காலத்தில், தேசிய உற்பத்திக் கொள்கை 2022ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையின் பங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. தற்போதைய அரசாங்கமும் இதேபோன்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில், உற்பத்தித் துறையின் பங்கு கிட்டத்தட்ட அப்படியே உள்ளது .
இப்போது, அரசாங்கம் முதலீடுகளில் இருந்து நுகர்வை அதிகரிப்பதில் தனது கவனத்தை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. முதலில் தனிநபர் வருமான வரியைக் குறைப்பதன் மூலமும், இப்போது GSTயைக் குறைக்கத் திட்டமிடுவதன் மூலமும் வரி குறைப்புக்கள் மூலம் இதைச் செய்கிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை வருவாயைக் குறைப்பதால் பொதுப் பொருட்களுக்கு செலவிடும் அரசாங்கத்தின் திறனைக் கட்டுப்படுத்துகிறது.
சீனாவில், அணுகுமுறை வேறுபட்டது. மறு சமநிலைப்படுத்துவதற்குப் பதிலாக, பெய்ஜிங் அதன் முதலீடு மற்றும் ஏற்றுமதி உத்தியை வலுப்படுத்தியுள்ளது. நுகர்வை ஆதரிப்பதற்கான அதன் முயற்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஜனாதிபதி ஜி ஜின்பிங் பாரம்பரிய தொழில்களுடன் உயர் தொழில்நுட்பத் தொழில்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். இதன் விளைவாக, சீனாவின் முதலீடு-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சுமார் 40 சதவீதமாக உள்ளது. அதன் ஏற்றுமதிகள் $3.58 டிரில்லியனாக வளர்ந்துள்ளன. மேலும், அதன் வர்த்தக உபரி 2024-ல் கிட்டத்தட்ட $1 டிரில்லியனை எட்டியுள்ளது.
இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரங்களையும் மாற்று விகிதங்களையும் நிர்வகிப்பதற்கு வெவ்வேறு உத்திகளைப் பின்பற்றுகின்றன.
இந்தியாவில், ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ரூபாய்க்கு ஒரு நிலையான அளவை நிர்ணயிப்பதில்லை. இருப்பினும், ரூபாய் அதிகமாக வீழ்ச்சியடைவதைத் தடுக்க சந்தையில் தலையிடுகிறது. இது இந்தியாவின் மாற்று விகித முறையை ஒரு நிலைப்படுத்தப்பட்ட ஏற்பாடாக மாற்றுகிறது. அத்தகைய கொள்கை ஏற்றுமதி போட்டித்தன்மையைக் குறைக்கிறது. ஆனால், இறக்குமதிகளை மலிவானதாக்குகிறது, குடும்ப வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. இது இந்தியா அதன் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குகளை நெருங்கவும் உதவுகிறது.
சீனாவின் அணுகுமுறை இதற்கு நேர்மாறாக உள்ளது. தனது நாணயத்தை குறைவாக மதிப்பிட்டு வைத்திருப்பதன் மூலம், சீனா ஏற்றுமதிகளை அதிகரிக்கிறது. ஆனால், இது இறக்குமதிகளை விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. இது குடும்ப வாங்கும் சக்தியைக் (household purchasing power) குறைக்கிறது.
சீனா தனது பொருளாதாரத்தை முதலீடு சார்ந்த வளர்ச்சியிலிருந்து நுகர்வு சார்ந்த வளர்ச்சிக்கு மாற்றினால், அது பொருளாதாரத்தை மெதுவாக்கும். ஆனால் அதன் அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு அதிருப்தியைக் காட்ட வழக்கமான வழிகளை வழங்காவிட்டாலும், தலைமை அத்தகைய செலவுகளைத் தவிர்க்கிறது.
இருப்பினும், இந்தியாவில், அடிக்கடி தேர்தல்கள் மூலம் பொது அதிருப்தி வெளிப்படுகிறது. மெதுவான முதலீடு, பலவீனமான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் குறைந்த ஊதிய வளர்ச்சி ஆகியவை அதிருப்தியைக் குறைக்க அரசாங்கங்களை பிரபலமான கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தூண்டுகின்றன.
இந்தியா சமீபத்தில் அதிக பணப் பரிமாற்றங்களை வழங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. நிபந்தனையற்ற பணப் பரிமாற்றங்கள் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 1% என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இதனுடன், இந்தியா மற்ற நலக் கொள்கைகளிலும் கவனம் செலுத்துகிறது. இது சீனாவிலிருந்து மிகவும் வேறுபட்டது. நலனை மிகைப்படுத்தக்கூடாது என்று ஜி ஜின்பிங் தெளிவாகக் கூறியுள்ளார். அதிகப்படியான நலனை நிலைநிறுத்த முடியாது என்றும் அது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்புகிறார்.
இந்தியாவும் சீனாவும் கட்டமைப்பு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றன. சீனாவின் பிரச்சினைகளில் அதிக முதலீடு மற்றும் உற்பத்தி, குறைந்த வீட்டுச் செலவு, அதிக சேமிப்பு, வயதான மக்கள் தொகை மற்றும் அதிக கடன் ஆகியவை அடங்கும். இந்தியாவின் பிரச்சினைகளில் பலவீனமான முதலீட்டு வளர்ச்சி, அதிக மூலதனத்தைப் பயன்படுத்தும். ஆனால், குறைவான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்கள், குறைந்த பண்ணை அல்லாத வேலைகளைக் கொண்ட வளர்ந்து வரும் பணியாளர்கள், குறைந்த வீட்டுச் சேமிப்பு, அதிக முறைசாரா தன்மை மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் ஆகியவை அடங்கும்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வது எளிதல்ல. சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளும் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதைக் குறைத்துள்ளன. வலுவான சீர்திருத்தங்கள் இல்லாமல், சீனா இன்னும் கடனால் இயக்கப்படும் அதன் முதலீடு மற்றும் ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சி மாதிரியைப் பின்பற்றுகிறது. ஆனால், உலகம் அதன் கூடுதல் உற்பத்தியை உள்வாங்க முடியாததால் இது போராடி வருகிறது. பலவீனமான உற்பத்தி மற்றும் முதலீட்டை எதிர்கொள்ளும் இந்தியா, கடன் மற்றும் வரி சலுகைகளால் ஆதரிக்கப்படும் உள்நாட்டு நுகர்வைத் தொடர்ந்து சார்ந்துள்ளது.
தேவையான கொள்கை மாற்றங்களை வடிவமைக்க முடியுமா அல்லது பாதை சார்பு விதிகள் முன்னேற்றத்தை கடினமாக்குமா என்பதுதான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.