8-வது ஊதியக் குழுவின் பணி வரையறைகள் அங்கீகரிக்கப்பட்டன: இதன் பொருள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து… -ஆஞ்சல் மேகசைன்

 ‘8-வது ஊதியக் குழு 2025 விதிமுறைகள், தாக்கம் | பழைய ஓய்வூதியத் திட்டம் எதிர். புதிய ஓய்வூதியத் திட்டம்’ : 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏப்ரல் 2027-ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது இந்த ஊதியக்குழு பற்று கீழே குறிப்பிட்டுள்ளன. அவை,


8-வது ஊதியக் குழு 2025 : இந்த ஆண்டு ஜனவரியில் 8-வது ஒன்றிய ஊதியக் குழு (8th Central Pay Commission) அமைக்கப்பட்டதாக அறிவித்தபிறகு, செவ்வாய்க்கிழமை அக்டோபர் 28 அன்று அரசாங்கம் 8-வது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை (terms of reference (ToR)) அங்கீகரித்தது. இது கிட்டத்தட்ட 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் (pension), ஊதியம் (pay) மற்றும் சலுகைகளை (allowances) திருத்துவதற்கான வழியை தெளிவுபடுத்துகிறது. திருத்தப்பட்ட சலுகைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.


8-வது ஒன்றிய ஊதியக் குழுவிற்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவருமான நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார். மேலும் நீதிபதி தேசாய் தவிர, இந்தக் குழுவில் IIM பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் (பகுதி நேர) உறுப்பினராகவும் , பெட்ரோலிய செயலாளர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர்-செயலாளராகவும் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் ஊதியக் குழுவின் (Pay Commission) பங்கு


ஒன்றிய அரசால் அதன் ஊழியர்களின் ஊதிய முறையை திருத்தம் மேற்கொண்டு ஓய்வூதிய தொடர்பான சலுகைகளை தீர்மானிக்க தோராயமாக ஒவ்வொரு பத்தாண்டுகாலத்திற்கும் ஒரு ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. 1947 முதல், ஏழு ஊதியக்குழு நிறுவப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரியில் 8-வது ஒன்றிய ஊதியக்குழுவை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்தது.


பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனை இயக்க ஊழியர்கள் தரப்புடன் கலந்தாலோசித்த பிறகு, பணிக்கால விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழு 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.


பணி நியமனத்தின் படி


பணி வரையறைகளின்படி (terms of reference (ToR)), 8-வது ஊதியக் குழு நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டின் தேவை, மேம்பாட்டு செலவுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


மாநிலங்கள் பெரும்பாலும் இந்த பரிந்துரைகளை சில மாற்றங்களுடன் பின்பற்றுவதால், அதன் பரிந்துரைகள் மாநில அரசுகளின் நிதியை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை குழு ஆய்வு செய்யும். ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள ஊழியர்களின் தற்போதைய ஊதிய முறை, சலுகைகள் மற்றும் பணி நிலைமைகளையும் இந்தக் குழு மதிப்பாய்வு செய்யும்.


இந்த பரிந்துரை விதிமுறைகள், 7-வது ஊதியக் குழுவின் விதிமுறைகளைப் போலவே இருந்தாலும், பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியில்லாத செலவைக் கருத்தில் கொண்டு இந்த முறை ஒரு கூடுதல் கால அவகாசம் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme (OPS)) மீட்டெடுப்பதற்கான தொடர்ச்சியான கோரிக்கைகளின் பின்னணியில் இது குறிப்பிடத்தக்க நிலையைக் கொண்டுள்ளது. இதில் நிதியில்லாத, பங்களிப்பு இல்லாத திட்டத்தின்கீழ் ஜனவரி 1, 2004-க்கு முன்பு பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு வரையறுக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவார்கள். அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.


ஜனவரி 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களை உள்ளடக்கிய தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension System (NPS)) கீழ், பங்களிப்புகள் வரையறுக்கப்படுகின்றன. ஆனால், சலுகைகள் சந்தை நிலையைப் பொறுத்து அமைகிறது. கடந்த ஆண்டு, அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (new pension plan) அறிமுகப்படுத்தியது. இது வரையறுக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் முழு ஓய்வூதியத்திற்குத் தேவையான சேவையை முடிக்காத ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குகிறது. தகுதிவாய்ந்த 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ், நிறுவனம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஊதியத்தையும், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்குப் பிறகு "முழு உறுதி செய்யப்பட்ட ஊதியத்தையும்" (full assured payout) வழங்குகிறது.


காலக்கெடு


8-வது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏப்ரல் 2027-ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும், அதாவது அந்த தேதியிலிருந்து ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் அந்த தேதியிலிருந்து பழையமுறை செயல்படுத்தப்படும். இதில் உள்ள பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது நிலுவைத் தொகைகள் வழங்கப்படும். இருப்பினும், சலுகைகள் எதிர்காலத்தில் திருத்தப்படும்.


குழுவின் பரிந்துரைகள் உரிய தேதிக்குப் பிறகு நடைமுறைக்கு வர சிறிது காலம் எடுக்கும். உதாரணமாக, 5-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும்போது 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2016-ல், உரிய தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட்டன.


நிதியின் தாக்கங்கள்


ஊழியர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தின் வருவாய் செலவினத்தில் பெரும் பங்கு வகிப்பதால், ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அரசாங்கத்தின் நிதிக் கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2025-26-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளுக்கான செலவு ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வருவாய் செலவினத்தில் சுமார் 18 சதவீதமாகும்.


முந்தைய 7-வது ஒன்றிய ஊதியக் குழுவின் ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியத்தில் 23.55 சதவீத அதிகரிப்பை பரிந்துரைத்தது. இது ஒன்றிய அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் வருடாந்திர செலவு ஏற்பட்டது.


ஊதிய பட்டைகள் மற்றும் தர ஊதிய முறை, பொதுமக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் இராணுவ செவிலியர் சேவைக்கு தனித்தனி ஊதிய தொகுப்பாக ஊதிய அட்டவணையால் மாற்றப்பட்டது. கீழ்மட்டத்தில் புதிதாக சேரும் ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.7,000-லிருந்து 18,000-ஆக உயர்த்தப்பட்டது, அதேநேரம் புதிதாக சேரும் வகுப்பு I அதிகாரிக்கு ரூ.56,100 ஆக நிர்ணயிக்கப்பட்டது.  கடைசி ஊதிய உயர்வு அளவின்படி, 8-வது ஒன்றிய ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் ரூ.46,000-க்கும் அதிகமாக உயரக்கூடும்.



Original article:

Share: