மக்கள்தொகை இயக்கவியலை மாற்றுவதற்கு அரசாங்கங்களுக்கு கொள்கை மாற்றம் தேவைப்படுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகை மாறிக்கொண்டே இருக்கிறது என்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், சமீபத்திய மாதிரி பதிவு முறை (Sample Registration System (SRS)) அறிக்கை அதை உறுதிப்படுத்துகிறது - பிறப்பு எண்ணிக்கையிலும் ஒரு பெண்ணுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையிலும் சரிவைக் காட்டுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான மாதிரி பதிவு முறை தரவுகளின் படி, இந்தியாவின் பிறப்பு விகிதம் (Crude Birth Rate (CBR)) 1,000 பேருக்கு 18.4 ஆகக் குறைந்துள்ளது. இது 2022ஆம் ஆண்டில் 19.1 ஆக இருந்தது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 2.0 ஆக இருந்த நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) 1.9 ஆகக் குறைந்துள்ளது.
அந்தத் தலைமுறையை மாற்றுவதற்கு ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை மொத்த கருவுறுதல் விகிதம் குறிக்கிறது. மேலும் ஒரு பெண்ணுக்கு 2.1 பிறப்புகள் என்ற மொத்த கருவுறுதல் விகிதம் மாற்று-நிலை கருவுறுதலாகக் (replacement-level fertility) கருதப்படுகிறது. இது காலப்போக்கில் நிலையான மக்கள்தொகையாக மாறும். 2.1-க்கு மேல் உள்ள எந்த எண்ணிக்கையும் மக்கள்தொகை அதிகரிப்பைக் குறிக்கிறது.
அதே நேரத்தில் 2.1-க்குக் கீழே உள்ள விகிதங்கள் மக்கள்தொகை சரிவு மற்றும் வயதானதை நோக்கிய தெளிவான போக்கைக் குறிக்கின்றன. எதிர்பார்த்தபடி, இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பிராந்தியங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பீகாரில் பிறப்பு விகிதம் 25.8 ஆகவும், தமிழ்நாட்டில் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் 12 ஆகவும் இருந்தது. பீகாரிலும் அதிகபட்ச மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) 2.8-ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியில் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம் 1.2-ஆக பதிவாகியுள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாற்று நிலைக்குக் கீழே மொத்த கருவுறுதல் விகிதம் இருந்தது. மேலும், மாற்று நிலைக்கு மேல் மொத்த கருவுறுதல் விகிதம் இருப்பதாகக் கூறும் அனைத்து மாநிலங்களும் வட இந்தியாவில் உள்ளன. அவை பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் ஆகும். டெல்லியைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிலும் மொத்த கருவுறுதல் விகிதம் 2.0-க்கும் குறைவாக உள்ளது.
அதே நேரத்தில், அத்தகைய மக்கள்தொகை மாற்றத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்டபடி, மாதிரி பதிவு முறை (Sample Registration System (SRS)) தரவு 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் விகிதம் ஒரு வருடத்தில் 0.7 சதவீத புள்ளிகள் அதிகரித்து மக்கள்தொகையில் 9.7% உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. கேரளாவில் முதியோர் மக்கள் தொகையில் அதிகபட்ச விகிதம் 15% ஆகவும், அசாம், டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகை மிகக் குறைந்த விகிதமாகவும் உள்ளன.
தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது தவறான முன்னுதாரணாமாக இருக்கும். அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், 1.46 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டதாகவும் இருப்பதால், தற்போதைய சரியும் போக்கு மக்கள்தொகையில் தாக்கத்தை ஏற்படுத்த பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், குறைந்தபட்சம் கோட்பாட்டளவில், இத்தனை ஆண்டுகளாக 'இன்னும்' தயாராக இருந்த நாடு, இப்போது எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் இளம் பணியாளர்கள் இருப்பதால் அது இன்னும் கொண்டிருக்கும் மக்கள்தொகைபலனைப் (demographic dividend) பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வயதான நாடு - பணம், எளிதில் இடம்பெயர முடியாத மக்களுக்கு சிறந்த அணுகல், உடல் மற்றும் மனதிற்கு சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக ஆதரவு போன்ற புதிய சவால்களையும் தேவைகளையும் எதிர்கொள்ளும். அனைத்திற்கும் மேலாக, ஒரு 'இளம்' நாடு, வளர்ந்து வரும் முதியோர் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்க ஒரு பெரிய மறுசீரமைப்பு தேவைப்படும்.