சாத்தியக்கூறுகள் மற்றும் நியாயத்தன்மை போன்றவைகளை முக்கியக் காரணிகளாக கருத்தில் கொண்டு, மாநிலங்களின் முன்மொழிவை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்.
ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கர், சிக்கிம், லட்சத்தீவு, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் மதிய உணவுத் திட்டமான பிரதம மந்திரி போஷன் நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-Poshan)) திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் வகையில் விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவு சரியான நேரத்தில் வந்துள்ளது மற்றும் இது பாராட்டத்தக்க முன்மொழிவாகும். கல்வி அமைச்சகத்தின் இதே போன்ற முன்மொழிவு 2021-22-ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கட்சி எல்லைகளைக் கடந்து மாநில அரசுகளால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வது, தேசிய கொள்கையை ஊட்டச்சத்து மற்றும் கல்வி உண்மைகளுடன் வரவேற்கத்தக்க வகையில் இணைப்பதையும், கற்றல் என்பது முதல் பாடத்துடன் தொடங்குவதில்லை. ஆனால், அன்றைய நாள் முதலில் உணவில் இருந்து தொடங்குகிறது என்பதை அங்கீகரிப்பதைக் குறிக்கும்.
காலை உணவுத் திட்டத்தின் கல்வி மற்றும் சுகாதார நன்மைகள் நன்கு அறியப்பட்டவை. 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (National Education Policy), "ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவுக்குப் பிறகு காலை நேரங்கள் அறிவுத்திறன் சார்ந்த கடினமான பாடங்களைப் பயில்வதற்கு குறிப்பாக படைப்புத்திறன் நிறைந்தவையாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது. காலை உணவு ஊட்டச்சத்தின் தன்மையை அதிகரிப்பதோடு, வகுப்பறைகளில் வருகை, கவனம் மற்றும் சமத்துவத்தை உயர்த்துகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறது. காலை உணவு திட்டம் (breakfast programme) தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இப்போது, இந்த திட்டம் 24 லட்சம் மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. திட்டத்தின் முக்கியத்துவம் எளிமையாக புரிந்துகொள்ளப்பட்டது: ஊட்டச்சத்து பெற்ற குழந்தைகள் சிறப்பாகக் கல்வி கற்றுக்கொள்கிறார்கள். ஏழு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைத் தவிர, கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மேகாலயா உள்ளிட்ட 11 மாநிலங்கள், இந்தத் திட்டத்தை 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும் காலை உணவை அறிமுகப்படுத்துவதற்கான கூடுதல் செலவு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று ஒன்றிய அரசு மதிப்பிட்டாலும், செலவைவிட திட்டத்தில் அதிக நன்மைகள் உள்ளன. குறிப்பாக, மாற்றுக் கல்வி, சுகாதாரம் மற்றும் இழந்த உற்பத்தித்திறன் ஆகியவற்றின் கீழ்நிலை சுமைகளுடன் ஒப்பிடும்போது திட்டத்தின் நன்மைகள் தெளிவாக தெரிகின்றன.
காலை உணவு முயற்சியை ஒரு உணவைவிட அதிகமாகக் கருதுவது தேசிய அளவில் வெற்றி பெறுவதற்கு முக்கியமானது. இந்த முயற்சி கல்வி, சுகாதாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முதலீடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். PM POSHAN திட்டத்தின்கீழ் காலை உணவுத் திட்டத்தை ஆதரிக்கும் மாநிலங்கள், இது ஒரு கூடுதல் அம்சம் மட்டுமல்ல, அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதில் ஒரு முக்கியப் பகுதியாகும் என்று கூறுகின்றன. இது சிறப்பாக செயல்பட, சமையலறை வசதிகள், உணவு வழங்கல், தூய்மை, சரியான ஊட்டச்சத்து, அனைவர்க்கும் தேவையான உணவு, வலுவான கண்காணிப்பு மற்றும் செயலில் சமூக ஈடுபாடு போன்ற விவகாரங்களை அரசாங்கம் கவனமாகத் திட்டமிட வேண்டும். மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் ஏற்கனவே உணரும் அழுத்தத்தைக் குறைப்பதும் மிகவும் முக்கியமானது. குறைந்த ஊதியம் மற்றும் அதிக பணிச்சுமையை எதிர்த்து அங்கன்வாடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்கள் ((Accredited Social Health Activists (ASHA)) பலமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகமான பணியாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் கூடுதல் நிதி இல்லாமல் காலை அடுக்கைச் சேர்ப்பது, பணியாளர்களுக்கு வேலையை கடினமாக்கும். இந்தத் திட்டம் விரிவடையும்பட்சத்தில், முன்னணிப் பணியாளர்களுக்கு தேவையான ஆதரவு கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே, மாநிலங்களின் முன்மொழிவை வரவேற்பது, நியாயத்தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளுக்கான உறுதிப்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும்.