நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Parliamentary Committee) 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 130-வது சட்டத்திருத்த மசோதாவின், உருவாக்கத்தை கவனமாக மறுபரிசீலனை (recalibrate) செய்ய வேண்டும்.
அரசியல் வர்க்கத்தில் தார்மீக ஒருமைப்பாடு (moral integrity) என்பது இந்தியா தொடர்ந்து போராடி வரும் ஒரு முரண்பாடாகும். ஒரு புறம், இந்திய வாக்காளர்கள் நேர்மையான அரசியல்வாதிகளை விரும்புகிறார்கள். மறுபுறம், பல அரசியல்வாதிகள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 130-வது சட்டத்திருத்தம் மசோதா, ஒரு நிபந்தனையை வழங்குவதன் மூலம் இந்த வெற்றிடத்தை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின் கீழ், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களில் தொடர்ச்சியாக 30 நாட்கள் காவலில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சராகளாக இருந்தாலும் அவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் அல்லது தானாகவே பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
முதல் பார்வையில், இந்த நடவடிக்கை தூய்மையான அரசியலை செயல்படுத்துவதற்கான ஒரு உறுதியான முயற்சியாக தோன்றுகிறது. காவலில் உள்ள ஊழல் செய்த தலைவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் ஆட்சியில் நீடிப்பதால் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், அதன் வாக்குறுதியின் பின்னணியில் அரசியல் ஆபத்துகளும் அரசியலமைப்புச் சிக்கல்களும் உள்ளன.
இந்த மசோதாவிற்கான அடித்தளம் அரசியலமைப்பின் 75, 164 மற்றும் 239AA போன்ற பிரிவுகளின் கீழ் இடம் பெற்றுள்ளது. அவை முறையே ஒன்றிய, மாநில மற்றும் டெல்லியில் அமைச்சர்களின் நியமனம் மற்றும் பதவிக்காலம் தொடர்புடையது. அரசியலமைப்பின் 75(1), 164(1) மற்றும் 239AA(5) பிரிவுகள் அமைச்சர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரின் (அல்லது ஆளுநரின்) விருப்பத்தின் பேரில் பதவி வகிக்க வேண்டும் என்று கூறுகின்றன. ‘விருப்பம்’ (pleasure) என்பது அரசியலமைப்பின் மதிப்புகளைப் பின்பற்றி நியாயமான மற்றும் சட்டபூர்வமான வழியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களால் விளக்கப்பட்டுள்ளது. ஷம்ஷேர் சிங் vs பஞ்சாப் மாநிலம் மற்றும் நபம் ரெபியா vs துணை சபாநாயகர் போன்ற வழக்குகளில் இது தெளிவுபடுத்தப்பட்டது.
நீதித்துறை தீர்ப்புகள் (Judicial pronouncements)
உச்சநீதிமன்றம், S.R. பொம்மை vs இந்திய ஒன்றியம் வழக்கில், அரசியலமைப்பு தார்மீகத்தை (constitutional morality) வழிகாட்டும் கொள்கையாகக் குறிப்பிட்டது. இதனால் ஜனநாயக நிறுவனங்கள் நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் மூலம் வளர்க்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. பின்னர், மனோஜ் நருலா vs இந்திய ஒன்றியம் வழக்கில், அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதன் தார்மீக பக்கத்தைப் பற்றி நீதிமன்றம் பேசியது. கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு அரசாங்க அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்று எச்சரித்தது. தானாகவே பதவி நீக்கம் செய்வதை நீதிமன்றம் நிறுத்திய போதிலும், அறநெறி அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் பகுதியாக இருப்பதை நீதிமன்றம் தெளிவாகக் குறிக்கிறது. இந்த மசோதா இந்த நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நீதிமன்றங்கள் ஏற்கனவே தார்மீகத் தேவை என்று கூறியதை சட்டமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால், இந்த மசோதாவின் நோக்கமே தலையாயப் பிரச்சினையாக (Achilles’ heel) இருக்கலாம். மிகவும் வெளிப்படையான பிரச்சினை, குற்றமற்றவர் என்ற அனுமானக் கொள்கையைப் பற்றியது. இது பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாகும். தண்டனை அல்லது குற்றச்சாட்டுகள் இல்லாமல், கைது மற்றும் தடுப்புக்காவலை நீக்குவதற்கான காரணங்களுடன் சமன் செய்வது, அடிப்படை அரசியலமைப்பின் மதிப்பை குறைப்பதற்கு சமமானதாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3) சில குற்றங்களில் தண்டனை பெற்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி குறிப்பிடுகிறது. லில்லி தாமஸ் vs இந்திய