பாலியல் வன்முறை குற்றங்கள் (sexual violence) முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.
சில நேரங்களில், மிகப் பெரிய வெற்றிகள் மிகக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கின்றன. வன்முறை, காயம், பாலியல் வன்கொடுமை, அச்சம் அல்லது தொந்தரவு ஏற்படுத்துவது போன்றன குற்றச் செயல்கள் என்பதை “வலுக்கட்டாயப்படுத்தல் குற்றம்” (force is the crime) என்று நிறுவுவதற்கே பிரான்ஸ் நாட்டிற்குப் பல ஆண்டுகள் ஆனது. இதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் அசாத்திய துணிச்சலும், அவருக்குத் துணை நின்ற மற்ற பெண்களின் ஒற்றுமையும் இருந்தது. விருப்பமில்லாத எந்தவொரு பாலியல் செயலும் பாலியல் வன்முறையே என வரையறுக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடானது சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றியுள்ளது. இது பிரான்ஸ் நாட்டுப் பெண்களுக்கு முக்கியமான வெற்றி என்பதையும் கடந்து பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
பாலியல் வன்முறைக் குற்றங்களைத் தடுப்பதிலும் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவும் சமூகத்தின் அவசர பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, கிசெல் பெலிகாட் (Gisèle Pelicot) என்ற பெண்மணி நீதிமன்றத்தில் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டார். கணவரால் அந்தப் பெண்ணிற்குப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, பல ஆண்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் 51 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்திய ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது. பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்கள், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு தேவையான நீதி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. பாலியல் வன்முறையில் பாதிக்கபட்டவர்களில் பலர் நீதிமன்றங்களில் நீதி கேட்கவும்கூட கடினமான பல சவால்களைக் கடந்து வருகின்றனர். இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களே பெரும் களங்கத்தையும் பழியையும் சுமக்கின்றனர்.
இந்தியாவில் பெண்களைக் குற்றம் சாட்டும் வகையில் வெளியிடப்பட்ட தலைவர்களின் பொது அறிக்கைகள் வலிமிகுந்த ஒன்றாக அமைகின்றன. ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டாலும் தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும் இது, பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவு 129 “குற்றவியல் பலாத்காரத்தை (criminal force)” அங்கீகரிக்கிறது என்றபோதிலும், தேசிய குற்றப் பதிவுத்துறை (National Crime Records Bureau (NCRB)) அளித்த தரவுகளின்படி, 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை விகிதங்கள் 27%-28% என்கிற அளவில் இருந்தன.
நீதித்துறை செயல்முறையின் முக்கிய அம்சமாக பாலியல் ரீதியிலான சுயவிருப்பத்தை நிறுவுவது என்பது முதல்படியாக இருந்தாலும், அது போதுமான நடவடிக்கையாக இருக்காது. பாலியல் வன்முறையைத் தடுப்பது என்பது பாலினப் பிரிவின் சமூகப் பொறுப்புகளைக் குறித்த கருத்துக்களைத் தெளிவாக வடிவமைப்பது, கடுமையான சட்டத்தால் ஆணாதிக்கத்தை அகற்றுவது, விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் காவல்துறையை இந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப வழிநடத்துவது போன்ற நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை சீராக்க உதவுவதற்கும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டு அவர்களின் நலன்சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் முக்கியமாகக் கொண்டுள்ளது.
முன்னோக்கிச் செல்லும் பாதை மிகக் கடினமானது. எனவே, அரசாங்கங்களின் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்றத் திறனுடனும், பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கும் உறுதிப்பாட்டுடனும் அவர்களின் வாழ்க்கைப் பயணம் எளிதாக்கப்பட வேண்டும். அதைவிடக் குறைவாக எதையும் செய்வது அநியாயமாக இருக்கும் மற்றும் பெலிகாட் தொடங்கிய வலிமையான பெண்கள் இயக்கத்தை நிறுத்திவிடும்.