ஒன்றியம் வழக்கில், உச்ச நீதிமன்றம், ஒரு சட்டமன்ற உறுப்பினர், தண்டனை (conviction) பெற்றால் மட்டுமே, உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தீர்ப்பளித்தது. மேல்முறையீடு (appeal) செய்து சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கான மூன்றுமாத கால அவகாசமும் ரத்து செய்யப்பட்டது. இதனால், மசோதா வருவதற்கு முன்பே கடுமையான பொறுப்புக்கூறலுக்கான (accountability) ஆதரவை நீதித்துறை வழங்கியது. இங்கு, ஒருவர் கைது செய்யப்படும்போது அல்லது தடுப்பு காவலில் வைக்கப்படும்போது தகுதியிழப்பு (disqualification) செய்யப்படுவதில்லை. மாறாக, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரே தகுதி நீக்க நடவடிக்கை தொடங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினை, அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது பிரிவில் 5க்குப் பிறகு 5A பிரிவு, 164வது பிரிவில் 4க்குப் பிறகு 4A பிரிவு, மற்றும் 239AA பிரிவில் 5க்குப் பிறகு 5A பிரிவு ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் மசோதாவின் நிர்வாக விருப்பத்திற்கு உட்பட்ட தன்மையால் மேலும் சிக்கலாகிறது. பிரதமர் அல்லது முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் நீக்கப்படலாம், ஆனால் அத்தகைய ஆலோசனை தவிர்க்கப்பட்டால் தானியங்கி நீக்கம் நடைமுறைக்கு வரும். இந்த இரட்டை முறைமை செயல்முறையை அரசியலாக்குகிறது: ஒரு பிரதமர் தனது நண்பர்களை 30 நாட்களுக்கு பாதுகாக்கலாம், அதே சமயம் எதிர்மறையான முதலமைச்சர் தனது போட்டியாளர்களை தானியங்கி விதியின் மூலம் வீழ்த்த அனுமதிக்கலாம். ஆட்சியை கட்சி அரசியலில் இருந்து பாதுகாப்பதற்கு பதிலாக, இந்த மசோதா பொறுப்புக்கூறலை அரசியல் கணக்கீடுகளின் மாறும் மணலில் புதைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
அணுகுமுறையில் ஒழுங்கின்மை
சட்டமியற்றுபவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடு உள்ள சீரற்றத் தன்மை விவகாரங்களை மேலும் சிக்கலாக்குகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) கீழ் தண்டனை பெற்றால் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கு மாறாக, இந்த மசோதாவின் கீழ் அமைச்சர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டால்கூட ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இது ஒரு முரண்பாடான நிலையை உருவாக்குகிறது. இதில் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒரு சட்டமியற்றுபவர் தொழில்நுட்பரீதியாக சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும்வரை அமைச்சராகத் தொடரலாம். அதே, நேரத்தில் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார். இந்த சமச்சீரற்றத்தன்மை (asymmetry) நிர்வாகப் பதவிக்கான தரத்தை உயர்த்துவதாகத் தோன்றலாம். ஆனால் அரசியலமைப்பின்கீழ், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நடத்தப்படும் விதத்தில் நியாயமற்ற தன்மையையும் உருவாக்குகிறது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களைவிட கடுமையான தண்டனையை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதால், திறமையான நபர்கள் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் அபாயம் உள்ளது.
"சுழலும் கதவு (revolving door)" என்ற பிரச்சினையும் உள்ளது. இந்த மசோதா, ஒரு அமைச்சர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் நியமனத்தை அனுமதிப்பதால், சட்ட நடவடிக்கைகளின் வேகத்தைப் பொறுத்து பதவி விலகல் மற்றும் மீண்டும் நியமனம் என்ற சுழற்சிகள் ஏற்படலாம். ஒரு முதலமைச்சர் கைது செய்யப்பட்டு 31 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்து, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உடனடியாக ஆளுநரால் மீண்டும் நியமிக்கப்படுவதை கற்பனை செய்யுங்கள். மாநிலம் பல வாரங்கள் அரசியல் நிச்சயமின்மையை சகித்திருக்கும், ஆனால் நெறிமுறை பொறுப்புணர்வில் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கும். இத்தகைய நிலையற்ற தன்மை ஆளுமையை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அரசியல் பங்கேற்பாளர்கள் சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நிர்வாக பதவிகளை கையாளுவதற்கு தந்திரோபாய சட்ட நகர்வுகளை ஊக்குவிக்கலாம்.
மிகவும் நுணுக்கமான மாதிரியின் தேவை
இவற்றில் எதுவும் சீர்திருத்தத்தின் அவசரத்தை மறுப்பதல்ல. அரசியலில் குற்றமயமாக்கல் (criminalisation) என்பது தெளிவாக ஒரு கடுமையான பிரச்சினையாகும். ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் விரிவான பகுப்பாய்வின்படி, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற 543 வேட்பாளர்களில் 251 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (46%) தங்களுக்கு எதிராக உள்ள குற்ற வழக்குகளை குறிப்பிட்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டில் 43%, 2014-ஆம் ஆண்டில் 34% மற்றும் 2009-ஆம் ஆண்டில் 30%-ஆக இருந்தது. இது 15 ஆண்டுகளில் 55% அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அதன் கடுமையான அணுகுமுறை நியாயம் மற்றும் அரசாங்க நிலைத்தன்மைக்கும் (stability of governance) தீங்கு விளைவிக்கும். மிகவும் கவனமான முறை ஜனநாயகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அதே வேளையில் தூய்மையான அரசியலைப் பாதுகாக்கும்.
ஒரு பாதை, நீக்கத்தை கைது செய்வதோடு அல்ல, மாறாக, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளை உருவாக்குவது போன்ற நீதித்துறை சாதனைகளுடன் இணைப்பதாகும். இது ஆரம்ப நீதிமன்ற சோதனையில் தேர்ச்சி பெறும் வழக்குகள் மட்டுமே ராஜினாமாவுக்கு வழிவகுக்கும். போலியான அல்லது அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட கைதுகளை வடிகட்டுவதை உறுதிசெய்யும். மற்றொரு பாதுகாப்பு நடவடிக்கையாக, நீக்கத்திற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய, ஒரு தீர்ப்பாயம் அல்லது நீதித்துறை குழு போன்ற ஒரு தன்னிச்சையான மறுஆய்வு பொறிமுறையை நிறுவுவது இருக்கலாம். இது நிர்வாகத்தின் அத்துமீறலைத் தடுக்கும் மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கையை உறுதிசெய்யும். இதேபோல், முற்றிலுமாக பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது அமைச்சர்களின் செயல்பாடுகளை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதற்கு சட்டத்தால் வழிவகுக்க முடியும். இது பொறுப்புக்கூறலில் சமரசம் செய்யாமல் ஆட்சியைத் தொடர அனுமதிக்கிறது. முக்கியமாக, இந்த மசோதா, ஒப்பீட்டளவில் சிறிய குற்றச் செயல்களை உள்ளடக்கிய ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய எந்தவொரு குற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஒழுக்கக் கேடு (turpitude) மற்றும் ஊழல் (corruption) சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அதன் நோக்கத்தைச் செம்மைப்படுத்த வேண்டும்.
சுருக்கமாக, 2025ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 130-வது சட்டத்திருத்த மசோதா, ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான ஒரு வலிமையான நிலைப்பாடாக குடிமக்கள் வரவேற்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க நெறிமுறை நிலைப்பாட்டை முன்வைக்கிறது. ஆனால், அது எழுதப்பட்ட விதம் நியாயமான நீதியைப் பாதுகாப்பதற்கும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அவசரத் தேவைக்கும் இடையிலான மோதலைப் புறக்கணிக்கிறது. மசோதாவை முறையான நடைமுறைகள் மற்றும் சரிபார்ப்புகளைச் சேர்க்க நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Parliamentary Committee (JPC)) மசோதாவை மறுபரிசீலனை என்றால், அது அரசியலமைப்பு பாதுகாப்புகளை அரசியல் விலக்குக்கான கருவிகளாக மாற்றி, இந்தியாவின் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நீண்டகாலத்திற்கு, நேர்மை இல்லாத அதிகாரம் ஜனநாயகத்தைப் பாதிக்கும். மேலும், நியாயம் இல்லாத நேர்மை அதற்கு ஆபத்தை விளைவிக்கும்.
சமயேதா பால் ஒரு வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முன்னாள் சட்டமன்ற உதவியாளர் (Legislative Assistants to Members of Parliament (LAMP)) (2024-25) மற்றும் தற்போது நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் கொள்கை ஆராய்ச்சியாளராக உள்ளார்.